தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்கள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தவெக தலைமையின் கீழ் தமிழகத்தில் நல்லாட்சி ஊழியர்கள் அமைந்ததற்கு தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு அனைத்து நலச்சங்கத்தின் சார்பாக மனமார்ந்த வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு பணிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்ட தற்காலிக பணியாளர்கள் ஐந்தாண்டு பணி அனுபவம் பெற்ற உடன் அவர்கள் நிரந்தர பணியாளராக நியமனம் செய்யப்படுவார்கள் என்று தவெக சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் வாக்குறுதி அளித்தது.
இந்நிலையில் மணிப்பூர், ஒரிசா மற்றும் ராஜஸ்தான் மாநில அரசுகள் எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்டத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்துள்ளனர். எனவே தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் முகமாக எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்டத்தில் ஐந்து ஆண்டுக்கு மேல் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிக் கொண்டிருக்கும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மேலும் எய்ட்ஸ் கட்டுப்பாடு ஊழியர்களின் நிலையை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
மத்திய அரசின் சுகாதாரத் துறையின் கீழ் இயங்கும் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் நிதி உதவி மற்றும் வழிகாட்டுதலின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் கீழ் பணிபுரியும் ஆலோசகர்கள், ஆய்வக நுட்புனர்கள், மருந்தாளுனர்கள், செவிலியர்கள், விபர குறிப்பு மேலாளர்கள், சமூக நல ஒருங்கிணைப்பாளர்கள் மேற்பார்வையாளர்கள், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு ஊழியர்கள், ஊர்தி ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்கள் உள்ளிட்ட 2200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் 20 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.
உலகம் முழுவதும் எய்ட்ஸ் என்ற சொல்லை கேட்டாலே பாமரர் முதல் படித்தவர் வரை முகம் சுழித்து விலகி செல்லும் காலகட்டத்தில் இருந்து அந்த நிலையை மாற்றி எச்ஐவி பாதிக்கப்பட்ட குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆரோக்கியமான வாழ்க்கை பெற சமுதாயத்தில் நல்ல ஒரு மதிப்புடன் வாழ்வதற்கு அடிப்படையாக பணியாற்றுவதே லட்சிமாகக் கொண்டு பணியாற்றி வருகின்றனர். தற்கொலை செய்து கொள்வது, வாழ்க்கை முடிந்து விட்டது என்று விரக்தி நிலை, எய்ட்ஸ் உள்ளவர்களை சமூகம் உறவினர்கள் என பலரும் வெறுத்து ஒதுக்கி வைத்திருந்த நிலை இந்த நிலைகளை மாற்றி அவர்களும் சமுதாயத்தில் சக மனிதர்களாக வாழ்வதற்கு பல வகைகளில் சேவை செய்து வருகின்றனர்.
தற்போது அகில இந்திய அளவில் எச்ஐவி தொற்று பரவு விகிதம் 0.29 சதவீதம் உள்ள நிலையில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் பல்வேறு விழிப்புணர்வு திட்டங்கள் மூலமாக எடுத்த தீவிர நடவடிக்கை காரணமாக மக்களிடையே எச்ஐவி தொடர்பான விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது தமிழ்நாட்டில் எய்ட்ஸ் நோய் பரவும் விதம் 0.18 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. தாயிடமிருந்து குழந்தைக்கு தொற்று பரவுவதை தடுப்பது இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் என்று மத்திய அரசால் பாராட்டப்பட்டுள்ள நிலையில் இதற்கு இரவு பகல் என்று பாராமல் அர்ப்பணிப்பு உணர்வுடன் அயராது பாடுபட்ட தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் கீழ் பணிபுரியும் ஊழியர்கள் வாழ்நிலையோ மிகவும் பரிதாபகரமாக உள்ளது.
இதுநாள் வரை ஒப்பந்த முறையில் மட்டும் மாத சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் காசநோய் உள்ளிட்ட சந்தர்ப்பவாத நோய்கள் ஏற்பட்டு 30க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். கொரோனா காலகட்டத்தில் முன்கள பணியாளர்களாக பணிபுரிந்து பலர் இறந்துள்ளனர். அதுபோல சிரமங்களுக்கு இடையே தமிழக அரசின் கீழ் பணிபுரிந்து வரும் எங்களுக்கு வருங்கால வைப்பு நிதி திட்டம் மருத்துவ காப்பீடு பணிக்கொடை ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட எந்தவிதமான அடிப்படை சலுகைகளும் வழங்கப்படுவதில்லை. பணி பாதுகாப்பும் கிடையாது. பெரும்பாலும் 40 முதல் 50 வயதை கடந்தவர்கள் என்பதால் வேறு அரசு வேலைக்கு செல்ல முடியாத சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.
எனவே, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க ஊழியர்களின் நியாயமான கோரிக்கையான கோரிக்கைப்பான பணி நிரந்தர கோரிக்கையை நிறைவேற்றித் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
