வேகம் குறைந்த அர்னாப் புயல்: நவம்பர் 1-ந் தேதிக்குப் பிறகே தமிழகத்தில் மழை..!

சென்னை,

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள அர்னாப்புயல் நாளை ஆத்திராவை தாக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. புயல் வடக்கே அமைத்துள்ளதால் தமிழ்நாட்டில் மழை ஓய்ந்து விட்டது. இனி நவம்பர் 1-ந் தேதிக்குப் பிறகே மீண்டும் மழை தொடங்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

பலத்த மழை

இந்த ஆண்டுக்கான வட கிழக்கு பருவமழை அக்டோபர் 15-ந் தேதி தொடங்கியது. அந்த சமயத்தில் வங்கக்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவியது. இதனால் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்தது. அதன் பிறகு வங்கக்கடலின் தென்மேற்குப் பகுதியில் குறைந்த காற்றழுத்தம் உருவானது. இது வலுப்பெறாமலேயே கரைந்து போனது.

அதன் பிறகு வங்கக்கடலில் அந்தமான் தீவுக்கருகே புயல் சின்னம் உருவானது. அதேநேரத்தில் அரபிக்கடலிலும் குறைந்த காற்றழுத்தம் உருவானது. இது வங்கக்கடலை நோக்கி நகர்ந்தது. இதனால் தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சிமலையில் பலத்த மழை பெய்தது.

புயல்

இதனால்தான் ஊட்டி, கொடைக்கானல் ஆகிய இடங்களில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டன. நீலகிரி மலையில் மட்டும் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. பஸ் மீது மண் சரிந்ததில் ஓட்டுநரும் பலியானார்.

இந்த நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்தம் தொடர்த்து வலுப்பெற்று நேற்று புயலாக மாறியது. இதனால் அமைதியாக இருந்த காற்றழுத்தம் வேகமாக சுழலத் தொடங்கியது. ஆகவே அதை நோக்கி வங்கக்கடல், இந்தியப் பெருங்கடல், அரபிக்கடல் ஆகியபகுதிகளில் உள்ள ஈரக் காற்று பாயத் தொடங்கியது.

வெயில் முகம்

இதன் காரணமாக தமிழ்நாட்டில் மேகக்கூட்டம் மறைந்து மழை குறையத் தொடங்கியது. நேற்று மாலைக்குப் பிறகு தமிழகத்தில் எந்தப்பகுதியிலும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய அளவுக்கு மழை இல்லை. இன்று பெரும்பாலான பகுதிகளில் வெயில் முகம் காட்டத் தொடங்கிவிட்டது.

இது ஒருபுறம் இருக்க அர்னாப் புயல் மேலும் வலுவடைந்து அதி தீவிரமாக மாறி உள்ளது. புயலின் நடுப்பகுதி கண் என அழைக்கப்படும். அங்கு காற்றின் சுழற்சி அதிகம் இருக்காது. ஆனால் வெளிப்புற வட்டத்தில் காற்றின் சுழற்சி வேகம் அதிகமாக உள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் மணிக்கு 100 முதல் 110 கி.மீ. வேகத்தில் உள்ளது. இந்தப்புயல் நாளை முற்பகலில் ஆந்திராவில் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அப்போது காற்றின் வேகம் 140 கி.மீ. அளவிற்கும் செல்லும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மீண்டும் ஒரு புயல் சின்னம்

இந்த அசுரவேகத்தில் பூமியை கடக்கும்போது சேதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே ஆந்திர அரசு அதை சமாளிக்க தயார் நிலையில் உள்ளது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அமைதியான நிலை ஏற்பட்டுள்ளது. அர்னாப் புயல் கரையை கடந்து ஈரப்பதத்தை இழந்து முற்றிலுமாக கரைந்த பிறகே மீண்டும் வடகிழக்கு பருவக் காற்று வழக்கமான திசைக்கு திரும்பும். அதன்பிறகே தமிமுகத்தில் மீண்டும் மழை புத்துயிர் பெறும்.

அந்த வகையில் நவம்பர் 1-ந் தேதிக்குப் பிறகே மழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அந்த சமயத்தில் மீண்டும் ஒரு புயல் சின்னம் உருவாக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வங்கக் கடலில் நிலைக் கொண்டுள்ள அர்னாப் புயலின் வேகம் தற்போது குறைந்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன்படி அர்னாப் புயல் 20 கி.மீ. வேகத்தில் இருந்து 18 கி.மீ. வேகமாக குறைந்துள்ளது.

Source link