சூப்பர் எல்நினோ எனும் பருவநிலை மாற்றத்தால், 8 மாதம் வெளியில் சுட்டெரித்தது. இதனால் ஏரி, குளங்கள், நீர்நிலைகள் வறண்டு போயுள்ளன. நிலத்தடி நீர் சரிவு, குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மழைநீர் சேமிப்பு திட்டம் மீண்டும் கட்டாயமாக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
அதிகரித்து வரும் மக்கள் தொகை, விரிவடைந்து வரும் வேளாண்மை, வேகமான நகரமயமாக்கல் ஆகியவை நீர் மேலாண்மையை மேலும் சிக்கலானதாக மாற்றியுள்ளன. புதிய தொழில்நுட்பங்கள், உள்கட்டமைப்பு, நிறுவன ரீதியான செயல்முறைகள் ஆகியவை அவசியமாகியுள்ளன. இருப்பினும், நீடித்த நீர் மேலாண்மைக்கு சமூகங்களின் பங்கேற்பு முக்கியமானதாக உள்ளது.
தேசிய அளவில் நீர் பாதுகாப்பு, ஒத்துழைப்புக்கு முக்கியத்துவம்
ஜல் சக்தி அமைச்சகத்தின் துறைசார் உச்சி மாநாடு 2026 செப்டம்பர் 1 முதல் 2 வரை புதுடெல்லியில் நடைபெற்றது. கூட்டாட்சியை வலுப்படுத்துதல், மத்திய – மாநிலங்களுக்கிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் நடத்தப்படும் துறைசார் உச்சி மாநாடுகளின் வரிசையில் இது முதலாவது மாநாடாகும். ‘மக்கள் பங்களிப்பின் மூலம் நீர் சேமிப்பு திட்டம் உள்ளிட்டவை மாநாட்டின் 4 முக்கிய கருப்பொருள்களில் ஒன்றாக இடம்பெற்றது. நீர் உள்கட்டமைப்புத் திட்டங்கள், குடிநீர் அமைப்புகளுக்கான நீராதாரங்களின் நிலைத்தன்மை, ஜல் ஜீவன் இயக்கம் 2.0-ன் கீழ் கிராமப்புற குடிநீர் வழங்கல் நடவடிக்கைகள் ஆகியவையும் முக்கிய கருப்பொருள்களாக இடம்பெற்றன.
மக்களின் பங்களிப்புடன் மழைநீர் சேமிப்பு திட்டம்
கிராமங்கள் தங்களது நீர்வளங்களுக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் திட்டத்தை ஜல் ஜீவன் இயக்கம் மூலம் வலியுறுத்தப்பட்டது. மக்கள் பங்களிப்பின் மூலம் நீர் சேமிப்பு திட்டத்தின் கீழ், உள்ளூர் அளவில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. விழிப்புணர்வை ஏற்படுத்த கிராம சபைகள், வீடு வீடாக பிரச்சாரம், பாரம்பரிய நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள், பயிலரங்குகள் நடத்தப்பட்டன. விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள், உள்ளூர் நிறுவனங்கள் ஒன்றிணைந்து நீர் வரவு செலவுத் திட்டமிடல், பயிர்த் திட்டமிடல், நிலத்தடி நீரைப் பகிர்ந்து பயன்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்நாட்டிலும் மழைநீர் சேமிப்பு திட்டத்திற்கு புத்துயிர்
வீடுகள், அபார்ட்மென்டுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டாயமாக்கப்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 2002-ம் ஆண்டு மழைநீர் சேகரிப்பு திட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்காக தலைமைச் செயலாளர் தலைமையில் மாநில ஒருங்கிணைப்பு குழுவும், மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் மாவட்ட குழுவும் அமைக்கப்பட்டது.
தற்போது பல இடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் தூர்ந்து போயும், சேதமடைந்தும் உள்ளன. 2002இல் பழைய மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை புதுப்பித்து, புதிய கட்டமைப்புகளை உருவாக்க விஜய் தலைமையிலான தவெக அரசு முடிவெடுத்துள்ளது.
மழைநீர் சேமிப்பு குறித்த அவசியத்தை எடுத்துரைக்க விழப்புணர்வு
மக்களிடம் தொடர்ச்சியான விழிப்புணர்வு ஏற்படுத்தி, கண்காணிப்பு மற்றும் ஆய்வு பணிகளை தீவிரப்படுத்த தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது. மழைநீர் சேகரிப்புகட்டமைப்புகளை பருவமழைக்கு முன் 100% செயல்பாட்டில் கொண்டு வர அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி மழைநீர் சேகரிப்பு இல்லாத பழைய வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளிலும் இனி மழைநீர் சேகரிப்பு அமைப்பு கட்டாயம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மழைநீர் சேகரிப்பு இல்லாத தொழிற்சாலைகளிலும் கட்டாயம் மழைநீர் சேகரிப்பு அமைப்பை ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
புதிய கட்டிடங்களுக்கு மட்டுமல்லாமல், பழைய கட்டடங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டாயம் என்ற உத்தரவின் மூலம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பாணியில் தமிழ்நாட்டில் மழை நீர் சேமிப்பு திட்டம் செயல்படுத்த முதலமைச்சர் விஜய் உறுதி எடுத்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
