புது புது நடிகர்கள் டெல்லியில போய் உக்காந்திருக்காங்க: தனுஷை சீண்டிய ஆதவ்? 2029 அரசியல் கணக்கு? – new actors in delhi is aadhav arjuna taking a dig at dhanush

நடிகர் விஜய்யின் அரசியல் வருகையைத் தொடர்ந்து, தமிழகத்தில் சினிமா பிரபலங்களின் அரசியல் நகர்வுகள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தச் சூழலில், நடிகர் தனுஷின் ரசிகர் மன்றம் நற்பணி இயக்கமாக மாற்றப்பட்டதும், அவரது அரசியல் வருகை குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன.

இந்தியாவின் வெற்றி தமிழகத்தில் உருவாக்கப்படும். 2029 தேர்தலில் யார் பிரதமர் என்பதை மதச்சார்பற்ற சமூக நீதிக் கூட்டணிதான் முடிவு செய்யும். இந்த பிம்பத்தை உடைக்கத்தான் புதுப்புது நடிகர்கள் டெல்லியில் போய் உட்கார்ந்திருக்கிறார்கள் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியிருப்பது அரசியல் மற்றும் சினிமா துறையிலும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

விஜய்யின் வெற்றிக்குப் பிறகு..

2026 ஆம் ஆண்டில் விஜய்க்குக் கிடைத்த வெற்றி தமிழக அரசியலில் அனைவரின் பிம்பத்தையும் இதுவரை இருந்த மரபு பார்வைகளையும் உடைத்திருக்கிறது. இதே சமயத்தில், விஜய்க்குப் பிறகு சினிமா பிரபலங்கள் பலரும் தங்களின் அரசியல் ஆசையை மிக வெளிப்படையாகப் பொதுவெளியில் பேசத் தொடங்கியிருக்கின்றனர். இந்த வகையில், பிரபல நடிகரான தனுஷ் அரசியலில் காலடி எடுத்து வைக்கப் போகிறார் என்பதற்கான சான்றுகளுடன் கூடிய பல நிகழ்வுகள் சமகாலத்தில் நடைபெற்று வருகின்றன.

ரசிகர் மன்றம் இயக்கமாக மாறியது

சமீபத்தில்தான் தனது ரசிகர் மன்றத்தைத் தனுஷ் நற்பணி இயக்கமாக மாற்றியிருக்கிறார். ஒரு ரசிகர் மன்றம் இயக்கமாக மாறுகிறது என்றால், அது அடுத்த கட்ட நகர்வான அரசியல்தான் என்பது தமிழகத்திற்குப் புதிதல்ல. அதோடு மட்டுமல்லாது, முதல் கட்டமாகக் கோவையில் சட்டமன்றத் தொகுதி வாரியாக இயக்கத்தைப் பிரித்து, அதற்கான வேலைகளையும் தனுஷ் மேற்கொண்டு வருகிறார்.

நிர்வாகிகளுடன் ஆலோசனை:

மேலும், குறிப்பிட்ட இடைவெளியில் நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தி, மிகப் பொறுமையாகக் காய்களை நகர்த்தி வருகிறார் தனுஷ்.

டெல்லியில் தனுஷ்?

இந்தச் சூழலில்தான் தனுஷ் டெல்லி சென்று முக்கியப் பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்தியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இது உண்மையில் தமிழக அரசியல் களத்தில் அடுத்த கட்ட நகர்வு என்ன என்ற கேள்வியை ஏற்படுத்தியிருக்கிறது.

புதிய நடிகர்கள் டெல்லியில் முகாம்: ஆதவ் பேசியது என்ன?

இந்தச் சூழலில்தான் நேற்று ஒரு நிகழ்வில் கலந்துகொண்ட விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், “வெற்றி தமிழகத்திலிருந்து உருவாக்கப்படும். 15 வருஷம் என்ன நடந்துச்சுன்னு விட்டுருங்க. இந்தியாவின் வெற்றி தமிழ்நாட்டிலிருந்து உருவாக்கப்படும். இதை உடைக்கிறதுக்குத்தான் புதிய புதிய நடிகர்கள் டெல்லியில் போய் உட்கார்ந்துட்டு இருக்காங்க. அதெல்லாம் ஒன்னும் நடக்காது. அதெல்லாம் பார்த்துட்டோம். எதை வேண்டுமானாலும் பார்க்கப்போகும், யார் வேணா வரட்டும், எங்கிருந்து வேணா வரட்டும்.
“திமுக நமக்கு போர் அடித்து விட்டது. திமுக சைத்தானின் பிள்ளைகளாக மாறிவிட்டார்கள். அடுத்துப் புதிது புதிதாகச் சைத்தானின் பிள்ளைகள் வரட்டும். எல்லாரும் டெல்லி போய் பிளான் பண்ணிட்டு டெல்லியில் இருந்து வராங்க. எந்த நடிகர் டெல்லியில் போய் உட்கார்ந்துகிட்டு இருக்காங்க என்பதையெல்லாம் மக்களுக்குத் தெரியும்” எனப் பேசியிருக்கிறார்.

நாளை டெல்லியில் நடக்க போவது என்ன? பாஜக எடுக்க போகும் முடிவு!

மதச்சார்பற்ற கூட்டணி குறித்து கருத்து!

மேலும் அவர் பேசுகையில், “மதச்சார்பற்ற கூட்டணி என வந்தால் கம்யூனிஸ்டுகள் நமது பக்கம்தான் இருப்பார்கள். எழுதி வைத்துக்கொள்ளுங்கள். நாம் எதிர்க்க வேண்டியது கம்யூனிஸ்டுகளை அல்ல. மதச்சார்பற்ற கொள்கைக்கு எதிரானவர்கள்தான் நமக்கு எதிரிகள்” எனப் பேசியிருக்கிறார்.

தனுஷ் அரசியலுக்கு வருவாரா?

தனுஷ் அரசியலுக்கு வருவாரா என அவரிடமே சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, அவர் சிரித்துக்கொண்டே கடந்து சென்றார். ஆனால் தற்போது அமைச்சரே அதை உறுதிப்படுத்தும் விதமாகப் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Source link