தமிழகத்தை உலுக்கி வரும் குற்றச் சம்பவங்களில் ஒன்று ஜெம் வீரமணி வழக்கு. இதில் காவல்துறை உயர் அதிகாரி ராதிகா ஐபிஎஸ் அவர்களிடம் சிறப்பு புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த சூழலில் இவரது பின்னணி குறித்த தகவல்கள் பெரிதும் கவனம் பெற்றுள்ளன.
டிஜிபி அலுவலகத்தில் இருந்து பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் ராதிகா ஐபிஎஸ். இவர் நிர்வாக பிரிவு ஐஜியாக பணியாற்றி வந்தவர். ஜெம் வீரமணி சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணை வளையத்திற்குள் இவரும் கொண்டு வரப்பட்டுள்ளார். ஏனெனில் கடந்த திமுக ஆட்சியில் புகார் அளிக்கப்பட்டும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த வழக்கை விசாரிக்காமல் காலம் தாழ்த்தவும், கிடப்பில் போடவும் பலருக்கு பணம் கைமாறியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஜெம் வீரமணி வழக்கு – வீடியோ ஆதாரத்துடன் புகார்
இதில் யாரெல்லாம் தொடர்புடையவர்கள் என்ற கோணத்தில் சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். குறிப்பாக கடந்த ஆண்டு நவம்பரில் ஜெம் வீரமணிக்கு எதிராக பென் டிரைவ் வீடியோவை ஆதாரமாக அளித்து குழந்தைகள் நல ஆர்வலர் ஒருவர் சென்னை போலீசில் புகார் அளித்திருந்தார். அப்போது சென்னை போலீசில் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக பணியாற்றியவர் ராதிகா ஐபிஎஸ். ஆனால் திடீரென விடுமுறையில் சென்றிருக்கிறார். வழக்கு விசாரணை ஒருபுறம் முக்கியமானதாக பார்க்கப்பட்ட சூழலில், மறுபுறம் இவர் விடுப்பில் சென்றது பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
சம்பவம் செய்த TVK Warriors! அம்பலமான தொழிலதிபர் வீரமணி
ராதிகா ஐபிஎஸ் எடுத்த விடுப்பு
இதன் பின்னணியில் தனிப்பட்ட காரணங்கள் இருக்கின்றன என்று கூறினாலும் சர்ச்சை ஓய்ந்தபாடில்லை. பல கோணங்களில் விமர்சனங்களை, கேள்விகளை முன்வைத்தனர். முதலமைச்சர் விஜய் தலைமையில் தவெக ஆட்சி அமைந்துள்ள நிலையில், தற்போது சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். இவர்களின் விசாரணை ராதிகா ஐபிஎஸ் பக்கம் திரும்பிய நிலையில், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இவரது இடத்திற்கு திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
யார் இந்த ராதிகா ஐபிஎஸ்?
2004ஆம் ஆண்டு பேட்சை சேர்ந்தவர். ஆனால் நேரடியாக யுபிஎஸ்சி தேர்வு எழுதி ஐபிஎஸ் ஆனவர் இல்லை. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப் 1 தேர்வெழுதி டி.எஸ்.பியாக தேர்ச்சி பெற்றார். அதன்பிறகு ஏடிஎஸ்பி, எஸ்.பி என பதவி உயர்வு பெற்றார். இந்நிலையில் சீனியாரிட்டி மற்றும் மாநில காவல்துறையில் ஆற்றிய சிறப்பான சேவை ஆகியவற்றின் அடிப்படையில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் ஐபிஎஸ் கேடருக்கு உயர்த்தப்பட்டார்.
மாநில காவல்துறை டூ ஐபிஎஸ் கேடர் – விதிகள் சொல்வது என்ன?
தொடர்ந்து 8 ஆண்டுகள் மாநில காவல்துறையில் டிஎஸ்பி அல்லது அதற்கு மேல் அதிகாரம் கொண்ட பதவியில் பணியாற்ற வேண்டும். பதவி உயர்வு அளிக்கப்படும் ஆண்டின் ஜனவரி ஒன்றாம் தேதி அன்று 56 வயதுக்கு உட்பட்டவராக இருப்பது அவசியம் வருடாந்திர காவல்துறை செயல்பாட்டு அறிக்கையில் நற்பெயர் எடுத்திருக்க வேண்டும். எந்தவித புகார்களும் வந்திருக்கக் கூடாது. பணிக்காலத்தை சிறப்பான முறையில் கடந்திருக்க வேண்டும். ஐபிஎஸ் காலியிடங்களுக்கு ஏற்ப மாநில போலீசில் இருந்து தகுதி வாய்ந்த உயர் அதிகாரிகளின் பெயர்களை தமிழக அரசு பரிந்துரை செய்யும். கடைசியில் யுபிஎஸ்சி தேர்வுக் குழு மூலம் உரிய வழிகாட்டுதல்கள், படிநிலைகளை அடுத்து ஐபிஎஸ் கேடரில் நியமிக்கப்படுவார்.
காத்திருப்போர் பட்டியலில் ராதிகா ஐபிஎஸ்
எனவே தனது பதவி காலத்தில் ராதிகா சிறப்பான முறையில் பணியாற்றியதன் காரணமாகவே ஐபிஎஸ் கேடருக்கு உயர்த்தப்பட்டார். ஆனால் ஜெம் வீரமணி வழக்கு விசாரணையின் போது எடுத்த விடுப்பு பெரிய சர்ச்சையாக மாறி, காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றும் அளவிற்கு போய் விட்டு விட்டது.
Source link
