கேரள மாநிலம் மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பருவமழை தீவிரமடைந்து பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து திருநெல்வேலி நோக்கி வந்து கொண்டிருந்த பிலாஸ்பூர் – திருநெல்வேலி விரைவு ரயில் (ரயில் எண்: 22619), இன்று அதிகாலை சுமார் 2:00 மணியளவில் கன்னியாகுமரி மாவட்ட எல்லையான களியக்காவிளை அருகே உள்ள பாறசாலை ரயில் நிலையப் பகுதியைக் கடக்க முயன்றது.
அப்போது, அப்பகுதியில் நேற்று இரவு முதல் விடிய விடிய பெய்த மழை காரணமாக, ரயில் தண்டவாளத்தின் மீது திடீரென பெருமளவில் மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்து நிலச்சரிவு ஏற்பட்டது. தண்டவாளத்தில் மண் குவிந்து கிடந்ததை சற்றும் எதிர்பாராத நிலையில், அவ்வழியாக வேகமாக வந்த எக்ஸ்பிரஸ் ரயிலின் இன்ஜின் மற்றும் முன் பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. நள்ளிரவு நேரத்தில் பெரும் சத்தத்துடன் ரயில் குலுங்கி நின்றதால் உறங்கிக் கொண்டிருந்த பயணிகள் அனைவரும் அலறியடித்துக் கொண்டு பெரும் பீதிக்குள்ளாகினர்.
மேலும், ரயிலில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் எவ்வித காயங்களுமின்றி நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே உயர் அதிகாரிகள், மீட்புப் படையினர் மற்றும் மருத்துவக் குழுவினர் பயணிகளைப் பத்திரமாக மீட்டனர். இந்த விபத்தின் எதிரொலியாக நாகர்கோவில் – திருவனந்தபுரம் இடையேயான முக்கிய வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு, அவ்வழியே செல்ல வேண்டிய பல ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தண்டவாளத்தில் சரிந்து விழுந்த மண் குவியல்களை அகற்றி, சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளும் பணியில் ரயில்வே ஊழியர்கள் தற்போது போர்க்கால அடிப்படையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Read More : தமிழகத்தில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை! பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
