தூத்துக்குடி,
2026 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கான இறுதி வாக்குச்சாவடிப் பட்டியல் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான விஷு மகாஜன் நேற்று வெளியிட்டார். மேலும் அவர் இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
இந்திய தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுக்கு இணங்க, தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்குச்சாவடிகள் மறுவரையறை செய்யப்பட்டுள்ளன. இதன்படி மாவட்டத்தின் மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 1,868 ஆக உயர்ந்துள்ளது.
தொகுதி வாரியாக பார்க்கும் போது விளாத்திகுளத்தில் 274, தூத்துக்குடியில் 360, திருச்செந்தூரில் 308, ஸ்ரீவைகுண்டத்தில் 293, ஒட்டப்பிடாரத்தில் 315 மற்றும் கோவில்பட்டியில் 318 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் திருச்செந்தூர் மற்றும் கோவில்பட்டி தொகுதிகளில் தலா 1 மற்றும் 3 என மொத்தம் 4 துணை வாக்குச்சாவடிகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் மாவட்டம் முழுவதும் 10 இடங்களில் இடமாற்றமும், 19 இடங்களில் கட்டிட மாற்றமும், 11 இடங்களில் பெயர் மாற்றமும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வாக்காளர் எண்ணிக்கை விவரம்:
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கல் தொடர்பான தொடர் திருத்தப் பணிகளுக்குப் பிறகு வெளியிடப்பட்டுள்ள பட்டியலின்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 13 லட்சத்து 88 ஆயிரத்து 186 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 6 லட்சத்து 77 ஆயிரத்து 4 பேரும், பெண் வாக்காளர்கள் 7 லட்சத்து 10 ஆயிரத்து 981 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 201 பேரும் இடம்பெற்றுள்ளனர்.
தொகுதி வாரியாக அதிகபட்சமாக தூத்துக்குடி தொகுதியில் 2 லட்சத்து 50 ஆயிரத்து 587 வாக்காளர்களும், குறைந்தபட்சமாக விளாத்திகுளம் தொகுதியில் 2 லட்சத்து 4 ஆயிரத்து 982 வாக்காளர்களும் உள்ளனர். மற்ற தொகுதிகளான திருச்செந்தூரில் 2 லட்சத்து 32 ஆயிரத்து 933 பேரும், ஸ்ரீவைகுண்டத்தில் 2 லட்சத்து 14 ஆயிரத்து 268 பேரும், ஒட்டப்பிடாரத்தில் 2 லட்சத்து 43 ஆயிரத்து 756 பேரும், கோவில்பட்டியில் 2 லட்சத்து 41 ஆயிரத்து 660 பேரும் வாக்காளர்களாக உள்ளனர்.
பணித்தொகுதி வாக்காளர்கள்:
இதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 2,818 பணித்தொகுதி (Service Voters) வாக்காளர்கள் உள்ளனர். இதில் 2,748 ஆண்களும், 70 பெண்களும் அடங்குவர். அதிகபட்சமாக ஒட்டப்பிடாரம் தொகுதியில் 930 பேரும், குறைந்தபட்சமாகத் திருச்செந்தூர் தொகுதியில் 128 பேரும் பணித்தொகுதி வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி அனைத்து ஏற்பாடுகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
