விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஹேமலதா மாயமாகி 12 நாட்கள் ஆகியுள்ள நிலையில், அவர் உயிருடன் இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக சிபிசிஐடி போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஹேமலதா, கடந்த அக்டோபர் 12-ஆம் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டு அன்று இரவு வீட்டில் உறங்கச் சென்றார். அதிகாலையில் எழுந்து பார்த்தபோது சிறுமியைக் காணவில்லை. வீட்டின் கதவு தாழ்ப்பாள் போடப்படாமல் இருந்த நிலையில், அதிகாலையில் சிறுமி “அம்மா… அம்மா…” என்று அலறிய சத்தம் கேட்டதாக அண்டை வீட்டுப் பெண்மணி ஒருவர் தெரிவித்திருந்தார்.
13 நாட்களாகத் தொடரும் தீவிர தேடுதல் வேட்டை
சிறுமியைத் தேடும் பணியில் உள்ளூர் காவல் துறையினருடன் கிராம மக்களும் தீவிரமாக ஈடுபட்டனர். ஆலம்பூண்டி, நடுப்பட்டு, செஞ்சி, ஆரணம்பட்டு உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகள்,விவசாய நிலங்கள், கிணறுகள், வாய்க்கால்கள், புதர்கள் மற்றும் மலைப் பகுதிகள்,மோப்ப நாய்கள் மற்றும் ட்ரோன் கேமராக்கள் மூலமாகவும், தேசிய நெடுஞ்சாலைகள், சுங்கச்சாவடிகள் (டோல்கேட்), அருகிலுள்ள ரயில் நிலையங்கள் மற்றும் 600-க்கும் மேற்பட்ட சிசிடிவி (CCTV) கேமராக்கள் மூலமாகவும் தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
உயிருடன் இருக்க வாய்ப்பு – சிபிசிஐடி கணிப்பு
சிறுமியின் வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டு கடந்த 3 நாட்களாகத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. பொதுவாக பாலியல் வன்கொடுமை அல்லது கொலையாக இருந்தால் 12 நாட்களுக்குள் ஏதேனும் தடயங்கள் அல்லது உடல் சிக்கியிருக்கும். ஆனால், இதுவரை எந்தவொரு தடயமோ அல்லது அசம்பாவித நிகழ்வுகளுக்கான ஆதாரங்களோ கிடைக்கவில்லை. இதனால், சிறுமி உயிருடன் இருக்கக்கூடும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.
வெளிமாநிலத்திற்கு கடத்தலா?
பிறந்தநாள் கொண்டாட்டத்தன்று ஆட்கள் நடமாட்டம் மற்றும் சூழலை நோட்டமிட்டு, திட்டமிட்டு இந்த கடத்தல் அரங்கேற்றப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அப்பகுதியில் தங்கியிருந்த வெளிமாநிலத் தொழிலாளர்கள் அல்லது கடத்தல் கும்பல் சிறுமியை யாசகம் எடுப்பதற்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ வெளிமாநிலங்களுக்குக் கடத்திச் சென்றிருக்கலாமா என்ற கோணத்திலும் சிபிசிஐடி போலீசார் பல்வேறு சோதனைகளையும் விசாரணைகளையும் தீவிரப்படுத்தியுள்ளனர்.
சிறுமியின் தாயிடம் போலீசார் பல்வேறு கேள்விகளை எழுப்பிய நிலையில், அவர் முறையாகப் பதிலளிக்கவில்லை எனக் கூறப்படுவதால் விசாரணையில் சுணக்கம் ஏற்பட்டுள்ளசிறுமி குறித்த முக்கியத் தடயங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றனர். மேலும், சிறுமியை விரைவில் மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர்.
Source link
