சென்னை,
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் மூன்று சக்கர வாகனங்களில் பேரணியாகச் சென்று தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் – 2026ஐ முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்காளர்கள் வாக்களிப்பதை உறுதி செய்திடும் வகையில், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் வாயிலாக அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதில் குறிப்பாக மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர்களுக்கு எவ்வாறு வாக்களிப்பது, வாக்களிப்பதன் அவசியம், மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள வசதிகள் மற்றும் தேர்தல் ஆணையத்தால் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிடும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ள சக்ணனா செயலி ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் நிகழ்வு பெருநகர சென்னை மாநகராட்சி தேர்தல் அலுவலர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில், இன்று (11.04.2026) சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மெரினா கடற்கரை, காமராஜர் சாலை, விவேகானந்தர் இல்லம் அருகில் 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மூன்று சக்கர வாகனங்களில் விழிப்புணர்வு பதாகைகளுடன் பேரணியாகச் சென்று வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதுபோன்று ஏற்கனவே டாக்டர் ராதாகிருஷ்ணன் சட்டமன்றத் தொகுதி, தண்டையார்பேட்டை, ரெட்டைக்குழி தெருவில் உள்ள தமிழ்நாடு பார்வையற்றோருக்கான சங்கத்தில் (Tamilnadu Association of the Blind) உள்ள பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு தொடு உணர்வு (Braille) மூலம் வாக்களிப்பது குறித்து செயல்முறை விளக்கத்துடன், துண்டுப் பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி, சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள விழுதுகள் ஒன் ஸ்டாப் சென்டரில் உள்ள காது கேளாதோர் மற்றும் வாய் பேச இயலாத வாக்காளர்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்து சைகை மொழி வாயிலாக எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
