கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் சில காய்கறிகளின் விலையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக வெங்காயம் 20 ரூபாய்க்கும் மேல் உயர்ந்துள்ளது. இது அடுத்த இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் கோயம்பேடு காய்கறி சந்தைக்கு காய்கறிகள் வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் ஆயுத பூஜை, விஜயதசமி சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. அடுத்த இரண்டு வாரங்களில் தீபாவளி பண்டிகை (நவம்பர் 8) வரப் போகிறது. எனவே காய்கறிகள், பழங்களுக்கு கிராக்கி இருக்கும். அதேசமயம் வடகிழக்கு பருவமழை படிப்படியாக அதிகரித்து வருவதால் விலைவாசி உயர்வை தடுக்க இயலாது.
கோயம்பேட்டில் வெங்காயம் விலை நிலவரம்
கோயம்பேட்டில் பெரும்பாலான காய்கறிகளின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை என்று தெரிகிறது. அதேசமயம் வெங்காயம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது. இதுதொடர்பாக கோயம்பேடு சிறு மொத்த வியாரிகள் சங்கத் தலைவர் எஸ்.எஸ்.முத்துக்குமார் அவர்களிடம் சமயம் தமிழ் சார்பாக கேட்ட போது, ஒரே நாளில் வெங்காயம் விலை 20 ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது.
இதன்மூலம் முதல் தரம் 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இரண்டாம் தரம் 65 ரூபாய்க்கும், மூன்றாம் தரம் 60 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இந்த விலை தீபாவளி வரை நீடிக்கும் என்கின்றனர்.
சென்னை புறநகரில் கிலோ ரூ.80க்கு விற்பனை
மேலும் சென்னை புறநகர் பகுதிகளில் வெங்காயம் விலை சில்லறை விற்பனையில் 80 ரூபாய் வரை விற்பதற்கு வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்தார். ஒட்டுமொத்த காய்கறி விலை பட்டியலையும் எடுத்து பார்த்தால் கடந்த வெள்ளி அன்று (அக்டோபர் 23) விற்கப்பட்ட விலையே தொடர்ந்து நீடித்து வருகிறது. கர்நாடகா வெங்காயத்தின் விலையும் உயர்ந்துள்ளது. கிலோவிற்கு 20 ரூபாய் உயர்ந்து முதல் தரம் 60 ரூபாய், இரண்டாம் தரம் 58 ரூபாய் என விற்கின்றனர்.
வெளிமாநில வெங்காயம் இறக்குமதி பாதிப்பு
தமிழகத்தை பொறுத்தவரை மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து வெங்காயம் லாரிகள் மூலம் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த மாநிலங்களில் கனமழை பெய்யும் போது அறுவடை பணிகள் பாதிக்கும். வயல்களில் மழைநீர் தேங்குவதுடன், சேகரித்து வைக்கப்பட்ட வெங்காயமும் ஈரப்பதத்தால் சேதமடையும்.
மேலும் வரும் வழியில் தொடர் மழை, நிலச்சரிவு போன்றவை ஏற்பட்டால் லாரிகள் சந்தைக்கு வந்து சேர்வதில் 2, 3 நாட்கள் தாமதமாகும். இதுபோன்ற காரணங்களால் வெங்காயத்தின் விலை உயர்வதற்கு வாய்ப்புள்ளது. தற்போதைய சூழலில் மழை பாதிப்புகள் பிரதானமாக பார்க்கப்படுகிறது.
நெருங்கும் தீபாவளி- காலியாகும் பழைய சரக்குகள்
விரைவில் தீபாவளி பண்டிகை வரவுள்ளதால், பழைய இருப்பு வெங்காயங்களை முழுவதுமாக விற்க மொத்த வியாபாரிகள் திட்டமிடுவர். இதற்காக ஏராளமான லாரிகள் மூலம் வெங்காயம் சந்தைக்கு அனுப்பி வைக்கப்படும். அப்போது விலை குறைய வாய்ப்புள்ளது. அப்படி பார்த்தால் அடுத்த இரண்டு நாட்களில் விலை குறையலாம் என்கின்றனர்.
தக்காளி கிலோ ரூ.50க்கு விற்பனை
இதுதவிர ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் புதிய பருவத்தில் பயிரிடப்பட்ட வெங்காயம் வரும் நவம்பர் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் அறுவடைக்கு வரும். அப்போது வெங்காயம் விலை குறைய வாய்ப்புள்ளது.
தக்காளி விலையில் மாற்றம் ஏதும் இல்லை என்பதால் சமையல் செய்பவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். முதல் தரம் 50, இரண்டாம் தரம் 40, மூன்றாம் தரம் 30 என விற்பனை செய்யப்படுகிறது. நவீன தக்காளி 50 ரூபாய் என ஒரு கிலோ விற்கப்படுகிறது. மற்ற காய்கறிகள் அனைத்தும் அதே விலையில் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
