Gold Appraiser Training,நகை மதிப்பீட்டாளர் பயிற்சி: தமிழக அரசு ஏற்பாடு – தேதி இதுதான், யூஸ் பண்ணிக்கோங்க – tamil nadu govt conducting 5 day gold appraiser training from october 25th

தமிழ்நாடு அரசு சார்பாக நடத்தப்படும் ஐந்து நாள் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழக அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் சென்னையில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி வருகிற அக்டோபர் 26ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரையில் ஐந்து நாட்கள் நடைபெற உள்ளது. இப்பயிற்சியானது, நிறுவன வளாகத்தில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடத்தப்படுகிறது.

இந்தப் பயிற்சியில் தங்கம் , வெள்ளி போன்ற உலோகங்களின் தரம் அறிதல், காரட் மதிப்பீடுகள், ஆசிட் சோதனை, எடை அளவு இணைப்பான், விலை நிர்ணயிக்கும் முறை, ஹால்மார்க் மற்றும் போலியான நகைகளை அடையாளம் காணும் நடைமுறைகள் விரிவாகக் கற்றுத்தரப்படும். மேலும், ஆபரணக் கடனுக்கான கணக்கீட்டு முறைகள் மற்றும் தங்க அணிகலன் வகைகள் பற்றிய பயிற்சியும் அளிக்கப்படுகிறது. அதோடு, பொதுத்துறை, கூட்டுறவு மற்றும் தனியார் வங்கிகளில் நகை மதிப்பீட்டாளர் பணிக்கான வேலைவாய்ப்புகள் மற்றும் அவற்றைப் பெறும் நடைமுறைகள் விளக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய மற்றும் மாநில அரசுகளின் கடனுதவி திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்த ஆலோசனைகளும் இப்பயிற்சியில் வழங்கப்படும்.

இந்தப் பயிற்சியில் 18 வயதிற்கு மேற்பட்ட ஆர்வமுள்ள தொழில்முனைவோர்கள் (ஆண், பெண், திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள்) அனைவரும் கலந்துகொள்ளலாம். இதற்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்பயிற்சியில் பங்குபெறும் பயனாளிகளுக்கென குறைந்த வாடகையில் தங்கும் விடுதி வசதியும் உள்ளது. தேவைப்படுவோர் இதனை விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளலாம். பயிற்சி முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி குறித்த கூடுதல் விவரங்களைப் பெறவும், முன்பதிவு செய்யவும் http://www.editn.in என்ற இணையத்தளத்தைப் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை 8668100181, 9360221280 ஆகிய மொபைல் எண்களில் தொடர்புகொள்ளலாம்.

தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி:

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், இ.டி.ஐ.ஐ அலுவலக சாலை, சிட்கோ தொழிற்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, சென்னை – 600 032.

தமிழக அரசு சார்பாக இதுபோன்ற பல்வேறு பயிற்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. நகை மதிப்பீட்டாளர் பயிற்சி மட்டுமல்லாமல், மொபைல் போன் பழுதுபார்ப்பு, சிசிடிவி கேமிரா பொருத்துதல், ஐடி பயிற்சி, கணினி பயிற்சி போன்ற பல பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. இதன் மூலம் பல இளைஞர்கள் வெகுவாகப் பயன்பெற்று வருகின்றனர்.

Source link