கரூரில் 41 உயிர்கள் பலியான சோகம் மறைவதற்குள் சென்னையில் பல கோடியில் சொகுசு வீடு வாங்கிய ஜான் ஆரோக்கியசாமி! – luxury house in chennai for john arockiasamy just 26 days after karur tragedy claims 41 lives

கரூரில் 41 பேர் பலியான சோகம் மறைவதற்குள், ஜான் ஆரோக்கியசாமி சென்னையில் பல கோடி சொத்து வாங்கியதாகக் கூறப்படும் சான்று சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

கடந்த சில தினங்களாகவே சமூக வலைதளப் பக்கங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையிலான சில ஆவணப் புகைப்படங்கள் மிக வேகமாகப் பகிரப்பட்டு வருகின்றன. கரூரில் 41 உயிர்கள் பலியான பெரும் சோகம் மறைவதற்குள், ஜான் ஆரோக்கியசாமி சென்னையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஒன்றைக் கிரயம் செய்துள்ளார் என்ற தகவலுடன் கூடிய பதிவுகள் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகின்றன.

பரபரப்பை ஏற்படுத்திய 26 நாட்கள் இடைவெளி

கடந்த 2025 செப்டம்பர் 27 அன்று கரூரில் நடந்த தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் 41 உயிர்கள் பலியாகினர். இந்த ஒட்டுமொத்த மரணங்கள் குறித்து மாநிலமே அதிர்ச்சியில் ஆழ்ந்து, அடுத்தகட்ட விசாரணைகள் தீவிரமாகப் பேசப்பட்டு வந்த காலகட்டம் அது. ஆனால், நாடே அந்தத் துயர நிகழ்விலிருந்து மீளாமல் துக்கத்தில் மூழ்கியிருந்த அந்தச் சமயத்தில், சரியாக 26 நாட்களுக்குப் பிறகு இந்தச் சொத்துப் பரிவர்த்தனை நடந்துள்ளதாக நெட்டிசன்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.​

ஆவண ஆதாரங்களுடன் வெளியாகும் பதிவுகள்

சமூக வலைதளங்களில் நெட்டிசன்களால் ஆதாரமாக முன்வைக்கப்படும் 2025 அக்டோபர் 23 தேதியிட்ட அந்தப் பதிவுகளில், தமிழ்நாடு அரசு பதிவுத்துறையின் அதிகாரப்பூர்வ வில்லங்கச் சான்று நகல்களும் இணைக்கப்பட்டுள்ளன. பெரியமேடு சார்பதிவாளர் அலுவலக வரம்பிற்குட்பட்ட பகுதியில், கரூர் சம்பவம் நடந்த மிகக் குறுகிய கால இடைவெளியிலேயே இவ்வளவு பெரிய பணப் பரிவர்த்தனையுடன் கூடிய சொத்து விற்பனை எப்படி சாத்தியமானது என்ற கேள்விகள் இணையத்தில் எழுப்பப்பட்டு வருகின்றன.​

வைரலாகும் வில்லங்கச் சான்றின் பின்னணி

இணையத்தில் கசிந்து வைரலாகி வரும் அந்த சான்றின்படி, சென்னை கீழ்ப்பாக்கம் கார்டன் பிரதான சாலையில் உள்ள ‘நியூரி சம்ப்ரீதி’ (Newry Sampreeti) அடுக்குமாடிக் குடியிருப்பில் இந்தச் சொத்து வாங்கப்பட்டுள்ளது. ஆர். கௌஷிக் என்பவரிடமிருந்து, ஜான் ஆரோக்கியசாமி பெயரில் இந்த 2-வது தளத்தில் உள்ள 848 சதுரடி ஆடம்பர வீடு இரண்டு கார் பார்க்கிங் வசதிகளுடன் வாங்கப்பட்டுள்ளது.​

சந்தை மதிப்பு குறித்து எழும் கடுமையான விவாதங்கள்

அரசு ஆவணங்களின்படி இந்தச் சொத்தின் வழிகாட்டி மதிப்பு தொகை ரூ. 2,60,00,000 (இரண்டு கோடியே அறுபது லட்சம் ரூபாய்) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், சென்னை கீழ்ப்பாக்கத்தின் தற்போதைய நிலவரப்படி இதன் உண்மையான சந்தை மதிப்பு (Market Value) 5 முதல் 7 கோடி ரூபாய் வரை இருக்கும் எனச் சமூக வலைதளப் பதிவுகளில் விவாதிக்கப்பட்டு வருகிறது. இக்கட்டான ஒரு காலகட்டத்தில் இவ்வளவு பெரிய தொகைக்குச் சொத்து பரிவர்த்தனை செய்யப்பட வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்விகளுடன் இந்த விவாதம் சூடுபிடித்துள்ளது.

நெட்டிசன்களின் கேள்விகளையும் தற்போதைய நிலையும்

ஒவ்வொரு உயிருக்கும் விசாரணை என்று மக்கள் பேசிக்கொண்டிருந்த வேளையில், விஜயின் தவெக கட்சியின் தேர்தல் வியூப வகுப்பாளரான் ஜான் ஆரோக்கியசாமி பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தைக் குவிப்பதில் மும்முரமாக இருந்ததாகக் கூறி இந்த ஆவணம் தற்போது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. எனினும், சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்த வில்லங்கச் சான்று மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து ஜான் ஆரோக்கியசாமி தரப்பில் இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கப்படும் என எதிர்பாக்கப்படுகிறது.​
Source link