கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள கண்ணண்ட அள்ளி பகுதியில், குடும்பத் தகராறு காரணமாக 70 வயது முதியவரான தனது மாமனாரை வீடு புகுந்து சுத்தியல் மற்றும் கத்தியால் கொடூரமாகத் தாக்கிய மருமகனை போலீசார் கைது செய்துள்ளனர்.
குடும்பத் தகராறு
கிருஷ்ணகிரி மாவட்டம் கண்ணண்ட அள்ளி பகுதியைச் சேர்ந்தவர் நாராயணசாமி (வயது 70). இவரது மருமகன் சந்திரசேகரன். இவர்களுக்கிடையே கடந்த சில காலமாகவே கடுமையான குடும்பத் தகராறு மற்றும் பணப் பரிவர்த்தனை தொடர்பான மனக்கசப்புகள் இருந்து வந்துள்ளது.
சுத்தியல்- கத்தியால் தாக்குதல்
இந்நிலையில், கடந்த 14-ந்தேதி இரவு நாராயணசாமியின் வீட்டிற்கு வந்த சந்திரசேகரன், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த சந்திரசேகரன் தான் மறைத்து வைத்திருந்த சுத்தியல் மற்றும் கத்தியை எடுத்து நாராயணசாமியின் தலை மற்றும் உடல் பகுதிகளில் கொடூரமாகத் தாக்கியுள்ளார்.
தப்பியோட்டம்
இதனை அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் தடுத்தனர். எனினும் சந்திரசேகரன் மாமனாரை மீண்டும் தாக்கியுள்ளார். முதியவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் சந்திரசேகரன் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
சிசிடிவி காட்சி வெளியீடு
ரத்த வெள்ளத்தில் சரிந்த நாராயணசாமியை மீட்ட உறவினர்கள், அவரை சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், முதியவரை மருமகன் சுத்தியலால் கொடூரமாகத் தாக்கும் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
மருமகன் கைது
இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் மத்தூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். தலைமறைவாக இருந்த சந்திரசேகரனைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இந்நிலையில், கடந்த 17-ந்தேதி அன்று தலைமறைவாக இருந்த மருமகன் சந்திரசேகரனை போலீசார் அதிரடியாக கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
