TN Govt Employees Letter To CM,அரசு ஊழியர்களுக்கான காப்பீட்டுத் திட்டம்: முதல்வருக்கு கடிதம் – சிகிச்சைப் பெறுவதில் சிக்கல் – tamil nadu govt employees association letter to cm regarding new insurance scheme issue

தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான புதிய நல்வாழ்வுக் காப்பீட்டுத் திட்டத்தில் முறையான அறிவிப்பின்றி புதிய நிறுவனங்கள் சேர்க்கப்பட்டதன் காரணமாக உரிய நேரத்தில் சிகிச்சை பெற முடியாமல் அரசு ஊழியர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது தொடர்பாகத் உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. இதற்கு தீர்வு கேட்டு தமிழக அரசுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பாக கடிதம் எழுதப்பட்டுள்ளது.

தமிழக அரசின் அரசாணையின்படி, புதிய நல்வாழ்வுக் காப்பீட்டுத் திட்டம் யுனைடெட் இந்தியா நிறுவனத்தின் மூலம் அமல்படுத்தப்படும் என்றும், இந்நிறுவனத்தின் துணை நிறுவனங்களாக எம்டி இந்தியா மற்றும் மெடி அசிஸ்ட் ஆகிய இரண்டும் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த ஒரு வார காலமாக யுனைடெட் இந்தியா நிறுவனத்தின் கீழ் மெடி அசிஸ்ட், விடால் மற்றும் கிட்பா ஆகிய மூன்று புதிய நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. காப்பீட்டுத் திட்டத்தில் புதிய நிறுவனங்களை இணைப்பது குறித்து தமிழக அரசு தரப்பிலிருந்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

ஏற்கனவே உள்ள தரவுகளைப் புதிய நிறுவனங்கள் பதிவேற்றம் செய்வதில் ஏற்படும் காலதாமதத்தால், மருத்துவமனைக்குச் செல்லும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களால் காப்பீட்டுப் பலனைப் பெற முடியவில்லை. காப்பீட்டு ஒப்புதல் கிடைக்காததால் பலரும் தங்களது சொந்தப் பணத்தைச் செலுத்திவிட்டு மருத்துவமனையிலிருந்து வெளியேறும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்ட வேளாண்மைத் துறையில் பணிபுரியும் அரசு ஊழியர் ஒருவர், தனது மகளுக்குச் சிகிச்சை அளிக்க கோவையில் உள்ள கே.ஜி. மருத்துவமனையில் கடந்த 17.10.2026 அன்று காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அனுமதித்துள்ளார்.

ஆனால், 21.10.2026 இரவு வரை காப்பீட்டு நிறுவனம் சிகிச்சைக்கான ஒப்புதலை வழங்கவில்லை. மேலும், இது தொடர்பாகக் கருவூலத் துறைக்குத் தவறான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதும் தங்களின் கவனத்திற்குக் கொண்டுவரப்படுகிறது. தமிழக அரசு இந்தப் பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் எத்தகைய தடையுமின்றி, தாமதமின்றி காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் சிகிச்சை பெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

காப்பீட்டுத் திட்டத்தில் எத்தகைய மாற்றங்களைச் செய்வதாக இருந்தாலும், அது குறித்து அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும். உரிய கால அவகாசம் வழங்கி, அது குறித்த விபரங்களை அரசு ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் தெரிவிக்கும் வகையில் பத்திரிகைச் செய்தி வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. காப்பீட்டுத் திட்டத்தை புதிய நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்து அமல்படுத்துவதால் தமிழகம் முழுவதும் அரசு ஊழியர், ஆசிரியர்கள் காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை பெற முடியாமல் அல்லல்பட்டு கொண்டிருக்கின்றனர். தமிழக அரசு உடனடியாக இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

Source link