இதுல எப்புடி டா சாப்டுறது?. மலம் போல ஐஸ்கிரீம்; டாய்லெட்டில் சாப்பாடு! தைவானில் ஒரு விசித்திரமான ஹோட்டல்!

தைவானில் உள்ள ஒரு உணவகத்தில் வித்தியாசமாக கழிவறை வடிவ கிண்ணங்களில் உணவு பரிமாறப்படும் அனுபவத்தை இந்திய பெண் இன்ஃப்ளுயன்சர் ஒருவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். உலகிலேயே மிகவும் வித்தியாசமான மற்றும் விசித்திரமான உணவகங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த இடத்திற்குச் செல்ல பலரும் தயங்கும் அதேவேளையில், இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள Aakanksha Monga, தைவானின் இந்த விசித்திரமான ‘டாய்லெட்’ தீம் உணவகத்திற்குள் பார்வையாளர்களை அழைத்துச் சென்றுள்ளார். அங்குள்ள இருக்கைகளுக்குப் பதிலாக உண்மையான டாய்லெட் சீட்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேசைகள் மற்றும் சுவர்களில் மலத்தின் வடிவத்திலான அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும், பானங்கள் சிறுநீர் கழிப்பிட வடிவ பாத்திரங்களிலும், உணவு சிறிய டாய்லெட் கிண்ணங்களிலும் பரிமாறப்படுகின்றன. இந்த உணவகத்தின் மெனுவில் ‘டாய்லெட் ஹாட் பாட்’ முதல் ‘பூப் கறி’ வரை பல வகையான விசித்திர உணவுகள் இடம்பெற்றுள்ளன.

https://www.instagram.com/aakanksha.monga/reel/DeofSoUONof

உணவின் சுவைக்கு 10-க்கு 5 மதிப்பெண்கள் மட்டுமே வழங்கும் அந்த பெண், இந்த வித்தியாசமான அனுபவத்திற்கு 10-க்கு முழு மதிப்பெண்கள் வழங்கியுள்ளார். குறிப்பாக, அங்கு வழங்கப்பட்ட சாக்லேட் சாஃப்ட் சர்வீஸ் (Chocolate soft serve) ஐஸ்கிரீம் பார்ப்பதற்கு அச்சு அசலாக மலம் போன்றே இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், இதன் பிறகு தம்மால் டார்க் சாக்லேட் ஐஸ்கிரீமை முன்போல பார்க்கவே முடியாது என்று நகைச்சுவையாக தெரிவித்தார். “தைவான் இதுபோன்ற விசித்திரமான தீம் உணவகங்களின் தலைநகரமாக மாறிவிட்டது” என்று அவர் வியப்புடன் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது தைவானின் தலைநகரான தைபேயில் உள்ள ஜிமென் (Ximen) மற்றும் ஷிலின் (Shilin) எம்.ஆர்.டி நிலையங்களுக்கு அருகில் மட்டுமே இந்த உணவகத்தின் இரண்டு கிளைகள் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. விடுமுறை நாட்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், முன்கூட்டியே முன்பதிவு செய்து செல்வது நல்லது என்று அவர் தனது பதிவில் அறிவுறுத்தியுள்ளார்.