பழனி முருகன் கோவில் பிரசாதங்கள் விலை உயர்வு – 1-ந்தேதி முதல் அமல்

திண்டுக்கல்,

பழனி முருகன் கோவில் பிரசாதங்கள் விலை உயர்வு வருகிற நவம்பர் 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.

பழனி முருகன் கோவில்

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

பிரசாதம்

பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் லட்டு, அதிரசம், முறுக்கு, தேன் திணைமாவு, சர்க்கரைப்பொங்கல், புளியோதரை ஆகிய 6 வகையான பிரசாதங்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதுவரை இந்த பிரசாதங்கள் அனைத்தும் தலா ரூ.15-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தன.

விலை உயர்வு

இந்த நிலையில், மூலப் பொருட்களின் விலை உயர்வு மற்றும், அனைத்து கோவில்களிலும் ஒரே மாதிரியான விலையில் தரமான மூலப்பொருட்களை கொண்டு பிரசாதங்கள் தயாரித்து விற்பனை செய்யும் திட்டத்தின் அடிப்படையிலும் விலையை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

1-ந்தேதி முதல் அமல்

அதன்படி லட்டு (50 கிராம்), அதிரசம் (50 கிராம்) ஆகியவை தலா ரூ.20-க்கும், முறுக்கு (50 கிராம்) ரூ.25-க்கும், தேன் திணைமாவு (50 கிராம்) ரூ.15-க்கும், சர்க்கரைப்பொங்கல் (150 கிராம்), புளியோதரை (150 கிராம்) ஆகியவை தலா ரூ.20-க்கும் விற்பனை செய்யப்பட உள்ளன. இந்த விலை மாற்றம் நவம்பர் 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.

மேற்கண்ட தகவல் பழனி கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link