கடலூரில் இன்று நடக்க இருந்த விஜய் பிரசாரம் மீண்டும் ரத்து

கடலூர்,

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற 23-ந் தேதி நடைபெற உள்ளது. வரும் 21ம் தேதி மாலை வரை மட்டுமே தேர்தல் பிரசாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன்படி தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் இரண்டு நகரங்களில் காலை, மாலை என பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதேபோல் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் தினமும் பல தொகுதிகளில் வாகன பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தனது வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார்.

அந்தவகையில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு விசில் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார். கடலூர் மாவட்டத்தில் கடலூர், வடலூர், சேத்தியாத்தோப்பு, திட்டக்குடி ஆகிய 4 இடங்களில் நேற்று முன்தினம் பிரசாரம் நடத்த அனுமதி கேட்ட நிலையில், போலீசாரும் நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தனர்.

ஆனால் திடீரென அந்த பிரசாரம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து ஏற்கனவே அனுமதி கேட்ட அதே இடத்தில் இன்று (சனிக்கிழமை) பிரசாரம் நடத்த போலீசில் அனுமதி கேட்கப்பட்டது. இதை பரிசீலனை செய்த போலீசார், 21 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கினர். கடலூரில் மதியம் 2 மணிக்கு பிரசாரத்தை தொடங்கும் அவர் வடலூர், சேத்தியாத்தோப்பு, திட்டக்குடியில் பிரசாரம் செய்து இரவு 9 மணிக்கு முடிக்கும் வகையில் அனுமதி பெறப்பட்டது.

Source link