தமிழகத்தில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் சென்னை , காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தென் தமிழகப் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மாலையில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது.
தமிழகத்தில் கொட்டி தீர்க்கும் கனமழை
மதுரை மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மாலை வேளையில் திடீரென மேகமூட்டம் ஏற்பட்டு, பரவலாக மழை பெய்யத் தொடங்கியது. மாநகரப் பகுதிகளான மாட்டுத்தாவணி, பழங்காநத்தம், காளவாசல், பெரியார் பேருந்து நிலையம் மற்றும் சிம்மக்கல் ஆகிய இடங்களில் மிதமான முதல் கனமழை பதிவானது.அதேபோல், புறநகர்ப் பகுதிகளான திருப்பரங்குன்றம், திருநகர் மற்றும் பெருங்குடி விமான நிலையப் பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியபோதிலும், மாலையில் பணி முடிந்து வீட்டிற்குத் திரும்பிய வாகன ஓட்டிகள் சற்றே சிரமத்திற்கு உள்ளாகினர்.
தென் மாவட்டங்களில் பரவலாக மழை
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் கூடிய அதி கனமழை வெளுத்து வாங்கியது. தொடர் மழையின் காரணமாக சாத்தூர் காவல் நிலைய வளாகத்திற்குள் மழைநீர் புகுந்ததுடன், நகரின் முக்கியச் சாலைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகினர்.
இந்த நிலையில், இன்று அக்.23 ஆம் தேதி சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் அதிகாலை முதல்வே மழை பெய்து வருகிறது. இது குறித்து தமிழ்நாடு வானிலை ஆய்வாளர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் மீண்டும் ஒரு சிறந்த மழை நாளாக இன்றைய நாள் விடிந்துள்ளது. தலைநகர் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை முதலே மேகமூட்டத்துடன் கூடிய மழைக்காலச் சூழல் நிலவி வருகிறது.
சென்னை வானிலை நிலவரம்
தெற்குச் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் பல மணி நேரமாகக் குவிந்திருந்த மேகக்கூட்டங்கள், மெதுவாக நகர்ந்து சென்னை நகர்ப்பகுதிக்குள் நுழையத் தொடங்கியுள்ளன. முதற்கட்டமாகக் கடலோரப் பகுதிகளில் தொடங்கவுள்ள இம்மழை, படிப்படியாக நகரின் பெரும்பாலான இடங்களுக்கும் பரவக்கூடும்.
சூரியன் வெளிவரத் தொடங்குவதைத் தொடர்ந்து, மழையின் தீவிரத்தன்மை சற்று தணிந்து, நாள் முழுவதும் சீரான மிதமான மழை அல்லது சாரல் மழை நீடிக்க வாய்ப்புள்ளது. சென்னைக்கு இன்றைவிட அக்டோபர் 24, 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் மிகச் சிறப்பான கனமழைக்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.
தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பரவலான மழை
சென்னையைத் தவிர்த்து, தமிழகத்தின் உள் மாவட்டங்கள், டெல்டா பகுதிகள் மற்றும் தென் தமிழகப் பகுதிகளில் பரவலாக நல்ல மழை பதிவாகியுள்ளது.
குறிப்பாக விருதுநகர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, தென்காசி, திருப்பூர், அரியலூர், மயிலாடுதுறை (மயிலாடுதுறை டெல்டா பகுதிகள்), திருவாரூர், கடலூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் பரவலாகக் கனமழை பெய்துள்ளது.
தொடர்ந்து நிலவி வரும் இந்த மேகமூட்டமான சூழலால், விவசாயிகளும் பொதுமக்களும் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
