மானாமதுரை,
தனியார் ஆலையில் அமில வாயுவால் தொழிலாளி உயிரிழந்தார். இதனால் அந்த ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.
தனியார் ஆலை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள பணிக்கனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ஜேசுதாஸ் (வயது 39). இவர் மானாமதுரை சிப்காட் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் ஆலையில் வேலை பார்த்து வந்தார்.
இந்த ஆலையில் கடற்பாசியில் இருந்து இயற்கை உரங்கள் தயாரிக்கப்படுவதுடன், வாசனை திரவியங்கள் மற்றும் உணவு பொருட்கள் உள்ளிட்ட பொருட்களும் தயாரிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆலையில் ஜேசுதாஸ், பழனிச்செல்வன். பாலமுருகன் ஆகிய 3 பேர் கடற்பாசியை பதப்படுத்தும் பணியில் ஈடுபட்டு இருந்ததாகவும். இதற்காக ஒருவகை அமிலம் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தொழிலாளி சாவு
அமிலத்தில் இருந்து வெளியான வாயுவை சுவாசித்த ஜேசுதாஸ் மயங்கி விழுந்தார். சக தொழிலாளர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜேசுதாஸ் பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த மானாமதுரை சிப்காட் போலீசார் ஆலைக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் ஜேசுதாஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலைக்கு சீல்
இதற்கிடையே சிவகங்கை கோட்டாட்சியர் ஜெபி கிரேசியா விசாரணை நடத்தி ஆலைக்கு தற்காலிகமாக சீல் வைத்தார். அப்போது தாசில்தார் மகாதேவன், மண்டல துணை தாசில்தார் வினோத் ஆகியோரும் உடன் இருந்தனர்.
