ஸ்ரீகாந்தி ராமதாஸ் உடன் தனுஷ் மேனேஜர் ஸ்ரேயாஸ் சந்திப்பு: பனையூரில் புதிய அரசியல் கணக்கு – reason behind dhanush manager sheryas met sri ganthi ramadoss at panaiyur home

நடிகர் தனுஷ் புதிய அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் சூழலில், அடுத்தடுத்து மன்ற நிர்வாகிகள் உடன் சந்திப்புகளை நிகழ்த்தி வருகிறார். இந்த சூழலில் ராமதாஸ் மகள் ஸ்ரீகாந்தி உடன் தனுஷ் மேனேஜர் ஸ்ரேயாஸ் சந்தித்த விஷயம் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

ஸ்ரீகாந்தி ராமதாஸ் – ஸ்ரேயாஸ் சந்தித்த புகைப்படத்தை பார்த்ததும் புதிய அரசியல் கூட்டணி உருவாகிறதா? இல்லை ஒன்றிணைந்த அரசியல் பிரவேசமா? போன்ற கேள்விகள் எழுந்துள்ளன. முதலில் யார் இந்த ஸ்ரேயாஸ் என்பதை தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. நடிகர் தனுஷின் சொந்த தயாரிப்பு நிறுவனம் Wunderbar Films. இதுவரை 20க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ளது. இதன் மேனேஜராக இருப்பவர் தான் ஸ்ரேயாஸ். அதுமட்டுமின்றி தனுஷ் நடக்கும் படங்களின் கால்ஷீட் விஷயங்களை கவனித்து கொள்கிறார். நடிகர் விஜய்க்கு ஜெகதீஷ் எப்படியோ, அதுபோல் நடிகர் தனுஷ்க்கு ஸ்ரேயாஸ் என்று கோலிவுட் வட்டாரத்தில் கூறுகின்றனர்.

ஸ்ரீகாந்தி ராமதாஸ் அரசியல் சர்ச்சை

இனி ஸ்ரீகாந்தி விஷயத்திற்கு வருவோம். பாமக நிறுவனர் ராமதாஸின் மூத்த மகள் ஸ்ரீகாந்தி. இவருக்கு முகுந்தன், பிரிதிவன், சுகந்தன் என மூன்று மகன்கள். இதில் முகுந்தன் விஷயத்தை தமிழக அரசியலை உற்றுநோக்கும் அனைவரும் நன்கு அறிந்திருப்பர். பாமகவின் மாநில இளைஞரணி தலைவராக முகுந்தனை ராமதாஸ் நியமித்த போது, அன்புமணி கடுமையாக எதிர்த்தார். இந்த அதிருப்தி பொதுமேடையில் வெளிப்பட்டது. கூட்டத்தில் இருந்து அன்புமணி கோபமாக வேகமாக வெளியேற நிகழ்வுகள் எல்லாம் அரங்கேறின.

அரசியலில் தனுஷ்…பின்னால் இருக்கும் பெரிய தலை?

பாமகவில் தந்தை, மகன் மோதல்- ஸ்ரீகாந்தி பிளான்

பின்னர் தந்தை – மகன் இடையிலான மோதலாக மாறியது. இதையடுத்து தனது பொறுப்பிலிருந்து முகுந்தன் விலகினார். ஸ்ரீகாந்திக்கு பதவிகள் வழங்கப்பட்டன. நீண்ட மோதலை அடுத்து, ராமதாஸ் – அன்புமணி இருவரும் ஒன்று சேர்ந்தனர். ஸ்ரீகாந்தி தனித்து விடப்பட்டார். இருப்பினும் தனது அரசியல் இருப்பை உறுதி செய்ய புதுச்சேரி முதலமைச்சரும், என்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான என்.ரங்கசாமியை நேரில் சந்தித்து சந்தித்தார். தமிழகத்தில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பொறுப்பை கவனித்து கொள்ளும் வகையில் பதவிகள் வழங்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகின. ஆனால் விஷயம் அப்படியே சைலண்ட் ஆனது.

ஸ்ரீகாந்தி ராமதாஸ் ஸ்ரேயாஸ் பேச்சுவார்த்தை

இந்த சூழலில் தான் தனுஷ் அரசியலுக்கு வருவதை அறிந்து, அவருடன் கைகோர்க்க காய் நகர்த்துகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுவும் தனுஷ் தரப்பு நேரடியாக பனையூருக்கு சென்று ஸ்ரீகாந்தியை அவரது வீட்டில் சந்தித்து பேசியிருப்பதாக கூறுகின்றனர். ஸ்ரீகாந்தி உடன் இணைந்து அரசியலில் ஈடுபட தனுஷ் விரும்புவதாக பேசப்படுகிறது.

பனையூர் சந்திப்பின் பின்னணி

இதுபற்றி விசாரிக்கையில், அப்படி எதுவும் இல்லை எனத் தெரிய வந்துள்ளது. ஸ்ரீகாந்தியின் மகன்களில் ஒருவர் ஸ்ரேயாஸின் நெருங்கிய நண்பர். எனவே தனது நண்பனை சந்திக்க சென்ற இடத்தில் அவரது தாயாருடன் புகைப்படம் எடுத்திருக்கிறார். இது முழுக்க முழுக்க மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே என்று ஸ்ரேயாஸ் தரப்பில் இருந்து விளக்கம் அளித்துள்ளனர். அதற்குள் தனுஷின் கைகளை பலப்படுத்த ராமதாஸ் குடும்பத்தில் இருந்து வரும் அரசியல் ஆளுமை என்றெல்லாம் பதிவுகள் இட்டு, வைரலாக்க தொடங்கிவிட்டனர்.

கட்டமைப்பை பலப்படுத்தும் தனுஷ்

தனது ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றி, அதற்கான கொடி, சின்னம் ஆகியவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சி கட்டமைப்பை போன்று தனது இயக்கத்தின் கட்டமைப்பை தனுஷ் படிப்படியாக வடிவமைத்து வருகிறார். மாவட்ட வாரியாக நிர்வாகிகள் நியமனம் தொடங்கி உறுப்பினர்கள் சேர்க்கை வரை பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. மேலும் சமீபத்திய டெல்லி பயணமும், தனுஷ் நடத்திய சந்திப்புகளும் இன்னும் அழுத்தமான மெசேஜை சொல்கிறது. எனவே அரசியலுக்கு வருவது உறுதி என்று பேசப்படும் சூழலில், அவருடன் கைகோர்க்க தற்போது பலர் காய் நகர்த்த ஆரம்பித்திருப்பதையும் கவனிக்க வேண்டியுள்ளது.

Source link