ஐப்பசி பெளர்ணமி 2026 : வீட்டில் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்து வழிபடும் சரியான முறை

ஐப்பசி பெளர்ணமி இந்த ஆண்டு அக்டோபர் 25 ஞாயிற்றுக்கிழமை அன்று வருகிறது. இந்த நாளில் சிவன் கோவிலுக்கு சென்று அன்னாபிஷேகம் தரிசனம் செய்வதும், அன்னாபிஷேகத்திற்கு தேவையான பொருட்கள் வாங்கிக் கொடுப்பதும் பாவங்களை போக்கி, புண்ணியத்தையும், சிவபெருமானின் அருளையும் பெற்றுத் தரும். ஆனால் இந்த புண்ணியம் மிகுந்த நாளில் அனைவராலும் சிவாலயத்திற்கு சென்று சிவனுக்கு நடைபெறும் அன்னாபிஷேகத்தை தரிசனம் செய்ய முடியாது. அப்படி கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் சிவலிங்கம் வைத்திருந்தால் அதற்கு நமது கைகளால் அன்னாபிஷேகம் செய்து வழிபடலாம். சிவலிங்கம் இல்லாதவர்கள் சிவபெருமானின் படத்தை வைத்தும் வழிபடலாம். ஐப்பசி பெளர்மணி நாளில் வீட்டில் எப்படி முறையாக சிவ பெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்து, சிவபெருமானின் அருளை பெறுவது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

வீட்டில் சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்யும் சரியான முறை :

– வீட்டில் லிங்கம் இருந்தால் முதலில் சுத்தமான நீரால் அபிஷேகம் செய்து, அதன் பிறகு திருநீறு, பால், பன்னீர், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யலாம்.

– பிறகு சுத்தமான நீரில் லிங்கத்தை சுத்தம் செய்து விட்டு, பூஜை அறையில் ஒரு வாழை இலை விரித்து, அதற்கு மேல் லிங்கத்தை வைக்க வேண்டும்.

– பச்சரிசியை நன்கு குலைந்த சாதமாக வடித்து, நன்கு ஆற வைக்கவும்.

– ஆறவைத்த பச்சரிசி சாதத்தை அந்த லிங்கத்தின் மீது கீழிருந்து மேலாக முழுவதுமாக மூடும் படி இருக்கும் வகையில் அபிஷேகம் செய்யவும்.

– சாதத்தால் லிங்கத்தை முழுவதுமாக மூடிய பிறகு அதற்கு மேல் காய்கறிகள், பழங்கள், பதார்த்தங்கள் ஆகியவற்றை நைவேத்தியமாக படைக்கலாம்.

– சிவலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் செய்த பிறகு தீபாராதனை காட்ட வேண்டும்.

– பிறகு இந்த நாளில் சக்தி வாய்ந்த சிவபுராணம் பாராயணம் செய்வது மிகவும் வலிமையானது.

– வழிபாட்டினை நிறைவு செய்த பிறகு மூன்று மணி நேரம் கழித்து லிங்கத்தின் மீது சாத்திய அன்னத்தை எடுத்து, குடும்பத்தினருடன் சேர்ந்து பிரசாதமாக பகிர்ந்து சாப்பிடலாம்.

– அப்படி இல்லை என்றால் பசு, நாய், காகம் போன்ற வாயில்லா ஜீவன்களுக்கு அதை சாப்பிட கொடுக்கலாம்.

– லிங்கத்திற்கு சாத்திய அன்ன பிரசாதத்தை, வெறும் சாதமாக சாப்பிடக் கூடாது. அதனுடன் தயிர், சாம்பார், நெய் கலந்து தான் சாப்பிட வேண்டும்.

– லிங்கம் இல்லாமல் போட்டோ வைத்து ஐப்பசி பெளர்ணமி வழிபாடு செய்தவர்கள், அபிஷேகம் செய்ய முடியாது என்பதால் வாழை இலை விரித்து, நைவேத்தியமாக சிவனுக்கு படைத்து வழிபடலாம்.

– பச்சரிசி சாதத்துடன் சிறிதளவு நெய் சேர்த்து நைவேத்தியமாக படைக்கலாம். அதோடு கூட்டு, பொரியல், அப்பளம், பழங்கள், பதார்த்தங்கள் ஆகியவற்றையும் சேர்த்து படைக்கலாம்.

– இந்த நாளில் குறைந்தபட்சம் 18 முறையாவது “ஓம் நமசிவாய” மந்திரத்தை சொல்லி வழிபடலாம். இந்த நாளில் சிவபுராணம், கோளறு பதிகம் போன்ற பாடல்களையும் பாடி சிவபெருமானை வழிபடலாம்.

– இந்த நாளில் அன்னதானம் வழங்குவது, வெள்ளை உடைகளை தானமாக வழங்குவது ஆகியவையும் உண்ணியம் தரும். இதனால் சந்திர தோஷம் உள்ளிட்ட தோஷங்களும் நீங்கும்.

Source link