“சோறு கண்ட இடம் சொர்க்கம்”- இதன் உண்மையான அர்த்தம் என்ன? விளக்குகிறார் டாக்டர் ஸ்ரீரங்கத்து கோவிந்த பட்டர்

சோறு கண்ட இடம் சொர்க்கம் :

“சோறு கண்ட இடம் சொர்க்கம்” என வீடுகளில் பெரியவர்கள் அடிக்கடி சொல்ல கேட்டிருப்போம். எந்த வீட்டில் சோறு போடுகிறார்களோ அந்த வீட்டையே சொர்க்கமாக நினைத்து, இனி எந்த வேலையும் செய்ய வேண்டாம். சுகமாக வாழலாம் என்று இருப்பதை தான் இந்த பழமொழி குறிப்பதாக பலரும் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இது சோம்பேரியாக இருப்பவர்களை குறிப்பதற்காக சொல்லப்படும் பழமொழி அல்ல. இது ஆழ்ந்த அர்த்தம் கொண்ட ஆன்மீக மொழி என்பதை விளக்குகிறார் சாஸ்திர சம்பிரதாய ஆன்மீக பேச்சாளர், ஜோதிடர் டாக்டர்.ஸ்ரீரங்கத்து கோவிந்த பட்டர் அவர்கள்.

“சோறு கண்ட இடம் சொர்க்கம்” என்ற பழமொழிக்கு உண்மையான அர்த்தம் என்னவென்றால், ஐப்பசி மாத பெளர்ணமி அன்று சிவ பெருமானுக்கு அன்னாபிஷேகம் நடைபெறும். இதை தரிசனம் செய்பவர்களுக்கு சொர்க்கம் நிச்சயம் என்பதாகும். சிவ பெருமானுக்கு நடைபெறும் அன்னாபிஷேகத்தை தரிசனம் செய்தாலும், அந்த அன்ன பிரசாதத்தை வாங்கி சாப்பிட்டாலும் அவர்களின் பாவங்கள் நீங்குவதுடன், சொர்க்கலோகத்திலும் இடம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

சிவபெருமானுக்கு நடைபெறும் அபிஷேகங்களில், ஐப்பசி மாத பெளர்ணமியில் நடைபெறும் அன்னாபிஷேகம் மிக மிக விசேஷமானதாகும். அன்னாபிஷேகத்திற்கு பயன்படுத்தப்பட்ட அன்னத்தில் சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்றவை செய்தும் பக்தர்களுக்கு வழங்குவார்கள். இதை சாப்பிடுபவர்களுக்கும் சொர்க்கம் கிடைக்கும். அன்னாபிஷேகத்தை தரிசிக்க முடியவில்லை, நான் வருவதற்குள் அபிஷேகம் முடிந்து விட்டது என்பவர்கள் சுவாமியின் அந்த அன்னாபிஷேகத்தை தரிசித்தாலும், அந்த பிரசாதத்தை யாரோ கொண்டு வந்து கொடுத்து, அதை சாப்பிட்டாலும் அவர்களுக்கும் சொர்க்கம் கிடைக்கும். அன்னாபிஷேகத்தை தரிசித்த பலன் கிடைக்கும். இதையே சோறு இட்ட இடம் சொர்க்கம் என பெரியவர்கள் சொல்லி வைத்துள்ளனர்.

அன்னாபிஷேகம் என்றால் என்ன?

அன்னம் என்றால் சோறு. அபிஷேகம் என்றால் இறைவனை நீராட்டுதல் என்று பொருள். சமைத்த சாதமாகிய அன்னத்தால் இறைவனின் லிங்க திருமேனி முழுவதையும் மூடி, அபிஷேகம் செய்து, அலங்கரித்து, பூஜை செய்து வழிபடுவது அன்னாபிஷேகம் ஆகும். உணவு, வாழ்க்கையின் அடிப்படை. இறைவனின் அருட்கொடையால் விளைந்த உணவை, அவனுக்கே காணிக்கையாக படைத்து நன்றி உணர்வின் வெளிப்பாடாக வழிபடுவதே அன்னாபிஷேகத்தின் தாத்பரியமாகும்.

சிவனுக்கு வழக்கமாக செய்யப்படும் பால், தயிர், தேன், விபூதி போன்றவற்றால் அபிஷேகம் செய்வார்கள். அதன் பிறகு சமைத்த சாதத்தை சிறிது சிறிதாக சிவலிங்கத்தின் மீது சாத்தி அன்னாபிஷேகம் செய்வார்கள். லிங்கம் முழுவதும் வெண்மையான சாதத்தால் மூடிய பிறகு காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றைக் கொண்டு அலங்காரம் செய்யப்படும். அதற்கு பிறகு மகாதீபாராதனை காட்டப்படும். பக்தர்கள் தரிசனம் பெறுவார்கள்.

அன்னாபிஷேக தரிசன பலன்கள் :

அன்னாபிஷேகத்திற்கு தேவையான பொருட்கள் வாங்கிக் கொடுத்தாலும், அன்னாபிஷேகத்தை தரிசனம் செய்தாலும், அன்னாபிஷேகம் செய்த பிரசாதத்தை வாங்கி சாப்பிட்டாலும் பாவங்கள் நீங்கும். மன அமைதி கிடைக்கும். உணவு தட்டுப்பாடு என்பது அவர்களின் தலைமுறைக்கே ஏற்படாது. குடும்ப நலன், ஆரோக்கியம், செல்வ நலன் ஏற்படும். புத்திர பாக்கியம் கிடைக்கும். இது நன்றி உணர்வு, உணவின் அருமையை உணர்த்தும் வழிபாடாகவும் கருதப்படுகிறது. உணவை வீணாக்கக் கூடாது. இது இறைவன் கொடுத்தது. இதில் இறைவன் இருக்கிறான் என ஒவ்வொரு பொருளிலும் இறைவன் இருக்கிறான் என்ற பக்தி உணர்வை ஏற்படுத்தும் வழிபாடே அன்னாபிஷேக வழிபாடாகும். இந்த நாளில் அன்னதானம் செய்தால் வளம் பெருகும். சிவபெருமானின் அருள் கிடைக்கும். தடைகள் விலகும்.

ஐப்பசி பெளர்ணமியான அன்னாபிஷேகம் நடைபெறும் நாளில் சிவ மந்திரங்களை சொல்லி வழிபடுவது சிறப்பு. சிவனுக்குரி மந்திரங்கள், ஸ்லோகங்கள், பதிகங்கள் எதுவும் தெரியாதவர்கள் எளிமையாக 18 முறை “ஓம் நம சிவாய” என்ற மந்திரத்தை பக்தியுடன் உச்சரித்தாலே போதும்.

– கட்டுரையை வழங்கியவர்

டாக்டர் ஸ்ரீரங்கத்து கோவிந்த பட்டர்,

சாஸ்திர சம்பிரதாய ஆன்மீக பேச்சாளர், ஜோதிடர்.

மொபைல் எண்: 9087426655

Source link