மக்கள் நீதி மய்யம்
நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை துவங்கிய நிலையில், கடந்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டார். தற்போது இந்த கட்சி திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. இந்நிலையில் இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம், திமுக கூட்டணியில் இருந்து போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் மநீம தேர்தலில் போட்டியில்லை என அறிவித்த கமல், திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாகவும் தெரிவித்தார்.
பரப்புரையை துவங்கும் கமல்
இதனால் மக்கள் நீதி மய்யம் தொண்டர்கள் கடுமையாக அதிருப்தி அடைந்தனர். இந்நிலையில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வரும் ஏப்ரல் 17 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை பரப்புரை மேற்கொள்ள உள்ளார் கமல் ஹாசன். திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிரமாக பிரச்சாரம் செய்யவுள்ளார்.
நான்கு நாட்கள் தீவிர பிரச்சாரம்
முதல் நாள் 17 ஆம் தேதி சென்னையின் கொளத்தூர், துறைமுகம், பெரம்பூர், வில்லிவாக்கம் ஆகிய தொகுதிகளில் பரப்புரை செய்யவுள்ளார் கமல். தொடர்ந்து மறுநாள் திருவல்லிக்கேணி, தியாகராயர் நகர், மயிலாப்பூர், வேளச்சேரியிலும் 19 ஆம் தேதி அவினாசி, கோவை தெற்கிலும் பிரச்சாரம் செய்யவுள்ளார். கடைசி நாளான 20 அன்று திருச்சி கிழக்கு, திருவரங்கம், லால்குடி ஆகிய பகுதிகளில் கமல் பரப்புரை மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் போட்டியிடும் தொகுதிகள்
இதில் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் போட்டியிடவுள்ளார். இந்த இடங்களில் கமல் பரப்புரை மேற்கொள்ளவுள்ளது அரசியல் களத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. விஜய்க்கு எதிராக அவர் என்ன பேச போகிறார் என்ற எதிர்பார்ப்பினையும் கிளப்பியுள்ளது. மேலும் ஏற்கனவே திமுக தலைவர்கள் தீவிரமான பரப்புரைகளில் ஈடுபட்டு வரும் நிலையில், கமல்ஹாசனின் பிரச்சாரம் திமுகவுக்கு பலமாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
டார்ச் லைட் சின்னம்
முன்னதாக திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இரண்டு தொகுதிகளில் ஒதுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அதோடு உதயசூரியன் சின்னத்தில் மநீம வேட்பாளர்களை போட்டியிட திமுக வலியுறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் டார்ச் லைட் சின்னத்தில் நிற்பதிலே மக்கள் நீதி மய்யம் உறுதியாக இருந்தது. இது சம்பந்தமாக தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகள் நடந்தது.
முதல்வர் மு.க. ஸ்டாலின் வரவேற்பு
இந்நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் நேரடியாக போட்டியிட போவதில்லை எனவும் திமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களை நேரடியாக ஆதரிக்க போவதாகவும் கமல் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இது தியாகம் அல்ல. கடமை எனவும் அதில் குறிப்பிட்டு இருந்தார். அவருடைய இந்த முடிவினை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் வெகுவாக பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
