மெரினாவில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு: லைட் ஹவுஸ் முதல் அடையாறு வரை மேம்பாலம் – ரூ.38.10 லட்சத்தில் டெண்டர்? – elevated corridor planned from lighthouse to adyar dpr tender invited

சென்னை மெரினா கடற்கரைப் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், லைட் ஹவுஸ் முதல் அடையாறு திரு. வி.க. பாலம் வரை 4 கி.மீ. நீளத்திற்கு உயர்மட்டச் சாலை அமைக்கும் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை (DPR) தயாரிக்க நெடுஞ்சாலைத் துறை டெண்டர் கோரியுள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கலங்கரை விளக்கம் முதல் அடையாறு திரு. வி.க. நகர் வரை மேம்பாலம் அமைக்க தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது. மேலும், அதற்கானதிட்ட அறிக்கை தயாரிக்கும் பணிக்கான மதிப்பீடு ரூ. 38.10 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு, 60 நாள் கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை லைட் ஹவுஸ் முதல் திரு. வி.க. நகர் வரை 4 கிலோமீட்டருக்கு உயர்மட்ட மேம்பாலம் அமைத்தால், சென்னை மெரினா கடற்கரை பகுதியில் நிலவும் கூட்ட நெரிசலையும் போக்குவரத்துச் சிக்கலையும் தவிர்க்க முடியும் எனச் சொல்லப்படுகிறது.

சரிபார்க்க வேண்டியவை?

திட்ட வரைவு அறிக்கையைத் தயாரிப்பதற்கு முன்பு, அந்தப் பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதற்கான தொழில்நுட்பச் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய வேண்டும். மேலும், அந்தப் பகுதியில் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் தாக்கங்கள் குறித்து விரிவான ஆய்வு அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும். அதைப்போலவே, தேவைப்பட்டால் மேம்பாலம் அமைக்கும் இடத்திற்கான வழித்தடம் அல்லது தற்போதைய வழித்தடத்தில் மாற்று வழித்தடத்தை உருவாக்குவது குறித்தும் ஆலோசிக்க வேண்டும். உயர்மட்டச் சாலைக்கான இணைப்பு மற்றும் அணுகுச்சாலைகளை வடிவமைக்க வேண்டும். மழைநீர் தேங்காமல் வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். குறுக்குக் கால்வாய் மற்றும் வடிகால் பணிகளை மேற்கொள்ள வேண்டும். போக்குவரத்து இயக்கத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளையும் வடிவமைப்புகளையும் மேற்கொள்ள வேண்டும். சர்வீஸ் ரோடு எனச் சொல்லப்படுகிற சேவைச் சாலைகளைத் தேவையான இடங்களில் வடிவமைக்க வேண்டும். அங்கிருந்து தேவைப்பட்டால் போக்குவரத்துக்கான மாற்றுப்பாதைகளைத் திட்டமிட வேண்டும்.

திட்டத்தின் நோக்கம் என்ன?

இந்த உயர்மட்டச் சாலையின் நோக்கம், சாந்தோம் முதல் அடையாறு வரை நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதாக இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. அந்தப் பகுதியில் சாலை விரிவாக்கம் செய்ய நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல்கள் இருப்பதால், உயர்மட்டச் சாலை சிறந்த தீர்வாகக் கருதப்படுகிறது.

Source link