தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது முதல்வர் விஜய்யின் கான்வாயை வழிமறிக்க முயன்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா கைது செய்யப்பட்ட விவகாரம் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், முதல்வரின் கான்வாயைத் தடுப்பது சட்டப்படி குற்றமா, என்னென்ன தண்டனைகள் விதிக்கப்படலாம் என்பதை விரிவாகப் பார்க்கலாம்.
தாராபுரத்தில் இடைத்தேர்தலுக்காக தமிழக வெற்றிக்கழகம் வேட்பாளர் சத்தியபாமா -வை ஆதரித்து முதல்வர் விஜய் பிரச்சார மேற்கொள்ள வருகை தந்தார். அந்த சமயத்தில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகா முதல்வரின் கான்வாயை வழி மறைத்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட முயன்றார்.
முதல்வர் விஜய் கான்வாய் வழிமறிப்பு கார்த்திகா கைது
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்த பின்னர் விடுவிக்கப்பட்டார். இந்த சூழலில் நேற்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா மற்றும் அவரது கணவர் கைது செய்யப்பட்டார் இது தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.இந்த சம்பவத்திற்கு ஆளும் தமிழக வெற்றிக் கழக அரசுக்கு எதிராக திமுக அதிமுக நாம் தமிழர் உள்ளிட்ட பிரதான அரசியல் கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறது. இந்த சூழலில், முதல்வர் காண்வாய் வழிமறிக்க முயன்ற கார்த்திகா கைது செய்யப்பட்டது சரியா தவறா என்ற விவாதம் எழுந்துள்ளது இது குறித்து சட்டம் என்ன சொல்கிறது என்பதை விரிவாக பார்க்கலாம்.
ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் பயணம் செய்யும் போது, அவருக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு என்பது வெறும் தனிப்பட்ட நபருக்கான பாதுகாப்பு மட்டுமல்ல; அது ஒரு மாநிலத்தின் முதன்மைப் பிரதிநிதிக்கான மிக முக்கியமான பாதுகாப்பு நடைமுறையாகும். நாட்டின் உயர்மட்டப் பாதுகாப்பு வளையத்தில் (VVIP Security) இருக்கும் முதல்வரின் பயணத்தைத் தடுப்பதோ அல்லது அவரதுகான்வாய் (பாதுகாப்பு வாகன அணிவகுப்பு) வாகனங்களை வழிமறிப்பதோ தீவிரமான சட்டவிரோதச் செயலாகக் கருதப்படுகிறது.
சட்டப் பிரிவுகளும் தண்டனைகளும்
இந்தியக் குற்றவியல் சட்டங்களான பாரதிய நியாய சன்ஹிதா (BNS) மற்றும் முந்தைய இந்திய தண்டனைச் சட்டம் (IPC) ஆகியவற்றின் கீழ் கான்வாயை வழிமறிப்பது கடுமையான குற்றமாகும். அரசு ஊழியரைப் பணி செய்யவிடாமல் தடுத்தல் (BNS பிரிவு 221 / IPC பிரிவு 186): முதல்வருக்குப் பாதுகாப்பு அளிக்கும் காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புப் படையினரின் சட்டப்பூர்வமான கடமைகளுக்குத் தடை ஏற்படுத்துவதும், கான்வாய் வாகனங்களை மறிப்பதும் இந்தப் பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். இதற்காக அபராதம் மற்றும் சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது. பொது வழியில் இடையூறு விளைவித்தல் (BNS பிரிவு 285 / IPC பிரிவு 283): பொதுப் பாதையில் ஆபத்தையோ அல்லது தடையையோ ஏற்படுத்திப் போக்குவரத்தைப் பாதிப்பது சட்டப்படி குற்றமாகக் கருதப்பட்டு அபராதம் விதிக்கப்படும். காவல்துறையினர் மீது பலப்பிரயோகம் செய்தல் (BNS பிரிவு 132 / IPC பிரிவு 353): கான்வாய் வாகனங்களை நிறுத்தக் காவல்துறையினர் மீது பலப்பிரயோகம் செய்தாலோ, அச்சுறுத்தல் விடுத்தாலோ அல்லது அவர்களைத் தாக்க முயன்றாலோ இந்த மிகக் கடுமையான பிரிவின் கீழ் உடனடியாகக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மோட்டார் வாகனச் சட்டம் (பிரிவு 179)
சாலைப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்தைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் இடும் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய மறுப்பதும், அவர்களின் பணிகளுக்கு முட்டுக்கட்டை போடுவதும் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரியதாகும்.
பாதுகாப்பு நெறிமுறைகளும் நீதிமன்ற வழிகாட்டுதல்களும்
முதலமைச்சர்களுக்கு வழக்கமாக இசட் (Z) அல்லது இசட்-பிளஸ் (Z-Plus) போன்ற உயர்மட்டப் பாதுகாபபு வழங்கப்பட்டிருக்கும். கான்வாய் செல்லும் பாதை முன்கூட்டியே காவல்துறையினரால் சோதனையிடப்பட்டு (Sanitized) பாதுகாப்பானது என உறுதிசெய்யப்பட்ட பிறகே வாகனங்கள் இயக்கப்படும். இதில் அத்துமீறி நுழைவது தீவிரப் பாதுகாப்பு மீறலாகக் (Security Breach) கருதப்படும். அதேவேளையில், உயர் நீதிமன்ற வழிகாட்டுதல்களின்படி முதல்வரின் கான்வாய் செல்வதற்காகப் பொதுமக்களின் போக்குவரத்தை 5 முதல் 10 நிமிடங்களுக்கு மேல் நிறுத்தக் கூடாது என்ற விதியும் உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் கான்வாய் வாகனங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு, பொதுமக்கள் தேவையின்றி காக்க வைக்கப்படாமல் இருக்க மாற்றுப் போக்குவரத்து வழிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. சுருக்கமாகக் கூறின், முதல்வரின் கான்வாயை வழிமறிப்பது விபத்துகளுக்கும், பேரமைதி சீர்குலைவுக்கும் வழிவகுக்கும் என்பதால், இதில் ஈடுபடும் நபர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத (Non-Bailable) பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்யக் காவல்துறையினருக்குச் சட்டத்தில் முழு அதிகாரம் உள்ளது.
Source link
