தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், தனது இல்லத்தை மாற்றுவது தொடர்பான விவாதம் தற்போது கவனம் பெற்றுள்ளது. சென்னையில் உள்ள பொதிகை வளாகத்தில் அமைந்துள்ள அரசு இல்லத்தை முதல்வர் பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக அந்த வீட்டில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
முதல்வர் விஜய் பயணத்தில் சவால்
தற்போது நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்திலிருந்து தலைமைச் செயலகத்துக்குச் சென்று வரும் விஜய்க்கு, தினசரி பயணம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாகப் பல்வேறு சவால்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, தலைமைச் செயலகத்துக்கு அருகில் உள்ள அரசு இல்லத்துக்கு மாறுவது குறித்து பரிசீலிக்கப்படுவதாகத் தெரிகிறது.
அதேநேரம் சென்னை பட்டினப்பாக்கம் இல்லத்திற்கு சில சமயங்களில் மட்டுமே, அவர் அலுவலக வேலைகளுக்காக சென்று தங்கி வருகிறார். அந்தப் பட்டினப்பாக்கம் இல்லத்தை அவர் தனது முகாம் அலுவலகமாக தற்போதைக்கு பயன்படுத்தி வருகிறார்.
பொதுமக்கள் சந்திக்கும் பாதிப்புகள்
விஜய் அவர்கள் நீலாங்கரையில் இருந்து கோட்டைக்கு வரும் வழியில் பல முக்கிய இணைப்புச் சாலைகள் அமைந்துள்ளன. எனவே அவர் அந்தப் பகுதிகளைக் கடக்கும் போது, பாதுகாப்பு அளிப்பதற்காகச் சாலைப் போக்குவரத்தை முழுமையாக நிறுத்தி வைக்க வேண்டியுள்ளது. முதலமைச்சரின் பாதுகாப்புக்கான இந்த ஏற்பாட்டினால் அப்பகுதியில் தினமும் பொதுமக்களுக்கும் பெரும் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது
முதலமைச்சரின் புதிய விருப்பம்
தன் வழக்கமான பயணத்தினால் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படுவதை அவர் விரும்பவில்லை. எனவே, மக்கள் பாதிப்பைத் தவிர்க்கும் வகையில் தலைமைச் செயலகத்திற்கு மிக அருகிலேயே தங்குவதற்கு அவர் விருப்பம் தெரிவித்து இருந்தார். அதைத்தொடர்ந்து, சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் மற்றும் அமைச்சர்கள் தங்கி இருக்கும் வீடுகள் அமைந்துள்ள ஆர்.ஏ.புரம் பகுதியில் உள்ள டி.ஜி.எஸ்.தினகரன் சாலையில், தகுந்த அரசு இல்லத்தை அதிகாரிகள் தேடி வந்தனர்.
பொதிகை வளாக வீடு தேர்வு
இந்தநிலையில் அங்கு தொல்காப்பிய பூங்காவிற்கு எதிரே உள்ள பொதிகை வளாகத்தில் அமைந்துள்ள ஒரு அரசு இல்லத்தை அதிகாரிகள் தேர்வு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அது, தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச்செயலாளர் இறையன்பு வசித்த வீடாகும். ஏற்கனவே உயர் பாதுகாப்புக்குள்ளான பகுதி என்பதாலும், இங்கிருந்து தலைமைச் செயலகத்துக்கு உடனே சென்று வர முடியும் என்பதாலும் அதிகாரிகள் இந்த வீட்டைத் தேர்வு செய்ததாகக் கூறப்படுகிறது.
தற்போதைய நிலையும் அடுத்தகட்ட முடிவும்
தற்போது காலியாக இருந்த அந்த பொதிகை வளாக வீட்டைப் புனரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், போலீஸ் அதிகாரிகளும் அந்த இல்லத்திற்குச் சென்று அதன் சுற்றுப்புற சூழல், பாதுகாப்பு, மற்றும் போக்குவரத்து வசதி உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவான ஆலோசனை நடத்தி வருகின்றனர். வீட்டை முழுமையாகப் புனரமைத்த பிறகு அதை முதல்-அமைச்சர் விஜயிடம் காட்ட அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்; அதை நேரில் பார்த்த பிறகு முதல்-அமைச்சர் விஜய் எடுக்கும் முடிவின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் என்று தெரிகிறது.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
புதிய இல்லப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் தனி வழிகள் மற்றும் நவீன கண்காணிப்பு வசதிகள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் வாகனப் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாதவாறு புதிய வரைபடம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
