Jio History,எல்லாம் இலவசம் – டூ – நம்பர் 1 நெட்வொர்க்: புரட்சியை ஏற்படுத்திய ஜியோவின் வளர்ச்சி – started from zero to earning crores from customers how jio revolutionized indian telecom

ஜியோவின் ஐபிஓ தற்போது பெரிய பேசுபொருளாக இருக்கும் நிலையில், ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவில் அடி எடுத்து வைத்தது முதல் இப்போது அடைந்துள்ள மாபெரும் வளர்ச்சி குறித்து இங்கே பார்க்கலாம்.

இந்தியாவில் இன்று இணையம் என்பது நம் அன்றாட வாழ்க்கையின் மிக முக்கியமான அங்கமாக மாறிவிட்டது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட்ஃபோன்களையும், அதிவேக டேட்டாவையும் குறைந்த செலவில் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பு நிலைமை இப்படி இல்லை. இன்டர்நெட் என்பது மிகவும் விலை உயர்ந்ததாகவும், பொதுமக்களுக்கு எளிதில் எட்டாத ஒன்றாகவுமே இருந்தது. இந்தச் சூழலை மாற்றி இந்தியாவை டிஜிட்டல் உலகத்துடன் இணைப்பதில் முக்கியப் பங்காற்றியது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ தான்.

ஜீரோவில் தொடங்கிய ஆரம்பம்!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கடந்த 2016ஆம் ஆண்டில் அறிமுகமானபோது, இந்தியத் தொலைத்தொடர்புத் துறையில் அதுவரை இல்லாத அளவுக்குப் பல மாதங்களுக்கு முற்றிலும் இலவசமாக பல சேவைகளை வழங்கியது. வாய்ஸ் கால் மற்றும் 4ஜி இன்டர்நெட் சேவைகளை மக்களுக்கு இலவசமாக வழங்கியது. ஆனால் காலப்போக்கில் நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. ஜியோவின் ஆரம்பகால ‘பூஜ்ஜியம்’ கட்டணத்திற்கும், தற்போதைய ரீசார்ஜ் விலைகளுக்கும் பெரிய நீண்ட வளர்ச்சி இருக்கிறது.

தொடக்கக் காலம் – எல்லாம் இலவசம்!

ஆரம்பத்தில் Happy New Year மற்றும் Welcome Offer திட்டங்கள் மூலம் தினசரி உயர்வேக 4ஜி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்புகள், இலவச எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ ஆப்களின் முழுமையான பயன்பாடு முற்றிலும் இலவசமாகக் கொடுக்கப்பட்டது. இந்திய மக்களை டிஜிட்டல் முறைக்கு மாற்றவும், தனது நெட்வொர்க்கில் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை இணைக்கவும் ஜியோ இந்த உத்தியைக் கையாண்டது.

தற்போதைய ரீசார்ஜ் நிலவரம்!

சில ஆண்டுகள் இலவச சேவை வழங்கிய பிறகு, படிப்படியாகக் கட்டணங்களை அறிமுகப்படுத்திய ஜியோ, தற்போது தனது கட்டணங்களை உயர்த்தியுள்ளது. முன்பு குறைந்த விலையில் கிடைத்த பல திட்டங்கள் மாற்றப்பட்டு, தற்போது அடிப்படைத் தேவைகளுக்கான திட்டங்கள் தோராயமாக ரூ. 189 முதல் தொடங்குகின்றன. இதில் குறிப்பிட்ட அளவிலான டேட்டா மற்றும் அன்லிமிடெட் கால்கள் வழங்கப்படுகின்றன.

பிரபலமான டேட்டா திட்டங்கள்!

முதலில் ரூ. 299 திட்டம் மக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றது. 28 நாட்கள் செல்லுபடியாகும் காலமும், தினமும் 1.5 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் கால்கள் இதில் கிடைக்கும். அடுத்து ரூ. 349 திட்டம். இது 28 நாட்கள் செல்லுபடியாகும் காலமும், தினமும் 2 ஜிபி டேட்டாவுடன் சில திட்டங்களில் அன்லிமிடெட் 5G டேட்டா பலன்களும் கிடைக்கின்றன.

நீண்ட கால மற்றும் வருடாந்திர திட்டங்கள்!

ரூ. 3,599 திட்டம் ஒரு வருடத்திற்கு (365 நாட்கள்) ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கான பிரதான திட்டம் ஆகும். இது தினமும் 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்கள் மற்றும் தகுதியான இடங்களில் அன்லிமிடெட் 5ஜி சேவையை வழங்குகிறது. அன்று இன்டர்நெட்டை இலவசமாகக் கொடுத்து பழக்கப்படுத்திய ஜியோ, இன்று இந்தியாவின் முன்னணி நெட்வொர்க்காக மாறிய பின்னர், மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களைப் போலவே வணிக ரீதியான கட்டண முறைக்கு முழுமையாக மாறியுள்ளது.

குறுகிய காலத்தில் வேகமான வளர்ச்சி!

குறைந்த செலவில் டேட்டா என்ற உத்தியைக் கையாண்ட ஜியோ, அறிமுகமான மிகக் குறுகிய காலத்திலேயே கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை ஈர்த்தது. வெறும் 83 நாட்களில் 5 கோடி வாடிக்கையாளர்களைக் கடந்து உலக சாதனை படைத்தது. வெறும் சிம் கார்டு வழங்குவதோடு நிறுத்திக்கொள்ளாமல், ஜியோ சினிமா, ஜியோ டிவி, ஜியோ மார்ட் என பல்வேறு செயலிகளை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு ஒரு முழுமையான டிஜிட்டல் அனுபவத்தைக் கொடுத்தது.

டிஜிட்டல் இந்தியாவில் ஜியோவின் பங்கு!

பெருநகரங்களை மட்டும் குறிவைக்காமல் இந்தியாவின் குக்கிராமங்கள் வரை தனது இன்டர்நெட் சேவைகளைக் கொண்டு சேர்த்தது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் முதன்முறையாக இணையத்தைப் பயன்படுத்தத் தொடங்கினர். தொடக்கத்தில் சந்தையை உலுக்கிய ஜியோ, இன்று இந்தியாவின் நம்பகமான முன்னணி டிஜிட்டல் மற்றும் தொலைத்தொடர்பு சேவை வழங்குநராக உயர்ந்திருக்கிறது. கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுடன், அதிவேக 5ஜி சேவைகளையும் வழங்கி வருகிறது. இந்தியாவை டிஜிட்டல் இந்தியாவாக மாற்றியதில் ஜியோவின் பங்கு மிக முக்கியமான ஒன்றாகும்.

Source link