புதாவா,
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்து செஸ் வீராங்கனை போதனா சிவானந்தன், தனது 11-வது வயதில் உலகின் மிக இளைய பெண் சர்வதேச மாஸ்டர் (IM) என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
ஐரோப்பிய செஸ் போட்டி
மான்டெனெக்ரோ நாட்டின் புதாவா நகரில் நடைபெற்ற 2026 ஐரோப்பிய மகளிர் செஸ் கிளப் கோப்பை தொடரில், ‘ஷீ ப்ளேஸ் டு வின் லயனஸ்’ அணிக்காகப் போதனா விளையாடினார்.
இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடிய அவர், 7 ஆட்டங்களில் 5.5 புள்ளிகளைப் பெற்றார். இறுதிச் சுற்றில் ஸ்வீடன் வீராங்கனை விக்டோரியா ஜோஹன்சனை வீழ்த்தினார். இதன் மூலம் உலகின் மிக இளம் பெண் சர்வதேச மாஸ்டர் (IM) என்ற சாதனையை படைத்தார்.
சாதனை முறியடிப்பு
ஜூடித் போல்கார் 1988-ஆம் ஆண்டு தனது 12-வது வயதில் படைத்த சாதனையை, 38 ஆண்டுகளுக்குப் பிறகு போதனா 11 வயது, 7 மாதம், 16 நாட்களில் முறியடித்துள்ளார்.
இங்கிலாந்தின் வடக்கு லண்டனில் உள்ள ஹாரோ பகுதியில் வசிக்கும் போதனாவின் குடும்பம் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டது. இளம் வயதிலேயே சர்வதேச செஸ் அரங்கில் தனது திறமையை வெளிப்படுத்தி வரும் அவர், தற்போது உலகளவில் கவனம் ஈர்த்துள்ளார்.
