விஜய் தலைமையில் உள்துறை முதல் உணவுத்துறை வரை தூங்கிக் கொண்டுள்ளது. த.வெ.க அரசில் பல பவர் சென்டர்கள் இருப்பதால் நிர்வாகம் தடுமாறுகிறது என திருச்சியில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.
திருச்சி மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை ஆலோசனைக் கூட்டம் தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும் அம்மா பேரவை மாநில செயலாளருமான ஆர் பி உதயகுமார் கலந்துகொண்டார். கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆர் பி உதயகுமார், திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வெல்லும் என்கிற நம்பிக்கையை விதைக்கும் வகையில் இந்த கூட்டம் நடைபெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் மரண ஓலம் ஒலிக்கிறது
விஜய்யின் மாய பிம்பம் ,தூய சக்தி என்கிற பொய் பிரச்சாரத்தை மக்கள் உணர்ந்து விட்டார்கள். நிர்வாகத்தில் பல்வேறு குளறுபடிகள் உள்ளது. போதை பொருள் கடத்தலில் த.வெ.க நிர்வாகி ஈடுபட்டுள்ளார் சிங்கப்பெண்படை எங்கே போனது என தெரியவில்லை, குழந்தைகள் திடீர் திடீரென மாயமாகிறார்கள். தமிழ்நாட்டில் மரண ஓலம் ஒலிக்கிறது. உள்துறை முதல் உணவுத்துறை வரை விஜய் தலைமையில் கும்பகர்ண தூக்கம் தூங்கிக் கொண்டுள்ளது.
சட்டம் ஒழுங்கு சீரழிவும் விஜய்க்கு மிகப்பெரிய சவால்
அதிமுக ஆட்சியில் சரித்திர சாதனையை நிகழ்த்தி உள்ளோம். ஆனால் த.வெ.க ஆட்சியில் சொன்ன வாக்குறுதிகளை கூட நிறைவேற்ற முடியவில்லை. சட்டம் ஒழுங்கு தமிழ்நாட்டில் கேள்விகுறியாகி உள்ளது. ஒரு ஆட்சி மின்வெட்டினால் போனது என்பது தமிழகத்தின் வரலாறு. இன்றைய ஆட்சியிலும் மின்வெட்டு உள்ளது. மின்வெட்டு பிரச்சனையும், சட்டம் ஒழுங்கு சீரழிவும் விஜய்க்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. அதை அவரால் சமாளிக்க முடியவில்லை. தடுமாறிக் கொண்டிருக்கிறார்.
பல அரசாணைகள் மர்மங்களாகவே உள்ளது
எங்கள் ஆட்சியில் ஒரே பவர் சென்டர் தான் என விஜய் கூறினார். ஆனால் இன்று அவரின் ஆலோசகர்கள், உறவினர்கள், ஜோதிடர்கள், நண்பர்கள், அவரின் டிரைவர் வரை பவர் சென்டராக தான் உள்ளார்கள். இப்படி பல பவர் சென்டர்கள் இருப்பதால் ஆட்சி நிர்வாகம் தடுமாறிக் கொண்டு உள்ளது. பல அரசாணைகள் மர்மங்களாகவே உள்ளது அதற்கு என்ன பின்புறம் உள்ளது என தெரியவில்லை. அமைச்சர் நிர்மல் குமார் அதிர்ஷ்டத்தால் அமைச்சராகி உள்ளார்.
குதிரை பேரரத்தை ஊக்குவித்தால் விளைவு நிச்சயம்
அவருக்கு அதிமுக குறித்து பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை. அவர் எந்தவித நன்மையும் மக்களுக்கும் செய்யவில்லை தமிழகத்திற்கும் செய்யவில்லை. பெரும்பான்மை இல்லாததால் விஜய் குதிரை பேரம் நடத்துகிறார். அதிமுக எம்எல்ஏக்களை பெயர்ச்சி செய்துவிட்டு தண்ணீர் குடித்து விட்டார். இனி அவர் அந்த தவறை செய்ய மாட்டார் என நம்புகிறோம். அவர் மீண்டும் குதிரை பேரரத்தை ஊக்குவித்தால் அதற்கான விளைவை அவர் சந்திப்பார்.
நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஜனநாயகத்தில் உரிமை
ஆறு மாதத்திற்கு ஒரு முறை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஜனநாயகத்தில் உரிமை உள்ளது விஜய்யின் ஆறு மாத ஆட்சியின் காலம் முடிய இன்னும் ஒரு மாத காலம் இருக்கிறது அதற்குள் அவர் எல்லாவற்றையும் முடித்து விடலாம் என நினைக்கிறார் ஆனால் மக்கள் யாரை முடிக்க வேண்டும் என நினைக்கிறார்களோ அதுதான் நடக்கும். தனுஷ் அரசியலுக்கு வருகிறா என்பது குறித்து அவரிடம் நான் கேட்க வேண்டும் அவர் அதிமுகவிற்கு வருவாரா என்பது குறித்து எடப்பாடி பழனிச்சாமி தான் முடிவெடுப்பார். அவர் என்ன சொல்கிறாரோ அதை நாங்கள் கேட்போம். நாங்கள் கருத்து சொல்லும் கந்தசாமி அல்ல கட்டளை ஏற்று நடக்கும் களப்பணியாளர்கள் என்றார்.
Source link
