அமைச்சர் வன்னி அரசு இரட்டை நிலைப்பாடு: சத்தியபாமா பேசிய விசிக, கார்த்திகாவிற்கு சைலண்ட் – minister vanni arasu double standard and vck silent ntk karthika arrested

தாராபுரத்தில் நாதக கார்த்திகா கைதைக் கண்டித்து, அரசை விமர்சித்த அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்து நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், அறிக்கையைக் குறிப்பிட்டு, திமுகவுக்கும் வெட்கமில்லை நாதகவுக்கும் வெட்கமில்லை என விமர்சித்து தமிழ்நாடு சமூக நீதி அமைச்சர் வன்னி அரசு நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்த அறிக்கை சமூக வலைதளங்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருள் ஆனது. அதனைத் தொடர்ந்து அமைச்சர் வன்னி அரசை நாம் தமிழர் கட்சியினரும் திராவிட முன்னேற்றக் கழகத்தினரும் விமர்சித்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சத்தியபாமாவுக்கு ஆதரவாக இறங்கிய அமைச்சர்

கடந்த தாராபுரம் இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு. க. ஸ்டாலின், அக்கட்சி வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சத்தியபாமாவை விமர்சித்துப் பேசிய அவர், அவரை உருவகேலி செய்து பேசியது கடும் விமர்சனம் மற்றும் சர்ச்சைக்கு உள்ளானது. அப்போது அமைச்சர் வன்னி அரசு மு. க. ஸ்டாலினை விமர்சித்தும், சத்தியபாமாவிற்கு ஆதரவாகவும் அறிக்கை வெளியிட்டார்.

அதில், உருவக்கேலி கூடாது என்று வழிகாட்டக்கூடிய தலைவரான அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்களே இப்படி பேசி இருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. ஆணாதிக்கம் மிகுந்த சமூகக் கட்டமைப்பில் பெண்கள் பொது வாழ்க்கைக்கு வருவதே அரிது. அதுவும் தலித் பெண்கள் வருவது அதனினும் அரிது என அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

நாதக – திமுக மீது விமர்சனம்

கலைஞரை தெலுங்கன் என்றும் திருட்டு திமுக என்றும் மிகக் கேவலமாக, அநாகரீகமாக மேடைகளில் பிதற்றியவர் சீமான். அதுமட்டுமல்ல, கலைஞர் அரசாணை பிறப்பித்த ஒரே காரணத்தால், மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை நிராகரித்த பார்ப்பனிய அடிமைதான் சீமான்.

இப்படி கோட்பாட்டு வழியிலும் தனிநபர் தாக்குதலிலும் ஈடுபட்ட பிழைப்புவாதி சீமானின் இழிவான அரசியலை திமுக மறந்திருக்கலாம். விடுதலைச் சிறுத்தைகளைப் பொறுத்தவரை தந்தை பெரியாரையும் புரட்சியாளர் அம்பேத்கரையும் ஏற்றுக்கொண்டவர்களைத் தான் ஏற்கும். பார்ப்பனிய அடிமைகளை ஏற்காது. இப்போது திமுகவுக்கும் வெட்கமில்லை; நாதகவுக்கும் வெட்கமில்லை என அமைச்சர் வன்னி அரசு கடுமையாக விமர்சித்திருந்தார்.

அமைச்சர் வன்னி அரசு இரட்டை நிலைப்பாடா

சத்தியபாமாவிற்கு ஆதரவாக அமைச்சர் வன்னி அரசு அறிக்கை வெளியிட்டபோது, ஆணாதிக்கம் மிகுந்த சமூகக் கட்டமைப்பில் பெண்கள் பொது வாழ்க்கைக்கு வருவதே அரிது. அதுவும் தலித் பெண்கள் வருவது அதனினும் அரிது தெரிவித்தார். ஆனால் நாதக வேட்பாளர் கார்த்திகா வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த வேளையில், இரவு அணிந்திருந்த ஆடையுடனே கைது செய்யப்பட்டதற்கு, அவர் எந்த ஒரு கண்டனமும் விமர்சனமும் தெரிவிக்கவில்லை எனவும், கண்டனம் தெரிவித்தவர்களுக்கு சீமான் நன்றி தெரிவித்ததால், வெட்கமில்லை எனக் கூறியிருப்பது, அதிகாரத்திற்காக அமைச்சர் வன்னி அரசு இரட்டை நிலைப்பாட்டை எடுத்துள்ளார் எனவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

விசிகவிடம் இருந்து கண்டனம் வராதது ஏன்?

நாதக வேட்பாளர் கார்த்திகாவும் தலித் வேட்பாளர்தான். அப்படி இருக்கையில், சமூக நீதி, பெண் விடுதலை பேசும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் யாரிடம் இருந்து, கார்த்திகா கைதைக் கண்டித்தோ, தமிழக அரசை விமர்சித்தோ அறிக்கை ஏன் வெளியாகவில்லை என எதிர்க்கட்சிகள் தற்போது கேள்வி எழுப்புகின்றனர்.

அமைச்சருக்கு நினைவிருக்கிறதா

இந்தச் சூழலில் கடந்த தேர்தலுக்கு முன்னர் திமுக கூட்டணியில் இடம்பெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் முதல்வர் விஜய்யைக் கடுமையாக விமர்சித்தார். அதுபோல அமைச்சர் வன்னி அரசும் விஜய் மீது கடும் விமர்சனத் தாக்குதல்களை முன்வைத்தார். தற்போது அந்தக் காணொளிகளை மீண்டும் குறிப்பிட்டு, நாதகவினர் உங்களுக்கு இதெல்லாம் நினைவிருக்கா என விமர்சித்து வருகின்றனர்.

Source link