ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கில் நாளை தீர்ப்பு

சுல்தான்பூர்,

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கில், உத்தரப் பிரதேசத்தின் சுல்தான்பூர் எம்பி-எம்எல்ஏ (MP-MLA) சிறப்பு நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.

அவதூறு பேச்சு

பெங்களூரில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியபோது, அப்போதைய பாஜக தேசியத் தலைவரும் தற்போதைய மத்திய உள்துறை மந்திரியுமான அமித் ஷா குறித்து கடுமையான விமர்சனம் செய்தார். அமித் ஷா குறித்து ஆட்சேபனைக்குரிய அவதூறான கருத்துக்களை வெளியிட்டதாக கூறி, சுல்தான்பூர் எம்பி-எம்எல்ஏ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

சுல்தான்பூரைச் சேர்ந்த அன்றைய பாஜக மாவட்டத் துணைத் தலைவர் விஜய் மிஸ்ரா இந்த அவதூறு வழக்கை 2018 ஆகஸ்ட் 4ம் தேதி தாக்கல் செய்தார். இவ்வழக்கில் இருதரப்பு வாதங்களும் கடந்த 13ஆம் தேதி முழுமையாக முடிவடைந்த நிலையில், 26-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சிறப்பு நீதிபதி சுபம் வர்மா அறிவித்தார். மேலும், தீர்ப்பு வழங்கப்படும் போது ராகுல் காந்தி நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

நாளை தீர்ப்பு

அதன்படி, ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இதற்காக ராகுல் காந்தி, நாளை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வழக்கு விசாரணையின்போது, ராகுல் காந்தியின் குரல் மாதிரியை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்று மிஷ்ரா கோரினார். அவரது விண்ணப்பத்தை விசாரணை நீதிமன்றம் நிராகரித்தது. அந்த உத்தரவுக்கு எதிராக அவர் தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பின்னர் அந்த இரு நீதிமன்றங்களின் முடிவுகளையும் எதிர்த்து அவர் அலகாபாத் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Source link