பருவமழை தொடங்கியாச்சு. அதுவும் வடகிழக்கு பருவமழை என்பதால் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்பிருக்கிறது. சமூக வலைதளங்களில் மழை தொடர்பான அப்டேட்கள் என்றாலே தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் என்ன பதிவிட்டிருக்கிறார் எனப் பலரும் தேட ஆரம்பித்துவிடுவர். அந்த வகையில் இன்று இரவு பெய்யக்கூடிய மழை தொடர்பாக முக்கிய பதிவு ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அதில், இன்று இரவு தொடங்கி நாளை காலை வரை கடலோர மாவட்டங்களில் நல்ல மழை காத்திருக்கிறது. குறிப்பாக சென்னையும் ஹாட்ஸ்பாட்டில் சேர்ந்துள்ளது.
அரபிக்கடலை நோக்கி நகரும் மேலடுக்கு சுழற்சி
இலங்கை மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் அருகிலுள்ள மாவட்டங்களில் காற்றின் குவிதல் ஏற்பட்டு மழை பெய்யக்கூடும். இது நிலப்பகுதியை கடந்து கேரளா மாநிலம் வழியாக அரபிக்கடலை அடையும். அதன்பிறகு தென் தமிழக மாவட்டங்களில் நல்ல மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன எனக் குறிப்பிட்டுள்ளார்.
தெற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
இதுதவிர அரபிக்கடலில் ஏற்கனவே காற்றழுத்த தாழ்வு மண்டலம் காணப்படுகிறது. இது சோமாலியா – ஏமன் பகுதிகளை நோக்கி நகர்ந்து செல்லும். மேலும் தெற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி வருகிறது. இது படிப்படியாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.
தமிழ்நாடு வெதர்மேன் KTCC மழை அப்டேட்
இந்த சூழலில் தமிழ்நாடு வெதர்மேன் பகிர்ந்துள்ள தகவலின்படி, KTCC எனப்படும் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று முதல் மீண்டும் மழை தொடங்குகிறது. திடீரென மழை பெய்யும். பகல் நேரங்களில் குறுகிய இடைவெளியில் மிக கனமழை கொட்டி தீர்க்கும். இடையே சூரியன் எட்டி பார்த்து வெப்பமயமான சூழலை உருவாக்கும். இன்று மாலை முதல் இரவு வரை மழையின் தீவிரம் படிப்படியாக அதிகரிக்கும். அதன்பிறகு நாளை காலை வரை மழை தொடரும்.
அக்டோபர் 20 – எந்தெந்த பகுதிகளுக்கு மழை கிடைக்கும்?
டெல்டா, புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் கடலோர பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ராமநாதபுரம் கடலோர பகுதிகள், புதுக்கோட்டை கடலோர பகுதிகளில் இன்று இரவு முதல் நாளை காலை வரை ஹாட்ஸ்பாட் சம்பவம் காத்திருக்கிறது. அதாவது, நல்ல மழை பெய்யும்.
டெல்டாவில் எஞ்சிய மாவட்டங்களான தஞ்சை, பெரம்பலூர், அரியலூர், கடலூர் மாவட்ட உட்பகுதிகள் மற்றும் திருவண்ணாமலை, மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, தென்காசி, தேனி, விருதுநகர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
