சவுக்கு சங்கர் மற்றும் பெலிக்ஸ் ஜெரால்டு இடையேயான திடீர் மோதல், தவெக விஜய் விமர்சனம் மற்றும் எட்வின் – ஆரோக்கியசாமி சர்ச்சையின் முழு பின்னணித் தொகுப்பு.
தமிழக யூடியூப் மற்றும் அரசியல் விமர்சகர்கள் வட்டாரத்தில் பல வருடங்களாகத் தங்களின் அதிரடிப் பேட்டிகளால் ட்ரெண்டானவர்கள் சவுக்கு சங்கர் மற்றும் ‘ரெட் பிக்ஸ்’ பெலிக்ஸ் ஜெரால்டு. ஒரு காலத்தில் நகமும் சதையுமாக, ஒரே நேர்கோட்டில் பயணித்த இந்த இருவரும் தற்போது யூடியூப் காணொலிகளில் முட்டிக்கொள்கின்றனர்.
தவெக மற்றும் விஜய் விமர்சனம்: மோதலின் தொடக்கப்புள்ளி
நெருங்கிய நண்பர்களாக இருந்த இவர்களுக்குள் பெரிய விரிசல் விழக் காரணமே தளபதி விஜய்யின் தவெக கட்சி தான். ஆரம்பத்தில் விஜய்யின் அரசியல் நகர்வுகளை உற்று நோக்கி ஆதரவாக பேசி வந்த சவுக்கு சங்கர், சமீபகாலமாகத் தவெக-வை மிகக் கடுமையாகத் தாக்கிப் பேசி வருகிறார்.
யார் இந்த பெலிக்ஸ்?
ஆரம்பத்தில் தவெகவுக்கு ஆதரவாக பேசி வந்த ஜெரால்டு பின்னர் தவெக கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்த பின்னர் அக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டார். தற்போது தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
ஆலோசகர் பதவி சர்ச்சை மற்றும் அதிருப்தி
சவுக்கு சங்கரின் இந்த தீவிர தவெக எதிர்ப்பு விமர்சனங்களுக்குப் பின்னால் ஒரு பதவி ஆசை ஒளிந்திருப்பதாகப் பெலிக்ஸ் ஜெரால்டு தரப்பில் பரபரப்பான குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. தவெக தொடங்கப்பட்ட ஆரம்பக் காலகட்டத்தில், அக்கட்சியின் முக்கிய அரசியல் ஆலோசகர் (Political Advisor) பதவியைப் பெற சவுக்கு சங்கர் ஆசைப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், விஜய் தரப்பிலிருந்து அவருக்கு எந்தவொரு முக்கியத்துவமோ அல்லது பொறுப்போ வழங்கப்படவில்லை. இந்த ஏமாற்றமே அவரை தவெக-வுக்கு எதிராகத் திருப்பியது என்பது பலரின் வாதமாக உள்ளது. மேலும், அவருடைய வீடியோக்களில் அரசை வழிநடத்துவது தொடர்பாக ஆலோசனைகளை எங்கள் போல் உள்ள பத்திரிக்கையாளர்களிடம் கேட்கலாம் என மறைமுகமாக அவர் தெரிவித்தும் இருந்தார்.
விஜய்யைச் சுற்றியுள்ள பவர் சென்டர்கள்
விஜய்யின் அரசியல் செயல்பாடுகளைத் தொடர்ந்து சாடி வரும் சவுக்கு சங்கர், தவெக கட்சியை விஜய் நேரடியாக இயக்கவில்லை; மாறாக அவரைச் சுற்றி சில பவர் சென்டர்கள் (Power Centers) இருப்பதாகக் கூறுகிறார். குறிப்பாக, விஜய்யைச் சுற்றியிருக்கும் எட்வின் மற்றும் அரசியல் வியூக வகுப்பாளரான ஜான் ஆரோக்கியசாமி ஆகிய இருவர் தான் கட்சியின் பின்னால் இருந்து அத்தனை நகர்வுகளையும் செய்கிறார்கள் என்றும், அவர்கள் விஜய்யைத் தங்களது முழுக் கட்டுப்பாட்டிலும் கண்காணிப்பிலும் வைத்துள்ளனர் என்றும் சவுக்கு சங்கர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் எட்வின் தொடர்பான வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இந்த விவகாரம் தான் தற்போது தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
ஐபிஎஸ் (IPS) அதிகாரிகள் மற்றும் அதிகார வர்க்கத்தின் தூண்டுதல்?
இந்த மோதலில் பெலிக்ஸ் ஜெரால்டு முன்வைக்கும் மிக முக்கியமான குற்றச்சாட்டு, சவுக்கு சங்கருக்குப் பின்னால் இருக்கும் அதிகார வர்க்கத்தின் பலம் தான். சவுக்கு சங்கர் தவெக-வை நோக்கித் திருப்பப்பட்டதற்கும், அவர் வெளியிடும் பல ரகசியத் தகவல்களுக்கும் பின்னால் சில முக்கிய ஐபிஎஸ் (IPS) அதிகாரிகள் மற்றும் திராவிட அதிகார வர்க்கத்தின் தூண்டுதல் இருக்கலாம் என்று பெலிக்ஸ் தரப்பில் கேள்விகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
எடப்பாடி பழனிசாமி vs சி.வி.சண்முகம் முரண்பாடு
சவுக்கு சங்கரின் விமர்சனங்களில் இருக்கும் முரண்பாடுகளையும் பெலிக்ஸ் ஜெரால்டு பேசி உள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைத் தீவிரமாக விமர்சிக்கும் சவுக்கு சங்கர், அதே கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் போன்ற நிர்வாகிகளை ஏன் விமர்சிப்பதில்லை என்ற கேள்வியையும் எழுப்பி இருந்தார். இதன் மூலம் சவுக்கு சங்கரின் விமர்சனங்கள் நடுநிலையானவை அல்ல, அவை குறிப்பிட்ட நபர்களை மட்டுமே குறிவைக்கும் தனிப்பட்ட அஜண்டா கொண்டது என்பது பெலிக்ஸ் ஜெரால்டின் வாதம். ஒரு காலத்தில் எடப்பாடி பழனிசாமி போல ஒரு ஆளுமை இல்லை என்றும் சவுக்கு சங்கர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெலிக்ஸின் வாதம்
ஒரு காலத்தில் சவுக்கு சங்கரின் கருத்துகளுக்குப் பெரும் ஊடக மேடையாக இருந்த பெலிக்ஸ் ஜெரால்டின் ‘ரெட் பிக்ஸ்’ தளம், தற்போது சவுக்கு சங்கரின் நம்பகத்தன்மையையே கேள்விக்குள்ளாக்கியுள்ளது. சவுக்கு சங்கர் அரசியல் ரீதியாகப் பல முக்கியத் தகவல்களை முன்கூட்டியே உடைத்தாலும், அவரது தற்போதைய கருத்துகளை வெறும் தனிப்பட்ட சுயநல அரசியல் பார்வை என்றே பெலிக்ஸ் குறிப்பிட்டு உள்ளார்.
Source link
