திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த வரலாறு காணாத கனமழையின் காரணமாகப் பல்வேறு இடங்களில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கொடைக்கானல் அருகே உள்ள அடுக்கம் மலைக்கிராமம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுத் தனித்தீவு போல மாறியுள்ளது.கொடைக்கானல் மலைப்பகுதியில் நேற்று நண்பகல் வேளையில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக இடைவிடாது கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் மலைப்பாதைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பல்வேறு இடங்களில் பாறைகளும் ராட்சத மரங்களும் வேரோடு சாய்ந்து விழுந்தன.
குறிப்பாக, கொடைக்கானலில் இருந்து அடுக்கம் வழியாகப் பெரியகுளம் செல்லும் பிரதான மலைப்பாதையில் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் மிகக் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. பல இடங்களில் தார்ச்சாலைகள் அடித்துச் செல்லப்பட்டு, பெரும் பள்ளங்கள் உருவாகி போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.
தனித்தீவாக மாறிய அடுக்கம் கிராமம்
சாலைகள் துண்டிக்கப்பட்டதால் அடுக்கம் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் வெளி உலகத் தொடர்பை இழந்து தனித்தீவு போல மாறின. அடுக்கம் மலைக்கிராம மக்கள் எங்கும் வெளியே செல்ல முடியாமல் பெரும் தவிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.
பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, கொடைக்கானலில் உள்ள பிரபல சுற்றுலாத் தலங்களான பில்லர் ராக், குணா குகை (Guna Cave), பைன் காடுகள் மற்றும் மோயர் பாயிண்ட் உள்ளிட்ட வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துப் பகுதிகளும் நாளை செயல்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகள் மலைப்பகுதிகளுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறும், தேவையற்ற பயணங்களை ஒத்திவைக்குமாறும் மாவட்ட நிர்வாகமும் வனத்துறையும் அறிவுறுத்தியுள்ளன. அசம்பாவிதங்களைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
