மதுரையில் 1500 ஆண்டுகள் பழமையான சிவாலயம்… கல்யாண சுந்தரேஸ்வரர் அருளால் திருமணத் தடைகள் நீங்கும்! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

மதுரை நகரின் தெற்குப் பகுதியில், அவனியாபுரம் வாடிவாசல் அருகே அமைந்துள்ள கல்யாணசுந்தரேஷ்வர் திருக்கோவில். இக்கோவிலின் மூலவராக கல்யாணசுந்தரேஸ்வரர் அருள்பாலித்து வருகிறார். தாயாராக மீனாம்பிகை பக்தர்களுக்கு அருள் வழங்குகிறார். மதுரையின் அரசித் தெய்வமான மீனாட்சி தனது சிறுவயதில் தோழிகளுடன் விளையாடிய இடமாக இத்தலம் கருதப்படுகிறது என்பது இத்தலத்தின் சிறப்பு.

பின்னர், சுந்தரேஸ்வரரை மணம் முடித்து செல்லும் வேளையில், தோழிகளின் வேண்டுகோளுக்கிணங்க மணக்கோலத்தில் கணவருடன் இத்தலத்தில் காட்சியளித்ததாக ஐதீகங்கள் கூறுகின்றன. இதனால் “கல்யாண” சுந்தரேஸ்வரர் எனும் பெயருக்கும் தனித்துவமான பின்னணி உருவாகியுள்ளது. கோவிலின் தலவிருட்சமாக வில்வமரம் விளங்குகிறது. இந்த மரத்தின் கீழ் வழிபடுவது மிகுந்த புண்ணியம் தரும் என பக்தர்கள் நம்புகின்றனர்.

இங்குள்ள சந்தன விநாயகரை தரிசித்தால் தாய்–பிள்ளைகள் இடையிலான கருத்து வேறுபாடுகள் நீங்கி குடும்பத்தில் அமைதி நிலைக்கும் என கூறப்படுகிறது. மேலும், பால மீனாம்பிகை மற்றும் கல்யாண சுந்தரேஸ்வரரை வில்வ இலைகளால் அர்ச்சனை செய்தால் திருமணத் தடை நீங்கி, குழந்தை வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் உறுதியான நம்பிக்கையாக உள்ளது.

இத்தலத்தில் தெற்கு நோக்கி அமர்ந்திருக்கும் ரிண விமோசன பைரவர் மிகுந்த சிறப்பு வாய்ந்தவர். இவரை வழிபட்டால் கடன் சுமைகள் குறையும், தரித்திரம் அகலும், குடும்பத் தகராறுகள் நீங்கும், நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வழக்குகளில் வெற்றி கிடைக்கும் என நம்பப்படுகிறது. கோவிலின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள பெரிய நந்தி சிலையும் பக்தர்களை ஈர்க்கும் அம்சமாக திகழ்கிறது.

தமிழ் புத்தாண்டு, ஆடிப்பெருக்கு, பிரதோஷம், மகா சிவராத்திரி போன்ற முக்கிய நாள்களில் இக்கோவில் பக்தர்களால் நிரம்பி வழிகிறது. நாயக்கர் ஆட்சி காலத்தில் இக்கோவில் புனரமைக்கப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது. தற்போது இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.


Next Post

Sat Apr 11 , 2026

சுமார் 200 மில்லியன் டாலர் (சுமார் 1,800 கோடி ரூபாய்) மதிப்புள்ள, அமெரிக்க கடற்படையின் உயர் தொழில்நுட்ப கண்காணிப்பு ட்ரோன் ஒன்று ஹார்முஸ் நீரிணைக்கு மேலே காணாமல் போயுள்ளது. அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.. இது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. அதன் மேம்பட்ட கண்காணிப்புத் திறன்களுக்காக அறியப்பட்ட இந்த ட்ரோன், ஒரு வழக்கமான பணியை முடித்துவிட்டுத் தனது தளத்திற்குத் […]

iran us war dron warship

Source link