சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரான ஜெகதீஸ்வரி அண்மைக் காலமாகப் பல்வேறு அரசியல் மற்றும் தனிப்பட்ட ரீதியிலான சர்ச்சைகளில் சிக்கி ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளார். அவரைச் சுற்றி எழுந்த முக்கிய சர்ச்சைகளின் தொகுப்பு இதோ
தொகுதிமாறி நிதி ஒதுக்கியதாக சர்ச்சை
ராஜபாளையம் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 18 ஊராட்சிகளில் மேல்நிலை குடிநீர் தொட்டி, சாலை, மயானம், நிழற்குடை உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள, 2.11 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. அமைச்சர் ஜெகதீஸ்வரி பரிந்துரைப்படி, இந்த நிதியில் பணிகளை மேற்கொள்ள ஆட்சியர் ஷரண்யா உத்தரவிட்டார்.
ஆனால், இந்த நிதி ஒதுக்கீட்டில், தவெக வெற்றி பெற்ற சாத்துார் தொகுதிக்கு உட்பட்ட, ராஜபாளையம் ஒன்றியத்தில் அமைந்துள்ள சமுசிகாபுரம், மேல ராஜகுலராமன், சோழபுரம் ஆகிய ஊராட்சிகளில் பணிகளை மேற்கொள்ள 37 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டதால் குழப்பம் ஏற்பட்டது. அமைச்சரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மற்றொரு தவெக வெற்றி பெற்ற தொகுதிக்கு பணம் ஒதுக்கியதாக சர்ச்சை எழுந்தது.
இது குறித்து அமைச்சர் ஜெகதீஸ்வரி கூறுகையில் “மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் என்ற முறையில் பொதுமக்களிடம் பெற்ற மனுக்களின் அடிப்படையில், தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பணிகளுக்காக பணம் ஒதுக்கி, ஆட்சியர் உத்தரவிட்டார். அதில் 3 ஊராட்சிகள், அருகிலுள்ள சாத்துார் தொகுதியை சேர்ந்தவை என தெரிந்ததால் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது” என்றார்.
தவெக (TVK) நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக வெளியான ஆடியோ
2026 ஜூலை மாதத்தில், அமைச்சர் ஜெகதீஸ்வரி தனது சொந்தத் தொகுதியான ராஜபாளையத்தில் தவெக நிர்வாகி நுழைந்தது தொடர்பாக, கட்சியின் அப்போதைய வடமேற்கு ஒன்றியச் செயலாளர் எல்.ராஜகுரு என்பவரிடம் தொலைபேசியில் ஆவேசமாக பேசும் ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அந்த ஆடியோவில் “கால வச்சா ஜ**யோடு ஓடவிட்டு கதைய முடிப்பேன்” என்று மிரட்டல் விடுக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. அமைச்சர் தரப்பில் இந்த ஆடியோ முற்றிலும் ஜோடிக்கப்பட்டது என்றும், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட கோபத்தில் ராஜகுரு என்பவரால் பரப்பப்பட்டது என்றும் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
அரசு விழாவில் புரோட்டோகால் (Protocol) சர்ச்சை
விருதுநகரில் நடைபெற்ற சிலம்பப் போட்டிப் பரிசு வழங்கும் அரசு விழா ஒன்றில், தனது பெயர் மற்றொரு பெண் அமைச்சரான கீர்த்தனாவின் பெயருக்குக் கீழே அச்சிடப்பட்டிருந்தது குறித்து அமைச்சர் ஜெகதீஸ்வரி மாவட்ட ஆட்சியரிடம் மேடையிலேயே கேள்வி எழுப்பினார். அமைச்சர் அந்தஸ்தை விட “கேபினெட் அமைச்சர்” (Cabinet Minister) புரோட்டோகால் படி உயர்வானது என்ற விதியின் காரணமாகவே பெயர் அவ்வாறு அச்சிடப்பட்டது என விளக்கமளிக்கப்பட்ட போதிலும், இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் விவாதத்தைக் கிளப்பியது.
ரவுடியுடன் தொடர்பு மற்றும் நில அபகரிப்புப் புகார்கள்
பிரபல ரவுடியான ‘ராக்கெட் ராஜா’ என்பவருடன் அமைச்சர் ஜெகதீஸ்வரி இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகித் தவெக கட்சிக்குள்ளும் வெளியேயும் சலசலப்பை ஏற்படுத்தியது. அமைச்சரின் சொந்த ஊரில் உள்ள பொதுக் கிணறு ஒன்றை அவர் அபகரித்துக் கொண்டதாகச் சொந்த ஊர் மக்களே போர்க்கொடி தூக்கிப் புதிய சர்ச்சையைக் கிளப்பினர் அமைச்சர் ஜெகதீஸ்வரி.
அமைச்சர் ஜெகதீஸ்வரியின் கார் மோதி விபத்து
2026 செப்டம்பர் மாதத்தில், அமைச்சர் ஜெகதீஸ்வரியின் கார் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்த விபத்தில் புதிய சர்ச்சை வெடித்தது. விபத்து நடந்த சமயத்தில் காரை ஓட்டியது ஆயுதப்படை காவலர் என்ற தகவல் வெளியாகியது. அக்டோபர் 2026-ல் சுயேச்சை வேட்பாளர் ஒருவரால் அமைச்சர் ஜெகதீஸ்வரி குறித்துப் பேசப்பட்ட ஆடியோ ஒன்று வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து விளக்கமளித்த அமைச்சர், தனது வீடியோ இருப்பதாகக் கூறி சிலர் தன்னைத் தொடர்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டுவதாகவும், சமூக வலைதளங்களில் 90% பொய்யான தகவல்களே பரப்பப்படுவதால் எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சியால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகவும் தெரிவித்தார்.
அடுத்தடுத்து சர்ச்சையில் அமைச்சர் ஜெகதீஸ்வரி சிக்குவதாக நெட்டிசன்கள் சமூகவலைதளங்களில் அவற்றை ஒவ்வொன்றாக எடுத்து விவாதப் பொருள் ஆக்கி வருகின்றனர்.
