சென்னை,
நடிகரும், த.வெ.க., தலைவருமான விஜய், ‘ஜன நாயகன்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை கே.வி.என். புரொடக்ஷன் நிறுவனம் ரூ.500 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரியாமணி, மமிதா பைஜு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படத்துக்கு தணிக்கை சான்று கேட்டு விண்ணப்பிக்கப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை வாரிய குழுவினர், மதம் மற்றும் பாதுகாப்பு படை தொடர்பான காட்சிகள் இடம் பெற்றுள்ளதால், இந்த படத்தை மறுஆய்வு குழு பரிசீலனைக்கு பரிந்துரை செய்தனர். நீண்ட போராட்டத்திற்கு பின் ‘ஜன நாயகன்’ படத்தை மறுதணிக்கை செய்ய தணிக்கை வாரியத்திற்கு படத் தயாரிப்பு நிறுவனம் படத்தை அனுப்பியது. தமிழ்நாடு சட்டசபை தேர்தல் முடிவடைந்தவுடன் மே இரண்டாவது வாரத்தில் ஜன நாயகன் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர்.
இதற்கிடையில், ஜன நாயகன் முழு படமும் நேற்று முன்தினம் மாலை இணையத்தில் வெளியானது. இதனால் படத் தயாரிப்பு நிறுவனமும், படக்குழுவினரும், ரசிகர்களும் பேரதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர். ‘ஜன நாயகன்’ படம் இணையத்தில் வெளியானதற்கு நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிரஞ்சீவி உள்ளிட்ட பல திரைபிரபலங்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். படக்காட்சிகளை யாரும் சமூக வலைதளங்களில் பகிர வேண்டாம் என படக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த நிலையில், ஜனநாயகன் திரைப்படம் ,இணையத்தில் கசிந்ததற்கு நடிகை பூஜா ஹெக்டே வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எனது அன்பிற்குரிய ரசிகர்களே! ஒரு திரைப்படம் என்பது எண்ணற்ற மணிநேர உழைப்பு, படைப்பு சார்ந்த துணிச்சலான முயற்சிகள், தனிப்பட்ட தியாகங்கள் மற்றும் உங்களுக்குச் சாத்தியமான மிகச்சிறந்த அனுபவத்தை வழங்க வேண்டும் என்ற நம்பிக்கையுடன் ஒவ்வொரு நாளும் தவறாமல் களத்தில் நின்ற ஒரு குழுவின் கூட்டு முயற்சியின் விளைவாகும்.
எங்கள் திரைப்படம் இணையத்தில் கசிந்திருப்பதைப் பார்ப்பது, எனக்கு மட்டுமல்லாமல், இத்திரைப்படத்தில் பணியாற்றிய ஒவ்வொரு தனிநபருக்கும் மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. இப்படம் சட்டவிரோதமாகக் கசியவிடப்படுவதையும், பகிரப்படுவதையும் பார்ப்பது மிகவும் வேதனையானது—இது வசூல் ரீதியான எண்களைக் குறித்த கவலை அல்ல; மாறாக, இத்திரைப்படத்தில் பணியாற்றிய ஒவ்வொரு கலைஞரும் தொழில்நுட்பக் கலைஞரும் தங்களுக்கு உரித்தான மரியாதையை இழக்க நேரிடுகிறதே என்பதுதான் இதற்குக் காரணம்… மேலும், விஜய் சாரின் கடைசிப் படத்தை, ‘கடைசி முறையாக’, பெரிய திரையில், உரிய முறையில் ஒன்றாகக் கூடி நின்று கொண்டாடி ரசிக்கும் உரிமை நம் அனைவருக்கும் இல்லையா?
எனவே, நாம் இப்படத்தை உரிய முறையிலேயே காண்போம்… சற்றுப் பொறுத்திருப்போம். அதற்கான சரியான நேரத்தில் இப்படம் நிச்சயம் வெளியாகும். திரைப்படத் திருட்டுத்தனத்தை (Piracy) நாம் ஒருபோதும் ஊக்குவிக்க வேண்டாம். அவ்வாறு செய்தால்தான், சினிமாவும் கலையும் தொடர்ந்து உயிர்ப்புடன் நிலைத்திருக்க முடியும்.” என்று பதிவிட்டுள்ளார்.
