CSK Vs DC: சிஎஸ்கே முதலில் பேட்டிங் – டெல்லி அணியை வெல்லுமா?

படக்குறிப்பு, காயத்திலிருந்து குணமடைந்த டெவால் பிரெவிஸ் சூப்பர் கிங்ஸ் பிளேயிங் லெவனில் இடம்பெற்றிருக்கிறார் (கோப்புப் படம்)

13 நிமிடங்களுக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

2026 ஐபிஎல் சீசனின் 18வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி கேபிட்டல்ஸை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடக்கிறது.

விளையாடிய 3 போட்டிகளிலுமே தோற்றிருக்கும் சிஎஸ்கே இந்த சீசனில் தங்களுடைய முதல் வெற்றியை எதிர்பார்த்து களம் காண்கிறது.

டெல்லி கேபிடல்ஸ் இந்த சீசனில் விளையாடிய 3 போட்டிகளில் 2 வெற்றியும், 1 தோல்வியும் சந்தித்திருக்கிறது.

கடந்த சீசனில் சேப்பாக்கத்தில் நடந்த போட்டியில் சிஎஸ்கே-வை டெல்லி கேபிட்டல்ஸ் வீழ்த்தியிருந்தது.

சேப்பாக்கத்தில் கடைசியாக விளையாடிய 7 போட்டிகளிலுமே சூப்பர் கிங்ஸ் தோற்றிருக்கிறது.

டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் கேப்டன் அக்‌ஷர் பட்டேல் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

டாஸில் நடந்தது என்ன?

டாஸ் வென்ற அக்‌ஷர் பட்டேல், “இந்த ஆடுகளம் நன்றாகத் தெரிவதால் நாங்கள் முதலில் பந்துவீச விரும்புகிறோம். எதிரணி நிர்ணயிக்கும் எந்த இலக்காக இருந்தாலும், அதைத் துரத்திப் பிடிப்பதையே நாங்கள் விரும்புகிறோம்.

ஆடுகளத்தைப் பொறுத்தவரை, இந்த சீசனில் இது பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னையில் ஆடுகளம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இது செம்மண் ஆடுகளம் என்பதால், பந்து நன்றாக எகிறும். எங்களது நோக்கம், அவர்களை எவ்வளவு குறைந்த ஸ்கோரில் சுருட்ட முடியுமோ அவ்வளவு குறைவாகச் சுருட்டி, பின்னர் அதைத் துரத்தி வெற்றி பெறுவதே ஆகும்.

ஐபிஎல் என்பது ஒரு நீண்ட தொடர், எங்களது அணியின் சூழல் மிகவும் நிதானமாக உள்ளது. எங்களால் எதைக் கட்டுப்படுத்த முடியுமோ, அதில் மட்டும் கவனம் செலுத்துவதைப் பற்றியே ஆலோசனைகள் உள்ளன. ஒரு குறிப்பிட்ட நிலையை எட்டிய பிறகு, எதையும் அதிகமாக யோசிக்கத் தேவையில்லை. எனவே, நம் கையில் உள்ளதைச் சரியாகக் கையாள்வதே எங்களது மனநிலையாக உள்ளது. அணியின் சூழல் சிறப்பாக இருக்கிறது.

எங்கள் அணியின் சமநிலையைப் பார்த்தால், தேவையான அனைத்து அம்சங்களும் எங்களிடம் உள்ளன. எங்களிடம் இருந்த வாய்ப்புகளை வைத்து, ஒரு சிறந்த காம்பினேஷனைத் தேர்வு செய்துள்ளோம் என்று நினைக்கிறேன். கடந்த ஆண்டை விட, இந்த முறை அணி அதிக சமநிலையுடன் காணப்படுகிறது; இன்றைய போட்டியில் சிறப்பாகச் செயல்படுவோம் என்று நம்புகிறோம்.” என்று கூறினார்.

பிளேயிங் லெவனில் யார்?

சென்னை சூப்பர் கிங்ஸ்

காயத்திலிருந்து குணமடைந்த டெவால் பிரெவிஸ் சூப்பர் கிங்ஸ் பிளேயிங் லெவனில் இடம்பெற்றிருக்கிறார். தமிழ்நாடு வேகப்பந்துவீச்சாளர் குர்ஜப்னீத் சிங் சூப்பர் கிங்ஸுக்கு அறிமுகம் ஆகிறார்.

பிளேயிங் லெவன்: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஆயுஷ் மாத்ரே, டெவால் பிரெவிஸ், சர்ஃபராஸ் கான், ஷிவம் துபே, ஜேமி ஓவர்டன், நூர் அஹமது, அன்ஷுல் கம்போஜ், கலீல் அஹமது, குர்ஜப்னீத் சிங்.

சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: பிரஷாந்த் வீர், மேட் ஹென்றி, கார்த்திக் ஷர்மா, குர்ஜப்னீத் சிங், மேத்யூ ஷார்ட், அகீல் ஹொசைன்.

டெல்லி கேபிட்டல்ஸ்

டெல்லி அணி இந்தப் போட்டிக்கு 2 மாற்றங்கள் செய்தது. நித்திஷ் ராணா, விப்ராஜ் நிகம் ஆகியோருக்குப் பதிலாக அஷுதோஷ் ஷர்மா மற்றும் ஆகிப் நபி அணியில் இடம்பெற்றனர்.

பிளேயிங் லெவன்: கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), பதும் நிசன்கா, சமீர் ரிஸ்வி, டேவிட் மில்லர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்‌ஷர் பட்டேல், ஆகிப் நபி, குல்தீப் யாதவ், லுங்கி எங்கிடி, டி.நடராஜன், முகேஷ் குமார்.

சப்ஸ்டிட்யூட் வீரர்கள்: கருண் நாயர், அஷுதோஷ் ஷர்மா, விப்ராஜ் நிகம், நித்திஷ் ராணா, துஷ்மந்தா சமீரா.

இந்த சீசனில் இதுவரை

இந்த போட்டிக்கு முன்பு இந்த சீசனில் ஆடிய 3 போட்டிகளிலுமே சென்னை சூப்பர் கிங்ஸ் தோற்றது. ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகளிடம் சிஎஸ்கே தோற்றிருக்கிறது. அதனால் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது.

தங்களின் முதலிரு போட்டிகளில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு எதிராக டெல்லி கேபிட்டல்ஸ் வெற்றி பெற்றது. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கெதிரான மூன்றாவது போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் அந்த அணி தோல்வியடைந்தது.

‘சூப்பர் கிங்ஸில் மாற்றம் தேவை’ – இந்திரஜித்

“டெத் பௌலிங்கைப் பொறுத்தவரை சில மாற்றங்கள் தேவை. குர்ஜப்னீத் சிங் சேர்க்கப்படவேண்டும் என்று நான் கருதுகிறேன். அவர் நல்ல உயரமான பௌலர். ஒரு கடினமான கோணத்தைக் கொண்டுவரக்கூடிய இடது கை வேகப்பந்துவீச்சாளர். ‘பேக் ஆஃப் தி ஹேண்ட் ஸ்லோயர் பால்கள்’ வீசுவதில் தேர்ந்தவர். யார்க்கர்களும் வீசமுடியும். யார்க்கர்கள் அவருடைய பலம் என்று சொல்லமாட்டேன். ஆனால், அவரது பேக் ஆஃப் தி ஹேண்ட் ஸ்லோயர் பால்கள் நிச்சயம் தாக்கம் ஏற்படுத்தக்கூடியவை. அதனால் விக்கெட்டுகள் எடுக்க முடியும். அன்ஷுல் கம்போஜ், மேட் ஹென்றி, கலீல் அஹமது என பவர்பிளே ஸ்பெஷலிஸ்ட்களாக இருக்கும் அந்த பௌலிங் யூனிட்டில் குர்ஜப்னீத் மூலம் ஒரு மாற்றத்தைக் கொண்டுவரமுடியும்.” என்று அவர் குறிப்பிட்டார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Source link