விசாரணை கைதியாக 6 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த நபர்: சுப்ரீம் கோர்ட்டு எடுத்த அதிரடி முடிவு

புதுடெல்லி,

ஆள் கடத்தல் & கொலை வழக்கில் கைதாகி, எவ்வித விசாரணையும் இன்றி 6 ஆண்டுகள் சிறையில் இருந்தவரை விடுதலை செய்தது சுப்ரீம் கோர்ட்டு. மேலும், உத்தரப் பிரதேச அரசு அவருக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு அளிக்க உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், ஆக்ரா மாவட்டத்தில் பதிவான கடத்தல் மற்றும் கொலை வழக்கில் அருண் என்ற தீபக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 2019 முதல் விசாரணை கைதியாக அவர் சிறையில் உள்ளார்.

இந்நிலையில் இந்த ஆண்டு மார்ச் மாதம் அவரது ஜாமீன் மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, வழக்கை 3 மாதங்களுக்குள் முடிக்க கிழமை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது. அதன்படி கீழமை நீதிமன்றத்தில் விசாரணை சூடுபிடித்தது. இந்த விசாரணையின் முடிவில், அவர் மீது குற்றச்சாட்டுகளுக்கு எந்த வித ஆதாரமும் இல்லாததால் அவர் நிரபராதி என்ன தீர்ப்பளித்து சுப்ரீம் கோர்ட்டு விடுதலை செய்தது. நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கில் காவல்துறை மற்றும் அரசு தரப்பு செயல்பட்டை அடுக்கடுக்கான விமர்சனங்களுடன் கண்டித்து உள்ளது.

வெறும் யூகங்களின் அடிப்படையில், ஜோடிக்கப்பட்ட ஒரு கதையை நம்பி ஒரு தனி மனிதனின் வாழ்க்கையில் இருந்து 6 பொன்னான ஆண்டுகள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளன. அடிப்படை புலனாய்வு கூட இந்த வழக்கில் செய்யப்படவில்லை என்று நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

எப் ஐ ஆர் அல்லது புகார் தாரரின் வாக்குமூலத்தில் இந்த நபரின் பெயரே இல்லை. தெளிவற்ற சிசிடிவி காட்சிகள் மற்றும் சக கைதிகளின் வாக்குமூலத்தை மட்டுமே கொண்டு காவல்துறை இவரை சித்தரவதை செய்திருக்கிறது. மேலும், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மின்னணு ஆதாரங்களுக்கு தேவையான சட்டபூர் சான்றுகளும் இணைக்கப்படவில்லை. எனவே உத்திரபிரதேச அரசு, பாதிக்கப்பட்ட நபருக்கு ஒரு மாத காலத்திற்குள் ரூ. 6 லட்சம் வழங்க வேண்டும். தவறினால் அதற்கு 18 சதவீதம் வட்டி சேர்த்து வழங்க வேண்டும் எனவும் கோர்ட்டு எச்சரித்துள்ளது.

புலனாய்வு மற்றும் அரசு தரப்பு முகமைகள், குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தருவதை மட்டுமே நோக்கமாக கொண்டிருக்கக் கூடாது. குற்றம் நிரூபிக்கப்படும் வரை அனைவரும் நிரபராதிகள் என்பதை உணர வேண்டும். எனவே, உத்தர பிரதேச காவல் துறை, தங்களது அதிகாரிகளுக்கு சரியான முறையில் புலனாய்வு செய்வது எப்படி என கல்வி கற்பிக்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறியிருக்கின்றனர்.

இந்த தீர்ப்பின் நகலை, உத்தரப்பிரதேச மாநிலத்தின் உள்துறை செயலாளர் மற்றும் காவல்துறை தலைமை இயக்குனர் ஆகியோருக்கு உடனடியாக அனுப்பி வைக்கவும் கோர்ட்டு உத்தரவிட்டது.

Source link