1990ல் அமைக்கப்பட்ட வாழவந்தான் கோட்டை அகதிகள் முகாமில் தற்போது சுமார் 425 குடும்பங்கள் உள்ளனர். தனிநபர் கணக்கில் சுமார் 1800 பேர் வசித்து வருகின்றனர். பள்ளி மற்றும் கல்லூரி செல்பவர்கள் சுமார் 500 பேர் என சுமார் 30 சதவீதத்திற்கு மேல் இளைஞர்களும், மாணவர்களும், குழந்தைகளும் இருக்கிறார்கள். ஒரு குடும்பத்திற்கு பத்துக்குப் பத்து அளவுள்ள அறை தான். தோட்ட குடியிருப்புகளைவிட மோசமாக உள்ளது. பொதுக் கழிப்பறை, பொது தண்ணீர்க் குழாயையே பயன்படுத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளும்
தமிழ்நாடு அரசின்அனைத்து நலத்திட்ட உதவிகளும் இலங்கை அகதிகள் முகாம்களில் வசிப்பவர்களுக்கு கிடைக்கிறது. அவர்களின் குழந்தைகளுக்காக அங்கன்வாடி உள்ளது. ஒரு குடும்ப அட்டை தமிழ்நாடு அரசால் கொடுக்கப்பட்டுள்ளது. சிறிய அளவிலான உதவித் தொகையும் ரேசன் பொருட்களும் வழங்கப்படுகிறது.
ஆதார், வருமானவரி அட்டை என்பன பெறலாம். வங்கிக் கணக்குத் தொடங்கலாம். மகளிர் சுய உதவிக் குழு மூலம் இங்கு வசிக்கும் பெண்கள் கடனுதவி பெறுகின்றனர். மேலும் தங்களது வருவாய்க்காக சுற்றுவட்டாரங்களில் வேலைக்கு சென்று வருகின்றனர்.
கண்காணிக்க 15 நாளுக்கு ஒரு முறை அணிவகுப்பு
பதினைந்து நாளுக்கு ஒரு முறை அணிவகுப்பு நடத்தி, அகதிகள் முகாம்களில் வசிப்பவர்களை தமிழ்நாடு அரசின் வருவாய்த் துறையினர் உறுதி செய்கிறார்கள். மூன்று மாதங்கள் முகாமில் இல்லை என்றால் முகாம் பதிவிலிருந்து நீக்கி விடுகிறார்கள். மீண்டும் விண்ணப்பித்துப் பதிவு பெற வேண்டும் என்பதே விதிமுறை.
இலங்கைக் கடவுச்சீட்டுப் பெற முகாம் அலுவலரிடம் சான்றிதழ் பெற வேண்டும். மேலும் இவர்கள் அரசு வேலைக்குப் போக முடியாது. தேர்தல்களில் வாக்களிக்க முடியாது. நிலம் வாங்க முடியாது. வீடு கட்ட முடியாது. தங்கள் விருப்பம் போல் நீண்டகாலம் முகாமுக்கு வெளியே சென்று தங்க முடியாது என்ற கட்டுப்பாடுகள் நீள்கிறது. வேலை அல்லது கல்வி தொடர்பாக இலங்கை அகதிகள் வெளியே சென்று தங்க வேண்டுமானால் அரசு அலுவலரிடம் அனுமதி பெற வேண்டும். அதுவும் இலகுவில் அனுமதி கிடைக்காது.
தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு அழைத்துசெல்லப்பட்டவர்கள்
வாழவந்தான் கோட்டை முகாமில் இருப்பவர்களில் பாதிப்பேர் இந்த முகாமில் அதாவது இந்தியாவில் பிறந்தவர்கள். இந்தியாவில் பிறந்து 35 ஆண்டுகள் வாழ்ந்தவர்களும் அகதிகளே . முகாமில் இருப்பவர்களில் 80 சதவீதம் பேர் இந்திய வம்சாவளியினர். இவர்களின் மூதாதையர் நூறு நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டிலிருந்து கங்காணிகள் எனும் இடைத் தரகர்களால் இலங்கைக்கு ஆங்கிலேயர்களால் கொண்டு செல்லப்பட்டவர்கள் என்று கூறுகின்றனர்.
போர் மற்றும் இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்டுத் தங்கள் சொந்தத் தாய் நாட்டுக்கு திரும்பினோம் என்றும், இப்போது தங்கள் சொந்தத் தாய் மண்ணில் குடியுரிமை இல்லாமல் நாடற்றவர்களாய் அகதி முகாம்களில் வைக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
இலங்கையின் தொண்டு நிறுவனத்தால் குடியுரிமை பெறுவதில் சிக்கல்
இலங்கையில் தந்தை செல்வா என்று போற்றப்படும் செல்வநாயகம் அவர்களின் மகன் சந்திரஹாசன் என்பவர் ஒபர்( ober Family Foundation ) என்ற தொண்டு நிறுவனத்தை அகதி முகாம்களில் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் இவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கத் தடையாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இது குறித்து உரிய அரசுத் துறைகள் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அகதிகள் முகாமில் வசிப்பவர்களின் கோரிக்கையாக உள்ளது.
வாழவந்தான் கோட்டை அகதிகள் முகாம்களில் பிறந்து தமிழ்நாட்டில் வசிப்பவர்களுக்கு இந்தியக் குடியுரிமை கொடுக்க வேண்டும் என்றும், இந்திய வம்சாவளியினருக்கு இந்தியக் குடியுரிமை கொடுக்க மறுப்பது எவ்வகையில் நியாயம் என்று இங்கு வசிக்கும் மக்கள் வேதனையுடன் வினவுகின்றனர்.
அரை நூற்றாண்டு காலம் நாடற்றவர்களாக உள்ளவர்களின் நிலை குறித்து, ஐக்கிய நாடுகள் சபையும், உலக மனித உரிமை ஆணையமும் தலையிட வேண்டும் என்றும், உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா இதற்கு உடனடித் தீர்வு காண வேண்டும் என்பதே தமிழர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
