பெரியார் ஆதரவு முதல் மோடி எதிர்ப்பு வரை – அண்ணாமலையின் அரசியல் களம் சொல்வது என்ன? – annamalai supporting periyar to opposing pm modi for new political dimension in tamil nadu

தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை கடந்த சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு அக்கட்சியில் இருந்து விலகி We The Leaders (வீ தி லீடர்ஸ்) என்ற அரசியல் இயக்கத்தைத் தொடங்கினார். மேலும் தேர்தலில் தனது இயக்கம் கண்டிப்பாகப் போட்டியிடும் என்று கூறியுள்ள அண்ணாமலை, புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவது எப்போது? அதற்குப் பெயர் என்னவாக இருக்கும்? என்பது பற்றி அறிவிக்கவில்லை.

அதேசமயம் உள்ளாட்சித் தேர்தல் மூலம் அவர், தனது இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றி, தேர்தலில் போட்டியிடுவார் என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் அவர் இன்று மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடியை எதிர்த்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை தமிழக அரசியலில் மட்டுமின்றி தேசிய அளவிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. நீட் விவகாரம் மற்றும் எஸ்.ஐ.ஆர். விவகாரம் தொடர்பாக போராட்டம் நடத்திய கரப்பான் பூச்சி கட்சியினருக்கு ஆதரவாகப் பேசியுள்ள அவர், அதே சமயம் பாஜகவை நோக்கிக் கேள்வி எழுப்பியுள்ளார்.

அண்ணாமலை எழுப்பிய கேள்விகள்

பாஜக உண்மையில் CJP அமைப்பை எதிர்க்கிறதா? அல்லது அதற்கு இலவச விளம்பரம் செய்து கொண்டிருக்கிறதா? CJP-ஐ ஒரு பெரிய அரசியல் சக்தியாகக் காட்டுவதன் மூலம் எதிர்க்கட்சிகளின் வாக்குகளைப் பிரிக்க பாஜக விரும்புகிறதா? இதே வேகத்தில் சென்றால், CJP அமைப்பு பணம் கொடுத்தாலும் இதைவிடச் சிறந்த விளம்பரக் குழுவைப் பெற்றிருக்க முடியாது என அடுக்கடுக்காகக் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

தமிழ்நாடு அரசியல் – அண்ணாமலையின் வியூகம்

தமிழ்நாடு பெரியாரின் மண் என்று கூறப்படும் இந்தச் சூழலில், தமிழகத்தில் புதிதாக அரசியல் கட்சி மற்றும் அரசியல் இயக்கம் தொடங்கினால் பெரியாரைத் தவிர்த்து இயங்க முடியாது எனும் நிலையில் உள்ளது. சமூக நீதி மற்றும் முற்போக்கு அரசியலைக் கொள்கையாகக் கொண்டு தொடங்கப்படும் அரசியல் கட்சிகள் பெரியாரைத் தங்களது முன்மாதிரியாக நிறுத்துகின்றனர்.

திராவிட கட்சித் தலைவர்களுக்கு வாழ்த்து

அவ்வகையில் தேசிய அரசியலில் தீவிரமாக இயங்கி வந்த அண்ணாமலை தனி இயக்கம் தொடங்கிய நிலையில், திராவிட கட்சித் தலைவர்களான பெரியார் மற்றும் அண்ணா பிறந்த நாளின்போது அவர்களை வாழ்த்தி அறிக்கை வெளியிட்டார்.

அண்ணா, பெரியாரை வாழ்த்திப் பதிவு

அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணாமலை, அண்ணாவை வாழ்த்திப் பதிவிட்டுள்ளார். அதில், மதுவிலக்குக் கொள்கையில் உறுதியாக நின்றவர். ஊழலுக்கும், குடும்ப அரசியலுக்கும் எதிராக வாழ்ந்தவர். எளிமையையும் நேர்மையையும் தனது அரசியல் வாழ்வில் கடைப்பிடித்தவர் என்றும் தமிழகம் கண்ட எளிமையான தலைவர்களில் ஒருவரான பேரறிஞர் அண்ணாதுரை நினைவைப் போற்றி வணங்குகிறோம் எனக் குறிப்பிட்டிருந்தார்.
அதேபோல் சமூகத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வுகள் மற்றும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக, தனது வாழ்க்கையின் பெரும்பகுதியைச் செலவிட்ட பெரியார் பொதுவாழ்வை நினைவுகூர்ந்து வணங்குகிறோம் எனப் பெரியார் பிறந்த நாள் அன்று பதிவிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து அண்ணாமலையின் இந்த வாழ்த்து தமிழக அரசியல் களத்தில் பேசுபொருள் ஆனது.

தற்போது மோடி எதிர்ப்பு

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனநாயக நாட்டில், சட்டத்தின் உரிய நடைமுறைகள் மீறப்படுவதை நீங்கள் கேள்வி கேட்டால், உங்களுக்குப் பல்வேறு பெயர்கள் சூட்டப்படுகிற அவல நிலை உருவாகியுள்ளது. “அந்நியக் கைகூலி” என்று முத்திரை குத்துவது உட்பட பல்வேறு தாக்குதல்களையும் நீங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தின்போது, போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு மத்திய அரசிடம் நான் கேட்ட சமயத்திலிருந்து, தொடர்ந்து பல்வேறு விதமான தாக்குதல்களைச் சந்தித்து வருகிறேன். இருப்பினும், தமிழ்நாட்டில் களத்தினில் உள்ள பிரச்சினைகளில் அதிக கவனம் செலுத்துவது முக்கியம் என்று கருதியதால், அந்தத் தாக்குதல்களை நான் பொருட்படுத்தவில்லை எனத் தெரிவித்த அவர் மத்திய அரசுக்கு எதிராகப் பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.

தமிழ்நாட்டில் கவனம்?

அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி அண்ணாமலையின் சமீபத்திய நகர்வுகள் முழுக்க தமிழக அரசியல் களத்தைச் சுற்றி அமைந்துள்ளவையாக உள்ளன. தமிழக மண் சார்ந்த அரசியலை அவர் கையில் எடுத்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இவரின் இந்த அறிக்கைக்கு பாஜக அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த வகையில் ஆன்மிக அரசியலைக் கைவிட்ட அண்ணாமலை தீவிரமாகத் தமிழ் மண் மற்றும் மக்கள் சார்ந்த அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார் எனலாம்.

Source link