2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் இளைஞர்கள், பெண்களின் வாக்குகளை அறுவடை செய்வதற்கு அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. மேலும் சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்தும் முதல் முறை வாக்காளர்களின் வாக்குகளும் பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
தமிழக பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை
எஸ்.ஐ.ஆருக்கு பின்னர் மீண்டும் நடத்தப்பட்ட வாக்காளர்கள் சேர்ப்பு முகாம் மூலம் மொத்தம் 5.73 கோடி வாக்காளர்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. அதில் 2,80,30,658 பேர் ஆண்கள், 2,93,04,905 பேர் பெண்கள். அதாவது பெண் வாக்காளர்கள் அதிகமிருக்கிறது. எனவே இவர்கள் வெற்றியை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிப்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
சாதி,மதங்களை கடந்து விஜய்க்கு ஆதரவு இருக்கு! Part 1|Complete analysis on #tvkvijay Impact!
2026 தேர்தலில் மாற்றத்தை விதைக்கும் வாக்குகள்
இதுதொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் அவர் விவாதம் ஒன்றில் பேசும் போது, பெண்களை கவருவதற்காக தான் அனைத்து நலத்திட்டங்களையுமே அறிவிக்கிறோம். பெண்கள் முடிவெடுத்து விட்டால் நிச்சயம் மாற்றத்தை எதிர்பார்க்கலாம். குறிப்பாக குடும்ப வாக்குகளை தீர்மானிப்பதில் பெண்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. இந்த தேர்தலை பொறுத்தவரை பெண்களின் வாக்குகள் அனைத்து கட்சிகளுக்கும் கிட்டதட்ட சமமாக தான் போகும்.
| வ.எண் | கட்சிகள் | 2026 தேர்தல் களம் |
| 1 | அதிமுக | அதிமுகவிற்கு ஜெயலலிதா காலத்தில் இருந்தே பெண்களின் வாக்குகள் கிடைத்துள்ளன. தற்போது கூட ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10,000 ரூபாய் வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்தது பெண் வாக்காளர்களை குறிவைத்து தான். |
| 2 | திமுக | தற்போது அதிமுகவிற்கான பெண்களின் வாக்குகள் திமுகவிற்கும் சேர்ந்து தான் பகிரப்படுகின்றன. அதற்கு காரணம், திமுக அறிவித்துள்ள பல நலத்திட்டங்கள். 1,000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயணம், புதுமைப் பெண், காலை சிற்றுண்டி திட்டம் உள்ளிட்டவற்றை உதாரணமாக சொல்லலாம். இந்த தேர்தலில் 8,000 ரூபாய் கூப்பன் பெரிதும் பேசுபொருளாக மாறியுள்ளது. இது பெண்கள் வாக்காளர்களை கவரும் யுக்தியாக தான் பார்க்க வேண்டியிருக்கிறது. |
| 3 | தவெக | தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு பெண்களின் ஆதரவு அதிகம் இருக்கிறது. அதிலும் 30 வயதுக்கு கீழே உள்ள பெண்களின் ஆதரவை களத்தில் பார்க்கலாம். வாக்குகளாக எதிரொலிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். |
| 4 | நாம் தமிழர் | நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு பெண்களின் ஆதரவு குறைவாக இருப்பதாக தெரிகிறது. |
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் என்பது விஜய் வருகையால் பெரிதும் கவனம் பெற்றிருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் களமே மாறியிருக்கிறது. இவருக்கான பெண்கள், இளைஞர்கள் முதல் முறை வாக்காளர்கள், மாற்று அரசியலை முன்னெடுக்க விரும்பும் வாக்காளர்கள் உள்ளிட்டோர் விஜய் பக்கம் நகர்வதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால் விஜய்யின் பரப்புரை பயணங்கள், திட்டமிடல்களில் நிறைய கோளாறுகள் உள்ளன.
பரப்புரை களத்தில் சொதப்பும் விஜய்
ஒருபுறம் தங்களை பரப்புரை மேற்கொள்ள விடாமல் திமுக உள்ளிட்ட கட்சிகள் மறைமுக சதி செய்கின்றன. அதிகாரிகள் உடன் சேர்ந்து கொண்டு தடுக்க பார்க்கின்றனர் என்றெல்லாம் குற்றம்சாட்டுகின்றனர். மறுபுறம் இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்த பரப்புரை கூட்டங்களை ரத்து செய்து விட்டு செல்கின்றனர். இதற்கான காரணம் என்னவென்றே புரியவில்லை. இத்தகைய செயல்பாடுகள் விஜய் வருவார் என்று எதிர்பார்த்து காத்திருந்த பெண் வாக்காளர்களுக்கு ஏமாற்றத்தை தரும்.
மே 4 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்
மேலும் விஜய்யை பெரிதும் நம்புகிறோம். ஆனால் அந்த நம்பிக்கைக்கு உரியவராக இல்லை என்ற எண்ணத்தை விதைப்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்தி தந்துவிடும். எல்லாவற்றுக்கும் மேலாக விஜய்யின் இத்தகைய செயல்பாடுகளால் பெண்களின் வாக்குகளை குறைக்குமோ எனத் தோன்றுகிறது. எனவே மே 4ஆம் தேதி உடையப் போகும் சஸ்பென்சை பொறுத்திருந்து பார்க்கலாம் என்றார்.
