படக்குறிப்பு, 3 தொடர் தோல்விகளுக்குப் பிறகு இந்த சீசனில் தங்கள் முதல் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் (கோப்புப் படம்)கட்டுரை தகவல்
நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஹாட்ரிக் தோல்விக்குப் பிறகு தனது முதல் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது. சேப்பாக்கத்தில் ஒரு முழுமையான செயல்பாட்டைக் கொடுத்து தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது சிஎஸ்கே.
டாஸை தோற்றிருந்தாலும் அதைப் பற்றி யோசிக்காமல் முதலில் பேட்டிங் செய்து ஒரு பெரிய ஸ்கோரை பதிவு செய்தது. பெரும் விமர்சனங்களை சந்தித்த அந்த அணியின் பௌலிங் மிகமுக்கியமான இந்தப் போட்டியில் எழுச்சி கண்டிருக்கிறது. போதாக்குறைக்கு இந்தப் போட்டியில் சூப்பர் கிங்ஸின் ஃபீல்டிங்குமே சமீபத்தில் இல்லாத அளவிற்கு சிறப்பாக இருந்தது.
அனைத்து துறைகளும் நல்ல செயல்பாட்டைக் கொடுத்திருக்கும் நிலையில், டெவால் பிரெவிஸும் அணியில் இணைந்திருப்பது சூப்பர் கிங்ஸ் மீது பெரும் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. அடுத்த சில நாள்கள் சூப்பர் கிங்ஸுக்கு சாதகமாக இருக்கும் என்ற நம்பிக்கையையும் இந்த செயல்பாடு கொடுத்திருக்கிறது.
உத்வேகம் கொடுத்திருக்கும் சாம்சன்
ஹாட்ரிக் தோல்விகளுக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு உத்வேகம் கொடுக்கக்கூடிய ஒரு செயல்பாடு தேவைப்பட்டது. அதைக் கொடுக்கக்கூடிய வீரர்கள் நிறையப் பேர் இருந்திருந்தாலும் அந்த 3 போட்டிகளில் அப்படியொரு செயல்பாடு கிடைக்கவில்லை. அது தற்போது சஞ்சு சாம்சன் வாயிலாக வந்திருக்கிறது. அணிக்குத் தேவையான நேரத்தில் ஒரு பெரிய சதம் அடித்திருக்கிறார் அவர்.
உலகக்கோப்பை செயல்பாட்டுக்குப் பிறகு அவர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. முதல் 3 போட்டிகளிலும் அது நடக்கவில்லை என்றாலும், இந்தப் போட்டியில் ஒரு மகத்தான இன்னிங்ஸை அவர் ஆடியிருக்கிறார். முந்தைய போட்டிகளில் அவரிடத்தில் ஒரு நெருக்கடி தெரிந்திருந்தாலும், இந்தப் போட்டியில் அது எதையுமே அவரிடத்தில் பார்க்க முடியவில்லை. அவர் மிகவும் அமைதியாகவும், நிதானமாகவுமே இருந்தார்.
ஒருசில ஷாட்களை சாம்சன் ஆடிய விதத்தைப் பார்க்கும்போது, என்னால் என் கண்களையே நம்பமுடியவில்லை. அவரது தலையும் உடலும் நிலைத்தன்மையோடு இருந்தது, ‘த்ரூ தி லைன்’ மிகச் சிறப்பாக ஆடினார். எக்ஸ்டிரா கவர் திசைக்கு மேலே அவர் அடித்த சில ஷாட்கள் அசாத்தியமானவையாக இருந்தன. உண்மையிலேயே ஒரு முழுமையான செயல்பாட்டைக் கொடுத்து சூப்பர் கிங்ஸ் தங்கள் முதல் வெற்றியைப் பதிவு செய்யக் காரணமாக அமைந்திருக்கிறார்.
இந்த இன்னிங்ஸ் அவருக்கு நிச்சயம் நம்பிக்கை கொடுக்கும். நீண்ட காலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்துவிட்டு தற்போது இங்கே வந்திருக்கும் அவருக்கு நிச்சயம் இது தன்னுடைய இடம், இது தன்னுடைய அணி என்ற உணர்வு உறுதியாக ஏற்படும். இது அவருக்கும் சரி, அணிக்கும் சரி நல்ல விஷயம்.
படக்குறிப்பு, ஐபிஎல் தொடரில் தன் நான்காவது சதத்தை அடித்தார் சஞ்சு சாம்சன் (கோப்புப் படம்)
நாம் தற்போது வைபவ் சூர்யவன்ஷியைப் பற்றி நிறைய பேசிக் கொண்டிருக்கிறோம். ஒரு மிகச் சிறந்த இளம் வீரராக அவர் உருவெடுத்திருக்கிறார். அவரது திறமையில் சற்றும் குறைவில்லாத இன்னொரு இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே. தைரியமான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். இளமையின் துடிப்பு அவரிடம் அதிகமாகவே வெளிப்படுகிறது. நம்பர் 3 இடத்தில் இந்த சீசன் சூப்பர் கிங்ஸுக்கு நல்ல செயல்பாட்டைக் கொடுத்துக்கொண்டிருக்கிறார்.
இந்தப் போட்டியிலும் கூட ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டமிழந்தபிறகு சாம்சனுக்கு நல்ல உறுதுணையாக இருந்தார். ஒரு வீரர் நல்ல டச்சில் இருந்தாலும், அவருக்கு பக்கபலமாக ஒரு வீரர் ஆடவேண்டும். அப்போதுதான் அவரது நம்பிக்கை பாதிக்கப்படாமல் இருக்கும். சாம்சனுக்கு அப்படி பக்கபலமாக இருந்தார் மாத்ரே. விக்கெட்டுகளுக்கு இடையே சிறப்பாக ஓடினார். அவரும் ஒருபக்கம் அதிரடியாக ஆடி ரன் ரேட் நெருக்கடி ஏற்படாமல் பார்த்துக்கொண்டார். அவரிடம் ‘ பாசிடிவ் இன்டென்ட்’ தெரிகிறது.
இந்த இளம் வீரரும் சிறப்பான செயல்பாட்டைக் கொடுத்திருப்பது சூப்பர் கிங்ஸ் பேட்டிங்குக்கு கூடுதல் நம்பிக்கை. அதேசமயம் கடைசி 2 ஓவர்களில் அவரது பேட்டில் பந்து சரிவர படாதபோது, அவரை ரிட்டையர்ட் அவுட் செய்து துபேவைக் களமிறக்கிய அணியின் முடிவு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சிஎஸ்கே சரியான உத்திகளைக் கையாளத் தொடங்கியிருக்கிறது என்ற நம்பிக்கையை இந்தப் போட்டியில் எடுக்கப்பட்ட சில முடிவுகள் காட்டுகின்றன.
படக்குறிப்பு, இந்த ஐபிஎல் சீசனில் தன் இரண்டாவது அரைசதத்தை நிறைவு செய்தார் ஆயுஷ் மாத்ரே (கோப்புப் படம்)
முன்னேற்றம் கண்ட பந்துவீச்சு
அதேபோல் பந்துவீச்சிலும் சூப்பர் கிங்ஸ் இந்தப் போட்டியில் நல்ல கம்பேக் கொடுத்தது. குறிப்பாக ஜேமி ஓவர்டனின் செயல்பாடு மிகச் சிறப்பாக இருந்தது.
தனக்கு எது நன்றாக வருமோ, அதை இந்தப் போட்டியில் ஓவர்டன் செய்தார். நல்ல வேகத்தில் சரியான லென்த்தில் தொடர்ச்சியாக பிட்ச் செய்தார். அதை எதிர்கொண்டு ரன் சேர்ப்பது டெல்லி பேட்டர்களுக்கு சவாலானதாகவே இருந்தது. அதிலும் குறிப்பாக டேவிட் மில்லர் விக்கெட்டை வீழ்த்திய பந்து இந்த சீசனின் சிறந்த பந்துகளுள் ஒன்று.
அனைத்து பௌலர்களும் ரன்களை வாரி வழங்கிய ஒரு போட்டியில் 4 ஓவர்கள் பந்துவீசி 18 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார் அவர். அணிக்கு எப்போது தேவையோ அப்போது முன்வந்து ஒரு மேட்ச் வின்னிங் செயல்பாட்டைக் கொடுத்திருக்கிறார். சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அவர் மீது தொடர்ந்து செலுத்திவந்த நம்பிக்கையை அவர் நியாயப்படுத்தியிருக்கிறார்.
அவர் மட்டுமல்ல, மற்ற வேகப்பந்துவீச்சாளர்களுமே சிறப்பாகப் பந்துவீசினார்கள். டெத் ஓவர்களில் நன்றாக யார்க்கர்கள் வீசும் கம்போஜ் 3 விக்கெட்டுகளோடு போட்டியை முடித்தார். கலீல் அவ்வளவு சிறப்பாகப் பந்துவீசவில்லை என்றாலும், அவருடைய விக்கெட் தாகம் இந்தப் போட்டியில் தீர்ந்தது. சிறப்பாகத் தொடங்கியிருந்த டெல்லியின் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பை கலீல் அஹமது ஒரு அற்புதமான பந்தை வீசி உடைத்தார்.
அதேபோல், குர்ஜப்னீத் சிங்குக்கு ஒரு மிகச் சிறந்த தொடக்கம் கிடைத்தது. ஒரு நல்ல பந்தை வீசி அக்ஷர் பட்டேல் விக்கெட்டை அவர் வீழ்த்தினார். ஆனால், அந்த விக்கெட்டுக்கான பாராட்டு சர்ஃபராஸ் கானுக்கு கிடைக்கவேண்டும். பேக்வேர்ட் பாயின்ட் திசையில் அற்புதமாக பாய்ந்து அந்த கேட்சைப் பிடித்தார். அவர் மட்டுமல்ல ஒட்டுமொத்தமாகவே சூப்பர் கிங்ஸின் ஃபீல்டிங் இந்தப் போட்டியில் நல்ல முன்னேற்றம் கண்டிருக்கிறது. காயத்திலிருந்து குணமடைந்து திரும்பிய டெவால் பிரெவிஸ் துடிப்போடு செயல்பட்டார். ஒட்டுமொத்தமாகவே அணியின் ஃபீல்டிங்கில் நல்ல வித்தியாசம் தெரிகிறது.
அந்த விக்கெட் மட்டுமல்ல அதன்பிறகும் குர்ஜப்னீத் சிங் சிறப்பாகவே பந்துவீசினார். இடது கை பேட்டர்களுக்கு பந்தை நன்கு உள்ளே எடுத்துவந்தார். கூடுதல் பவுன்ஸ் ஏற்படுத்தி சவால் கொடுத்தார். தமிழ்நாட்டுக்காக தொடர்ச்சியாக சிறப்பான செயல்பாட்டைக் கொடுத்துவந்த அவருக்கு ஒரு மிகச் சிறந்த அறிமுகம் கிடைத்திருக்கிறது.
படக்குறிப்பு, 4 ஓவர்கள் பந்துவீசிய ஓவர்டன் 18 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார் (கோப்புப் படம்)
வெற்றி நடை தொடர இது போதுமா?
சூப்பர் கிங்ஸ் அணி பல இடங்களில் முன்னேற்றம் கண்டிருக்கிறது. அது முடிவிலும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதேசமயம் இன்னும் முன்னேற்றம் காண வேண்டிய இடங்களும் நிறையவே இருக்கின்றன.
பேட்டிங்கின்போது, டெத் ஒவர்களில் அவர்கள் இன்னும் சற்று சிறப்பாக பேட்டிங் செய்திருக்கலாம். கடைசி 5 ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்களால் 52 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஒரு மிகச் சிறந்த தொடக்கம் கிடைத்த ஒரு போட்டியில், ஃபினிஷிங் இன்னும் சிறப்பாக இருந்திருக்க வேண்டும். அதேபோல் பவர்பிளே பந்துவீச்சில் இன்னுமே கூட சரியாகத் திட்டமிட்டு செயல்படலாம்.
எப்படிப் பார்த்தாலும், தொடர் தோல்விகளுக்குப் பிறகு இப்படியொரு வெற்றியைப் பார்ப்பது நன்றாக இருக்கிறது. இது அணியின் நம்பிக்கையை பன்மடங்கு அதிகரித்திருக்க வேண்டும். அவர்களுக்குத் தேவையான உத்வேகத்தை இது கொடுக்கும். இந்த நம்பிக்கை பந்துவீச்சை சற்று செம்மைப்படுத்தும் போது, இப்போது பலமடைந்திருக்கும் இந்த பேட்டிங் யூனிட் வழக்கமாக எடுப்பதைவிட 20-30 ரன்கள் அதிகமாக எடுக்கும் போது அது நிச்சயம் இவர்களை தொடர் வெற்றிகளை நோக்கி எடுத்துச் செல்லும்.
உடனே பிளே ஆஃப் சுற்றுக்குப் போய்விடுவார்கள் என்றெல்லாம் சொல்லவில்லை. ஆனால், தொடர்ந்து அசத்தலான செயல்பாட்டை சென்னை சூப்பர் கிங்ஸ் சீராகக் கொடுக்க முடியும். அதற்கு இந்தப் போட்டி ஒரு நம்பிக்கை கொடுத்திருக்கிறது.
(இந்தக் கட்டுரையை எழுதிய வித்யுத் சிவராமகிருஷ்ணன், தமிழ்நாடு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்காக விளையாடியிருக்கிறார். 2000-ல்19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இவர் இடம்பெற்றிருந்தார். தற்போது வர்ணனையாளராக இருக்கிறார்.)
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
