11ம் நாள் வசூல் குவிப்பு: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் 2 படம் திரைக்கு வந்த நாளில் இருந்தே வசூலில் புதுப் புது சாதனைகள் படைத்துக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் 11வது நாள் வசூல் விபரம் வெளியாகியிருக்கிறது. டைகர் முத்துவேல் பாண்டியன் பெரிய சம்பவம் செய்த அந்த படம் நேற்று இந்தியாவில் ரூ. 25 கோடியே 70 லட்சமும், உலக அளவில் ரூ. 10 கோடியும் வசூல் செய்திருக்கிறது.
ரிலீஸான அக்டோபர் 15ம் தேதியில் இருந்தே பிற மொழிகளை விட தமிழில் தான் ரஜினிகாந்த் படத்திற்கு அதிகமாக வசூல் வந்து கொண்டிருக்கிறது. நேற்று இந்தியாவில் தமிழில் ரூ. 17 கோடியே 35 லட்சமும், தெலுங்கில் ரூ. 4 கோடியே 50 லட்சமும், இந்தியில் ரூ. 3 கோடியே 15 லட்சமும், கன்னடத்தில் ரூ. 70 லட்சமும் வசூல் கிடைத்திருக்கிறது. இதன் மூலம் திரைக்கு வந்த 11வது நாளில் ஜெயிலர் 2 படம் உலக அளவில் ரூ. 710 கோடியே 35 லட்சம் வசூல் செய்திருக்கிறது என்கிறது சாக்னிக்.
ரூ. 700 கோடி கிளப்: இதன் மூலம் இதுவரை தமிழில் எந்த படமும் செய்யாத வசூல் சாதனையை செய்துவிட்டது. அதாவது தமிழில் இதற்கு முன்பு எந்த படமும் ரூ. 700 கோடி வசூல் செய்தது கிடையாது. முன்னதாக ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 2.0 படம் உலக அளவில் ரூ. 691 கோடி வசூல் செய்தது தான் அதிகபட்சமாக இருந்தது. தற்போது 2.0 பட சாதனையை அதாவது தன் பட வசூல் சாதனையை ரஜினியே முறியடித்துவிட்டார்.
76 வயதில் அதுவும் அவர் வயதுக்கேற்ற கதாபாத்திரம், பிற மொழி படங்களில் பெரிய ஸ்டார்களாக இருக்கும் மோகன்லால், சிவராஜ்குமார், ரித்திக் ரோஷன் உள்ளிட்டோரை வரவைத்து எதிரிகளை தொம்சம் செய்து தான் பாக்ஸ் ஆபீஸ் மெகா கிங் என்று நிரூபித்துவிட்டார் ரஜினிகாந்த்.
ரஜினி கோட்டை: ஜெயிலர் படம் ரூ. 600 கோடி வசூல் செய்தது பெரிய விஷயமாக பார்க்கப்பட்ட நிலையில் அதன் இரண்டாம் பாகம் ரூ. 700 கோடியை தாண்டி மேலும் சில சாதனைகள் படைக்க காத்திருக்கிறது. நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு அரசியலுக்கு செல்லும் முன்பு வரை தளபதி விஜய்யின் கோட்டையாக இருந்தது கேரளா. தற்போது அது ரஜினிகாந்த் கோட்டையாக மாறிவிட்டது.
திரைக்கு வந்த முதல் நாளே கேரளாவில் விஜய்யின் லியோ செய்த சாதனையை முறியடித்து சேட்டன்கள், சேச்சிகளின் மாநிலத்தில் மிகப்பெரிய ஓபனிங் பெற்ற தமிழ் படமாகிவிட்டது ஜெயிலர் 2. அது மட்டும் அல்ல கேரளாவில் அதிகம் வசூல் செய்த தமிழ் படம் என்கிற லியோவின் சாதனையையும் கடந்த வாரமே முந்திவிட்டது ரஜினிகாந்த் படம்.
ரூ. 1000 கோடிக்கு காத்திருப்பு: ஜெயிலர் 2 ஆயிரம் கோடி ரூபாய் வசூலிக்குமா என்கிற கேள்வி அனைவர் மனதிலும் இருக்கிறது. இந்நிலையில் ரூ. 710 கோடி வந்துவிட்டதால் ரூ. 1000 கோடி சாத்தியமாகும் சூழல் உள்ளது. ஜெயிலர் 2 படம் ரூ. 1000 கோடி வசூலிக்கணும், தமிழ் சினிமாவும் ரூ. 1000 கோடி கிளப்பில் சேரணும் என்பதே கோலிவுட் ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.
சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்
இந்நிலையில் ஜெயிலர் 3 படமும் வரவிருக்கிறது என்பதை 2ம் பாகத்திலேயே சொல்லிவிட்டார்கள். ஜெயிலர் 2 படம் எந்த ஓடிடி தளத்தில் வரும் என ரசிகர்கள் கேட்கிறார்கள். அந்த படத்தை அமேசான் பிரைமில் பார்க்கலாம். ஆனால் ஜெயிலர் 2 ஓடிடி ரிலீஸ் தேதியை அமேசான் பிரைமோ, சன் பிக்சர்ஸ் நிறுவனமோ இதுவரை வெளியிடவில்லை.
Source link
