பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி 2026: CM விஜய் தவிர்க்க இது தான் காரணமா? தவெக.,வின் பிளான் பி – pasumpon muthuramalinga thevar guru pooja and jayanthi celebrations 2026 why is chief minister vijay avoiding political critics

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழா மற்றும் ஜெயந்தி விழா அக்டோபர் 30ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு வரும் அக்டோபர் 28ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 119 ஆவது ஜெயந்தி விழா மற்றும் 64ஆவது குருபூஜை விழாவானது கொண்டாடப்படுகிறது. 1979ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர்.ஆட்சிக் காலத்திற்குப் பிறகு இந்த விழாவிற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பசும்பொன்னிற்கு நேரடியாக சென்று, முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது முக்கிய அரசியல் நிகழ்வாக இருந்து வருகிறது.அந்த வகையில், முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக பசும்பொன் நினைவிடத்திற்கு வருகை தர உள்ளதாக கடந்த சில நாட்களாகவே அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது.

தேவர் ஜெயந்தி & ஹெலிபேட் சர்ச்சை

மேலும், முதலமைச்சர் விஜய் வருகையையொட்டி, பசும்பொன்னில் ஹெலிபேட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக சமூகவலைத்தளங்களில் செய்திகள் வந்த வண்ணம் இருந்தது. இந்த நிலையில்,பசும்பொன்னில் ஹெலிபேட் அமைத்து வரும் பணிகள் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் கூறுகையில், இந்தியத் துணைக் குடியரசுத் தலைவரின் வருகைக்காகவே இந்தப் பணிகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். தேவர் ஜெயந்தியன்று பசும்பொன்னில் லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள் என்பதால், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், மழையால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்கவும் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் கூறினார். மேலும் முதல்வர் விஜய் பசும்பொன் வருகை போன்ற ஆதாரமற்ற தகவல்களைப் பரப்ப வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

முதல்வர் விஜய் தவிர்ப்பது ஏன்?

முதல்வர் விஜய் பசும்பொன் பயணத்தை தவிர்ப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாக கூறப்பட்டாலும், தமிழக முதல்வர் ஒருவர் பசும்பொன் குருபூஜையில் கலந்து கொள்ளாமல் தவிர்ப்பது இது முதல் முறை அல்ல. மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா மற்றும் திமுக தலைவர் கருணாநிதி ஆகியோர் உடல் நல குறைவு மற்றும் அரசியல் சூழ்நிலைகள் காரணமாக சில ஆண்டுகள் பசும்பொன் குருபூஜை நிகழ்வில் பங்கேற்காமல் இருந்துள்ளனர். மேலும் அவர்கள் சார்பாக மூத்த அமைச்சர்கள் அந்த நிகழ்வில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தி வந்தனர். அதேபோல் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த காலகட்டத்தில் குருபூஜையில் கலந்து கொண்டாலும், 2022க்கு பிறகு எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்ற போது உட்கட்சி மோதல் மற்றும் சமுதாய குழுக்களின் எதிர்ப்பு காரணமாக பசும்பொன் செல்வதை தவிர்த்தார்.

பின்னணியில் பாதுகாப்பு காரணங்களா?

பொதுவாகத் தமிழக முதல்வர்கள் அனைவரும் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை நிகழ்வுக்கு நேரடியாகச் செல்ல முடியாத சூழலில், சென்னை நந்தனத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துவதையோ அல்லது தங்களது அமைச்சரவை சகாக்களைப் பசும்பொன்னிற்கு அனுப்பி அரசு சார்பில் மரியாதை செலுத்துவதையோ வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதனால் இந்த ஆண்டு முதல்வர் விஜய் பசும்பொன் செல்ல மாட்டார் என அமைச்சர் கூறி இருப்பதால் அவரும் நந்தனத்தில் இருக்கும் தேவர் சிலைக்கே மாலை அணிவிக்க வாய்ப்புள்ளது. முதல்வர் விஜய் பசும்பொன் செல்லாததற்கு மழை, நிர்வாக காரணங்கள் பல சொல்லப்பட்டாலும், இதற்கு மற்றொரு பாதுகாப்பு காரணங்கள் தான் மிக முக்கியமாக சொல்லப்படுகிறது. குறிப்பாக,கரூரில் நடைபெற்ற சம்பவத்திற்குப் பிறகு,விஜய் கலந்துகொள்ளும் பொது நிகழ்ச்சிகளில் பாதுகாப்பு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகியுள்ளது. தேர்தல் பிரச்சாரத்திற்காக ஈரோடு சென்ற போதும், சமீபத்தில் மதுரை சென்ற போதும், மின்கம்பங்கள் மற்றும் உயரமான இடங்கள் மீது ஏறி ரசிகர்கள் சத்தம் போட்டது பதற்றத்தை ஏற்படுத்தியது. அப்போதெல்லாம் விஜய் தனது ரசிகர்களைப் பாதுகாப்பாக இருக்குமாறு நேரடியாகவும், அன்பாகவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

முதல்வர் விஜய் செல்லும் இடங்களில் எல்லாம் கூடும் கூட்டம்

சமீபத்தில் முதல்வர் விஜய் தாய்மாமன் தங்க மோதிரத்திட்டத்தை தொடங்கிவைப்பதற்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை வந்திருந்தார். அப்போது,கோரிப்பாளையம் தேவர் சிலைக்குச் சென்று மாலை அணிவிக்காமல் சென்றார். இதற்கு முக்கியக் காரணம்,பொதுமக்கள் அதிக அளவில் கூடியிருந்ததன் காரணமாக கூட்ட நெரிசலை தவிர்த்ததாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. விஜய் விமான நிலையத்திலிருந்து தான் செல்லும் இடங்களில் எல்லாம் ஒரு நாள் முழுவதும் ரோட் ஷோ நடத்திச் சென்றாலும், அங்கு எப்போதும் மக்கள் கூட்டம் அலைமோதும். அவர் மீதுள்ள ரசிகர்களின் அதீத அன்பின் காரணமாகவே இத்தகைய கூட்டம் கூடுகிறது. இருப்பினும், கடந்த காலங்களில் ஏற்பட்ட சில அசம்பாவிதங்கள் மற்றும் பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டே அவர் சில இடங்களைத் தவிர்க்கிறார் என்று கூறப்படுகிறது.

முக்குலத்து மக்களின் ஆதரவைப் பெற விஜய்யின் அடுத்த நகர்வு என்ன?

பசும்பொன் கிராமம் என்பது ஒரு சிறிய கிராமமாகும். அங்கு அமைந்துள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடம் ஒரு குறுகலான பகுதியில் அமைந்துள்ளது. அங்கு செல்லும்போது பாதுகாப்பு காரணங்களாலும், கட்டுப்படுத்த முடியாத கூட்ட நெரிசலாலும் கடுமையான சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. சாதாரண அரசியல் கட்சிகளே அங்கு செல்வதில் சிரமப்படும் சூழலில், உச்ச நட்சத்திரமாக இருந்து முதல்வரான விஜய் அங்கு செல்வது கூடுதல் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. மறுப்புறம் முக்குலத்து சமுதாய மக்களின் ஆதரவைப் பெறுவது தவெக கட்சிக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். எனவே, விஜய் இதற்கு மாற்றாக வேறு ஏதேனும் வலுவான திட்டங்களை Plan B தன் வசம் வைத்திருக்கக்கூடும் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல்வர் விஜய்க்கு பதிலாக பசும்பொனிற்கு இந்த ஆண்டு, அமைச்சர்கள் செங்கோட்டையன், நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனா போன்றவர்கள் செல்வதற்கு வாய்ப்புள்ளது. விஜய், பசும்பொன் வராதது முக்குலத்தோர் சமூக மக்களுக்கும், பசும்பொன் பகுதி மக்களுக்கும் ஏமாற்றத்தை தந்தாலும், விரைவில் முக்குலத்தோர் சமூக வாக்குகளை கவருவதுன், தென் மாவட்டங்களில் தவெக.,வின் பலத்தை அதிகரிக்கும் செயல்பாடுகளில் விஜய் தீவிரம் காட்டுவார் என சொல்லப்படுகிறது.

Source link