தமிழக அரசியல் களத்தில் இப்போது ஹாட் டாபிக்காக மாறியுள்ளது பாமகதான். காரணம் அடுத்தக்கட்ட நகர்வுகள் எப்படி இருக்கும்? அதிமுகவுடன் கருத்து வேறுபாடு உச்சத்தில் இருக்க, பாமகவுக்குள் பெரும் தடுமாற்றம் நிலவி வருவதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
2026 சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்த பாமகவுக்கு 18 தொகுதிகள் மற்றும் 1 மாநிலங்களவை உறுப்பினர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டது.இதில் பாமக 4 இடங்களில் வெற்றி பெற்றது.மேலும் கொங்கு மண்டலத்தில் அதிமுக வெற்றிக்கு பாமக முக்கிய பங்கு வகித்தது.குறிப்பாக மதுராந்தகம், தாராபுரம் உள்ளிட்ட தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றது. எனினும் எடப்பாடி பழனிசாமிவுடன் ஏற்பட்ட மோதல் போக்கு காரணமாக எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ததால் இடைத்தேர்தலுக்கு வலிவகுத்தது.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் தான் திருப்புமுனை
நடந்து முடிந்த மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதில் பாமக பின்வாங்கியது தான் அனைத்துக்கும் ஆரம்ப புள்ளியாக இருந்தது. அதிமுக தலைமையின் சில முடிவுகளில் அன்புமணிக்கு கடும் அதிருப்தி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் இடைத்தேர்தலில் பாமக ஒதுங்கியே இருந்தது. அதன் பலனை தவெக பெறுமா என்ற கணக்கும் அப்போது எழுந்தது. இடைத்தேர்தலுக்குப் பின் தவெகவிடம் இருந்து அழைப்பு வரும் என பாமக தலைமை பெரிதும் எதிர்பார்த்து இருந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக சட்டசபையில் தவெகவுடன் பாமகவினர் இணக்கம் காட்டினர். அதுமட்டுமல்ல, அப்போது சௌமியா அன்புமணிக்கு முக்கிய அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற தகவலும் அரசியல் வட்டாரத்தில் பேச்சுகள் அடிப்பட்டு வந்தது.
தவெக கதவு திறக்கவில்லை…
இதனை அறிந்த விசிக, பாமக வந்தால் நாங்கள் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் என திருமாவளவன் வெளிப்படையாகவே அறிவித்தது சலசலப்பை ஏற்படுத்தியது. இதனால் பாமகவை கூட்டணியில் இழுக்கும் முயற்சியில் தவெக பின்வாங்கியது. இதனைத் தொடந்து அன்புமணி எதிர்பார்த்தது நடக்கவில்லை. விஜய்யிடம் இருந்து எந்த சிக்னலும் இல்லை, தவெக தலைமையிடமிருந்தும் அழைப்பு இல்லை எதிர்பார்த்த கதவு திறக்காததால் பாமக தலைமை கடும் குழப்பத்தில் நிற்பதாக உள்விவரங்கள் தெரிவிக்கின்றன.
நாங்கள் இன்னும் என்டிஏ கூட்டணியில்தான் இருக்கிறோம் – பாமக திட்டவட்டம்
இந்த குழப்பங்களுக்கு மத்தியில் சௌமியா அன்புமணி நேற்று தெளிவாக பேசியுள்ளார், “நாங்கள் இன்னும் என்டிஏ கூட்டணியில்தான் இருக்கிறோம்” என்று. ஆனால் என்டிஏவில் தொடர்ந்தாலும், அதிமுக மீதான அதிருப்தி தொடர்கிறது என்பதே உண்மை. குறிப்பாக அதிமுக தலைமை மீதான அதிருப்தியில் இருப்பதால், என்டிஏவில் நீடிப்பதில் அவர்களுக்கு உடன்பாடில்லை என்ற தகவல் தான் இப்போது லேட்டஸ்ட். மறுபக்கம் காவிரி விவகாரத்தில் அன்புமணி போட்ட அதிரடி தான் அரசியல் களத்தை இன்னும் சூடாக்கியுள்ளது. மேகதாது அணை விவகாரத்தில் ராகுல் காந்தி தமிழகத்திற்கு ஆதரவாகப் பேசினால், என்டிஏவிலிருந்து வெளியேறத் தயார் என அன்புமணி வெளிப்படையாக கூறியுள்ளார். இது கூட்டணி மாற்றத்திற்கான மறைமுக சிக்னலா என அரசியல் வட்டாரம் கேள்வி எழுப்புகிறது.
மறுபக்கம் திமுகவின் கணக்கு என்ன?
அரசியல் வட்டாரத்தில் கசியும் மற்றொரு தகவல் தான் மிக முக்கியமானது. செய்தியாக திமுகவுக்குள் பாமகவை கொண்டு வரும் முடிவில் தான் பாமக தலைமை இருக்கிறது என்கிறார்கள். அதிமுக மீது நிலவும் கடும் அதிருப்தி காரணமாக, என்டிஏ கூட்டணியில் நீடிப்பதில் உடன்பாடில்லாமல், திமுகவின் வழியாக இந்தியா கூட்டணிக்குள் செல்லும் வாய்ப்பை பாமக ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இதன் மூலம் வன்னியர் சமூக வாக்குகளை ஒன்றிணைக்க முடியும் என திமுக தரப்பும் கணக்கு போடுகிறதாம். தவெகவா? திமுகவா? என்டிஏவா? பாமகவின் அடுத்த பாதை எது என்பது தான் இப்போது மில்லியன் டாலர் கேள்வி. உள்ளாட்சித் தேர்தலிலேயே கூட்டணி மாற்றம் நிகழுமா? அல்லது மக்களவைத் தேர்தலுக்காக அன்புமணி புதிய வியூகம் வகுக்கிறாரா? கூட்டணி கணக்குகள் மாறலாம், அரசியல் காட்சிகள் தலைகீழாகலாம்! பாமகவின் முடிவு வெளியாகும் நாளில் தான் தமிழக அரசியலின் அடுத்த திருப்பம் பிறக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Source link
