மதுரை,
வீட்டின் அருகே விளையாடிய சிறுவனை கடத்தி கொலை செய்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிறுவன் மாயம்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழவளவு பகுதியில் உள்ள தனியாமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் பெரியகருப்பன். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சத்யா. இவர்களுக்கு 2 மகள்களும், முத்துவேலன் (வயது 7) என்ற மகனும் உண்டு.
இதில் சிறுவன் முத்துவேலன் தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் விடுமுறை என்பதால் வீட்டின் அருகே மற்ற சிறு வர்களுடன் விளையாடினான். அவனது தாய் சத்யா, வயலுக்கு சென்றுவிட்டு பிற்பகல் 2 மணி அளவில் வீடு திரும்பினார். அப்போது விளையாடி கொண்டிருந்த சிறுவன் திடீரென மாயமானார். எங்கு தேடியும் கிடைக்காததால் சிறுவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர்.
பிணமாக மீட்பு
இந்த நிலையில் நேற்று, சிறுவன் வீட்டின் அருகே உள்ள பகுதியில் ஒரு பாழடைந்த ஓட்டு வீட்டில் முத்துவேலனை பிண மாகமீட்டனர். போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். சிறுவனின் உடலில் காயங்கள் இருந்ததாக தெரியவருகிறது. ஆனால், சிறுவன் மரணத்திற்கான காரணம் குறித்து பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகே கூற முடியும் என போலீசார் தெரிவித்தனர்.
உறவினர்கள் போராட்டம்
சிறுவனின் உடல் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், சிறுவனின் குடும்பத்தினர், உறவினர்கள், கிராம மக்கள் என ஏராளமானவர்கள் திரண்டு வந்தனர். அரசு ஆஸ்பத்திரி பிணவறை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து சிறுவனின் உறவினர்கள் கூறியதாவது:-
சிறுவனை காணவில்லை என்று கூறியதும் நாங்கள்தான் பல இடங்களில் தேடினோம். போலீசார் எங்கும் தேட வில்லை. அலட்சியமாக செயல்பட்டனர். கடைசி நேரத்தில்தான் டிரோனை பறக்கவிட்டு தேடினர். எங்களைத்தான் வேலை வாங்கினார்கள். சரியான நேரத்தில் தேடி இருந்தால், சிறுவனை முன்கூட்டியே கண்டுபிடித்து இருக்கலாம். உடல் மீட்கப்பட்ட இடத்திற்கு பெரியவர்கள்கூட செல்ல மாட்டார்கள். அதனால், சிறுவனும் அங்கு செல்வதற்கு வாய்ப்பு இல்லை. இது முழுக்க முழுக்க கொலையாகத்தான் இருக்கும்.
சிறுவனின் கழுத்தில் கயிற்றால் இறுக்கிய தடங்கள் உள்ளன. வாயில் ரத்தம், கண்ணிற்கு கீழ் காயம் இருக்கிறது. பற்கள் உடைந்துள்ளன. சிறுவனின் சாவில் மர்மம் உள்ளது. கடத்திச்சென்று கொலை செய்துள்ளனர். சிறுவனின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் வரை உடலை வாங்கமாட்டோம்.
