அரசின் 40 கிலோ சந்தனக்கட்டைகளை வாங்க நாகூர் தர்கா நிர்வாகம் மறுப்பு – முதலமைச்சர் விஜய் நாளை வழங்கவுள்ள நிலையில் குளறுபடி – rucks and rocks around nagore dhargha kandhoori sandakwood issue

நாகூர் ஆண்டவர் கந்துாரி விழாவையொட்டி நடைபெறும் சந்தனக்கூடு விழாவிற்கு அரசு சார்பில் வழங்கப்படும் சந்தனக்கட்டைகளை வாங்கமாட்டோம் என்று தர்கா நிர்வாகிகள் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலக பிரசித்திப்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவில் ஆண்டுதோறும் கந்துாரி விழா வெகு சிறப்பாக நடைபெறும். 470வது ஆண்டு கந்துாரி விழா இந்தாண்டு அடுத்த மாதம் நவம்பர் 10ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்க உள்ளது. விழாவையொட்டி சிறப்பாக சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெறும். ஊர்வலத்தில் கொண்டுவரப்பட்ட சந்தனத்தை ஆண்டவர் சமாதியில் பூசி சிறப்பு வழிபாடு நடைபெறும். இதில் லட்சக்கணக்கானோர் கலந்துகொள்வார்கள்.

அமைச்சரின் ஆதரவாளருக்கு அழைப்பால் அதிருப்தி

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 2022ம் ஆண்டு முதல் தமிழக அரசுசார்பில் வழங்கப்படும் 40 கிலோ சந்தனக் கட்டைகளை தர்கா தலைமை அறங்காவலர் மற்றும் ஆலோசனைக்குழு தலைவர் உள்ளிட்டோரிடம் தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கி வருவது வழக்கம். இந்நிலையில் இந்தாண்டு தர்கா தலைமை அறங்காவலர் மற்றும் மற்றொருவருக்கும் அரசு சார்பில் முதல்வர் அலுவலகத்திலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாளை (22ம்தேதி) தலைமைச்செயலகத்தில் கந்தூரி விழாவுக்கான சந்தன கட்டைகளை பெற்றுக்கொள்ளுங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தர்கா நிர்வாகிகளிடையே கடும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.

அமைச்சர் ஆதரவாளரை அழைத்தால் சந்தனகட்டைகளை வாங்க மாட்டோம்

நாகூர் தர்காவின் 11 அதிகாரப்பூர்வ நிர்வாகிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் நேற்று பிற்பகலில்(அக்.20) நடந்தது. கூட்டத்தில், தர்காவிற்கு வழக்கமாக சந்தன கட்டைகளை வழங்குபவர்களிடம் அரசு வழங்க வேண்டும். சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஷாஜகான் ஆதரவாளர்களை அழைத்து வழங்குவது என்றால், தர்கா நிர்வாகத்தில் இருந்து யாரும் வந்து சந்தனக் கட்டைகளை வாங்க மட்டோம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தலைமைச்செயலாளருக்கு இமெயிலில் தகவல்

நாளை நடைபெறும் சந்தனைக்கட்டைகள் வழங்கும் நிகழ்ச்சியை புறக்கணிக்பதாக தலைமைச்செயலாளர், அமைச்சர், துறை செயலர் உள்ளிட்டோருக்கு இமெயில் மூலம் தங்களது முடிவை அனுப்பி உள்ளதாக நாகூர் தர்கா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். அமைச்சர் ஷாஜகானை பலமுறை தொடர்பு கொண்டும், அவர் செல்போனை எடுக்கவில்லை என்று நாகூர் தர்கா நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமான நடைமுறையின்படி சந்தனக் கட்டைகளை வழங்க வேண்டும்

உலக புகழ்பெற்ற நாகூர் தர்கா சந்தனக்கூடு விழாவிற்கு வழக்கமான நடைமுறையின்படி சந்தனக் கட்டைகளை வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் விஜய்க்கு, நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் கட்சித் தலைவருமான ஜவாஹிருல்லா கோரிக்கைவிடுத்துள்ளார்.

விலையில்லா சந்தனக் கட்டைகளை வழக்கமான நடைமுறையின்படி தர்கா நிர்வாகத்தினரிடம் வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Source link