அதிரடி ஆட்டம்.. பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சூர்யவன்ஷி படைத்த சாதனைகள்

கவுகாத்தி,

ஐபிஎல் தொடரில் நேற்று கவுகாத்தியில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் – பெங்களூரு அணிகள் மோதின. இதில், பெங்களூரு அணி நிர்ணயித்த 202 ரன்கள் இலக்கை ராஜஸ்தான் அணி 18 ஓவர்களில் கடந்து அபார வெற்றி பெற்றது.

குறிப்பாக, ராஜஸ்தான் அணியின் அதிரடி ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி, 26 பந்துகளில் 8 பவுண்டரி, 7 சிக்சருடன் 78 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். இதன் மூலம் அவர் சில சாதனைகளை படைத்துள்ளார். அதன் விபரம் பின்வருமாறு;

* நேற்றைய போட்டியில் 15 பந்துகளில் சூர்யவன்ஷி அரைசதம் அடித்தார். இது, ஒரு இந்திய வீரர் அடித்த மூன்றாவது அதிவேக அரைசதம் என்கிற சாதனையை பெற்றது. இதே சாதனையை ஏற்கனவே சில நாட்கள் முன்புதான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக வெறும் 15 பந்துகளில் அரைசதம் அடித்ததன் மூலம் வைபவ் படைத்திருந்தார். தற்போது மீண்டும் அதனை நிகழ்த்தியுள்ளார். அவரின் சக வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 13 பந்துகளில் அரைசதம் அடித்து இந்த சாதனைப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

* பவர்பிளேயில் அரைசதங்கள் அடிப்பதில் ஜாம்பவான் ஜோஸ் பட்லரின் சாதனையை சூர்யவன்ஷி சமன் செய்தார். ஜோஸ் பட்லர் 3 முறை அரைசதங்கள் அடித்துள்ளார். தற்போது அவருடன் வைபவ் சூர்யவன்ஷியும் (3 முறை) இதனை செய்துள்ளார்.

* 20க்கும் குறைவான பந்துகளில் அரைசதங்கள் அடித்த டிராவிஸ் ஹெட் மற்றும் மெக்குர்க்கின் சாதனையை வைபவ் சூர்யவன்ஷி (3 அரைசதம்) சமன் செய்தார்.

* இந்த தொடரில் 4 போட்டிகளில் விளையாடியுள்ள வைபவ் சூர்யவன்ஷி, 266 என்ற அதிகபட்ச ஸ்ட்ரைக் ரேட்டில் 200 ரன்கள் எடுத்துள்ளார். அதிக ரன்கள், ஸ்ட்ரைக் ரேட் ஆகியவற்றைத் தவிர, இந்தத் தொடரில் அதிக சிக்ஸர்களை அடித்த பேட்ஸ்மேனும் இவரே. இதுவரை 18 சிக்ஸர்களை அவர் பறக்கவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link