குட்டி நண்பாஸ் நண்பீஸை மறந்த விஜய் மாமா? ஒரே மாதத்தில் 4 குழந்தைகள் மாயம் – என்ன செய்கிறது காவல்துறை – has vijay forgotten his chutti friends missing children cases raise questions over police action

தமிழ்நாட்டில் குழந்தைகள் காணாமல் போகும் சம்பவங்கள் தொடர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. செஞ்சியில் 7 வயது சிறுமி ஹேமலதா உட்பட ஒரு மாதத்தில் சுமார் நான்கு குழந்தைகள் மாயமானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து தேர்தல் களத்தில் ‘ உங்கள் விஜய் மாமாவ ஜெயிக்க வைங்கன்னு பேசிய விஜய் தற்போது இந்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கிறார்? காணாமல் போன குழந்தைகளை மீட்க காவல்துறை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் என்ன? என்ற கேள்விகள் எழுந்திருக்கின்றன.

சில தினங்களுக்கு முன்பு, பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டதாகத் தொடர் செய்திகள் வெளியான சூழலில், தற்போது குழந்தைகள் மாயமாகும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

கடந்த 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாத நிலவரப்படி, தமிழ்நாட்டில் மொத்தம் 8,032 குழந்தைகள் காணாமல் போயிருக்கின்றனர். ஆனால், 2024ஆம் ஆண்டுக்குப் பிறகு தற்போது வரை எத்தனை குழந்தைகள் காணாமல் போயிருக்கிறார்கள் என்பது குறித்த தெளிவான தரவுகள் இல்லை. இந்தச் சூழலில்தான், இந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் நான்கு சிறுவர்கள் மாயமாகியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டியைச் சேர்ந்த 7 வயது ஹேமலதாகடந்த 12ஆம் தேதி அதிகாலை காணாமல் போனார். தற்போது வரை அவர் கிடைக்கவில்லை. கோவையில் சாதிய பாகுபாடு காரணமாக மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் இன்னும் இந்த சாதிய சமூகத்தின் அவல நிலையில் எடுத்துரைக்கிறது. ராணிப்பேட்டை மாவட்டம், லாலாபேட்டை பகுதியில் சாலையோரத்தில் பெற்றோருடன் வசித்து வந்த ஒரு வயது பெண் குழந்தையும் காணாமல் போயிருக்கிறார். நீண்ட காலமாகச் சாலையோரம் வசிக்கும் பெற்றோரின் குழந்தைகள் கடத்தப்படுவது தொடர்ந்து வரும் சூழலில், இதுவரை அதற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. அதேபோல, கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினத்தை அடுத்த குரும்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அஸ்வின் என்பவரும் கடந்த இரண்டு தினங்களாகக் காணாமல் போயிருக்கிறார். அதோடு மட்டுமின்றி, சாத்தான்குளத்தில் காதல் விவகாரத்தில் தாயை வெட்டிக் கொன்றுவிட்டு, இரண்டு பெண் குழந்தைகளைக் கடத்திச் சென்று கட்டி வைத்திருந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், வேளாங்கண்ணிக்குச் சென்ற இரண்டு சிறுமிகளை விடுதியில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளியாகியுள்ள தகவலும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

விஜய்யின் வெற்றிக்கு குழந்தைகளின் ஆதரவு

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் வெற்றிக்கான ரகசியம் உண்மையில் ஒவ்வொரு வீட்டிலும் இருந்த சிறுவர்கள்தான் என்று சொல்லும் அளவுக்குக் குழந்தைகளின் ஆதரவு அமைந்திருந்தது. தனது பிரச்சார மேடைகளில், “குட்டி நண்பா, நண்பீஸ், மாமாவை ஜெயிக்க வைங்க” என்று விஜய் பேசியது நாம் அனைவரும் அறிந்ததே. அது மட்டுமின்றி, பல வீடுகளிலும் விஜய்க்கு வாக்களிக்க வேண்டும் என்று பெற்றோரை அவர்களது குழந்தைகள் வற்புறுத்திய கதைகளையும் நாம் கேட்டிருப்போம். எத்தனையோ பெற்றோர்கள், “எங்கள் குழந்தைகள் ஆசைப்பட்டார்கள்; அதனால் விஜய் வரட்டுமே” என்றெல்லாம் கூறியிருந்தனர்.

14 நாட்களைக் கடந்தும்

இப்படி, குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைச் சம்பவங்களும் கடத்தல் நிகழ்வுகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. செஞ்சியில் காணாமல் போன குழந்தை தொடர்பான விவகாரம் பூதாகரமாக மாறியிருக்கிறது. 14 நாட்களைக் கடந்த பிறகும் அவர் குறித்து எந்தவிதமான தகவலும் தெரியவில்லை.
குழந்தைகளின் பாதுகாப்பு தமிழகத்தில் மீண்டும் விவாதப் பொருளாகியுள்ளது. காணாமல் போகும் குழந்தைகள் குறித்த தகவல்கள், அரசின் பொறுப்பு மற்றும் காவல்துறையின் செயல்பாடு குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளன. குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பதே தற்போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயமாக உள்ளது. இதுகுறித்து உங்கள் கருத்து என்ன?

Source link